விரும்பிய நகரில், காரோட்டியபடி பாட்டு கேட்க உதவும் தளம்
கொரோனா சூழல், நினைத்த நேரத்தில் வெளியே செல்வதையே கடினமான விஷயமாக்கி விட்டது. அப்படியிருக்க, நினைத்த நேரத்தில் விரும்பிய நகரில் பாட்டு கேட்டபடி காரோட்டிச் செல்ல முடிந்தால் எப்படி இருக்கும்?
’டிரைவ் & லிஸின்’ (https://driveandlisten.herokuapp.com/) இணையதளம் இதை சாத்தியமாக்குகிறது. அதாவது, விரும்பிய நகரில் பாட்டு கேட்டுக்கொண்டே காரோட்டிச் செல்லும் அனுபவத்தை பெறுவதை சாத்தியமாக்குகிறது. அதெப்படி சாத்தியம் எனும் கேள்விக்கு விடைக்காண இந்த தளத்திற்கு சென்று பார்க்க வேண்டும்.
இந்த தளத்தில் நுழைந்ததுமே, அந்த கால தூர்தர்ஷன் ’தடங்களுக்கு வருந்துகிறேன்’ காட்சி போன்ற கருப்பு வெள்ளை புள்ளிகள் திரை முழுவதும் சில நொடிகள் தோன்றும். அதன் பிறகு, திரையில் ஒரு நகரின் சாலைக் காட்சி விரியத்துவங்கும். காரோட்டிச்செல்லும் போது, நகர சாலை நம் முன் நீளும் சாலையை பார்ப்பது போல, இப்போது நம் கம்ப்யூட்டர் திரையிலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
காரோட்டிச்செல்லும் போது டாஷ்போர்டு காமிராவில் இருந்து எடுக்க்கப்பட்ட காட்சிகள் இவை. யூடியூப்பில் இருந்து குறிப்பிட்ட நகருக்கான டாஷ்போர்டு காட்சியை நம் பார்வைக்கு வைக்கிறது இந்த தளம். மேலும், குறிப்பிட்ட அந்த நகரின் உள்ளூர் வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகும் பாடலையும் கேட்டபடி இந்த காட்சியை பார்க்கலாம்.
ஆக, நகரத்து சாலையில் பாட்டு கேட்டபடி காரோட்டிச்செல்லும் அனுபவத்தை பெறலாம்.
இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் இந்திய நகரான மும்பை உள்ளிட்ட நாற்பதுக்கும் மேலான உலக நகரங்களில், இசை கேட்டபடி காரோட்டிச் செல்லும் அனுபவத்தை இந்த தளம் மூலம் பெறலாம். தேவை எனில், பாடல்களுக்கு பதில், சாலையோர ஒலிகளை கேட்டபடி பயணிக்கலாம்.
ஜெர்மனியின் முனிச் நகரில் முதுகலை பட்டம் பயிலும், இர்கம் சேகர் (Erkam Şeker, ) எனும் துருக்கி நாட்டு வாலிபர் இந்த சேவையை உருவாக்கியுள்ளார்.
கொரோனா முடக்கத்திற்கு மத்தியில், தனது சொந்த நகரமான இஸ்டான்புல் நகரின் தினசரி வாழ்க்கையை தவறவிடுவதாக உணர்ந்தவர், யூடியூப்பில் நகரின் சாலை போக்குவரத்து காட்சிகளை பார்வையிடுவதன் மூலம் ஆசுவாசம் பெற்றிருக்கிறார். உடனே, உள்ளூர் வானொலி பாடல்களை கேட்டபடி இப்படி காரோட்டிச்செல்ல முடிந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.
தான் மட்டும் அல்ல, உலகில் உள்ள மற்றவர்களும் இப்படி சொந்த நகர பயண அனுவவத்தை இழந்து தவிப்பார்கள் என நினைத்த இர்காம், அவர்களுக்கு எல்லாம் ஆசுவாசம் அளிக்கும் வகையில், மெய்நிகர் பயண அனுவவத்தை வழங்கும் வகையில், யூடியூப் டாஷ்கேம் காட்சிகள் மற்றும் உள்ளூர் வானிலி நிகழ்ச்சிகளை இணைத்து, பாட்டு கேட்டபடி காரோட்டிச்செல்லும் அனுபவத்தை பெறும் வகையில் இந்த தளத்தை அமைத்தார். ( செய்தி- லோன்லி பிளானட் )
பார்வையாளர்கள் இதில் தாங்கள் விரும்பும் நகரை தேர்வு செய்து, அந்த நகரின் சாலையில் பயணிக்கலாம்.
இந்த தளம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும், பலரும் தங்களை தொடர்பு கொண்டு, இதற்கு தாங்கள் எந்த வகையில் உதவ முடியும் என கேட்பதாகவும் இர்காம் கூறுகிறார். இதனையடுத்து பார்வையாளர்கள் தங்கள் நகர் டேஷ்கேம் காட்சிகளை சமர்பிக்கும் வசதியையும் உண்டாக்கியிருக்கிறார்.
கொரோனா ஏற்படுத்தியிருக்கும் புதிய இயல்பு நிலையை எதிர்கொள்ள உதவும் சுவாரஸ்யமான இணையதளமாக இது அமைகிறது.