நெட்பிளிக்சில் படம் பாருங்கள்- உலகெங்கும் மரம் நடுங்கள்!
பிளாண்டிபிளிக்ஸ் (https://www.plantyflix.com/) தளத்தை நம்மவர்கள் எந்த அளவு ரசிப்பார்கள் என்ற்ய் தெரியவில்லை. ஏனெனில், இந்த தளம் நெட்பிளிக்சில் படம் பார்க்க இரு மடங்கு செலவிடச்சொல்கிறது. ஆனால், அதில் ஒரு மடங்கு உலக நன்மைக்காக என்பதால், இந்த தளத்தை பொருட்படுத்த வேண்டியிருக்கிறது.
நம்மவர்கள் ஸ்டிரீமிங் யுகத்திற்கு பழகிவிட்டதால், நெட்பிளிக்ஸ் தளம் பற்றி தனியே அறிமுகம் தேவையில்லை. எனவே, நெட்பிளிக்ஸ் சார்ந்த துணை தளங்கள் மீதும் அவர்களுக்கு ஆர்வம் இருக்கும். அதாவது, நெட்பிளிக்சில் திரைப்படம் பார்ப்பதை மேம்படுத்தும் அல்லது மேலும் எளிமையாக்கும் சேவைகள்!.
பிளாண்டிபிளை தளமும், நெட்பிளிக்ஸ் சார்ந்த துணை சேவை தான் என்றாலும், இந்த தளம் நெட்பிளிக்சில் படம் பார்ப்பதற்கும் கார்பன் எனப்படும் கரியமில வாயு உற்பத்திக்கும் முடிச்சு போடுகிறது. இந்த தளத்தின் நோக்கமும் அது தான்.
ஆம், நெட்பிளிக்சில் படம் பார்ப்பது என்பது காரோட்டிச்செல்வதற்கு சமமானது என்கிறது இந்த தளம். எப்படி? காரோட்டும் போது வெளியாகும் புகையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுவது போன்ற பாதிப்பு, இணையத்தில் ஸ்டிரீமிங் செய்யும் போதும் ஏற்படுவதாக இந்த தளம் சொல்கிறது.
ஸ்டிரீமிங் என்றில்லை, இணையம் மூலம் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான சேவைகள் ஏகத்திற்கு எரிசக்தியை பயன்படுத்துவதாக இருக்கின்றன. உதாரணத்திற்கு கூகுள் திறம்பட தேடல் முடிவுகளை வழங்குவதற்காக நம்பியிருக்கும் டேட்டா செண்டர்களையும், அமேசான் அல்லது ஆப்பிள் வழங்கும் கிளவுட் சேவைகளுக்கான உள்கட்டமைப்பையும் இயக்க பெரும் மின்சக்தி தேவைப்படுகிறது.
இப்படி டேட்டா செண்டர்கள் குடிக்கும் மின்சக்தியை உற்பத்தி செய்ய தேவைப்படும் படிம எரிபொருளை கணக்கில் எடுத்துக்கொண்டால், இவற்றின் செயல்பாட்டால் வெளியாகும் கார்பன் அளவையும் எளிதாக கணக்கிட்டலாம்.
எனவே தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்களும் இணைய சேவைகளால் மறைமுகமாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.
ஆக, காரோட்டுவதால் மட்டும் கார்பன் வெளியாகி சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. நெட்பிளிக்சில் படம் பார்த்தாலும், கண்ணுக்குத்தெரியாத வகையில் சுற்றுச்சூழல் மாசாகிறது. அதற்காக நெட்பிளிக்சில் படம் பார்ப்பதை நிறுத்திவிட வேண்டுமா? இல்லை. படம் பாருங்கள், மரமும் நடுங்கள் என்கிறது பிளாண்டிபை இணையதளம்.
நெட்பிளிக்சில் படம் அல்லது இணைய தொடர்களை பார்ப்பதால் ஏற்படும் கார்பன் வெளியேற்றத்தை உதாரணமாக காண்பிக்கும் இந்த தளம், இதை ஈடு செய்யும் வகையில், நெட்பிளிக்சில் படம் பார்க்கும் நேரத்திற்கு ஏற்ப, இந்த தளத்தில் உள்ள மரம் நடும் திட்டத்தை தேர்வு செய்து கட்டணம் செலுத்த கோருகிறது. நீங்கள் செலுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப, உலகில் பல்வேறு பகுதிகளில் மரம் நடப்படுகிறது. இதற்காக, ஈடன் ரைன்பாரஸ்டேஷன் பிராஜக்ட் எனும் அமைப்புடன் கைகோர்த்துள்ளது.
நெட்பிளிக்சில் படம் பார்ப்பவர் என்றால் இந்த தளத்திற்கு சென்று பாருங்கள். அதோடு, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட சேவையில் படம் பார்க்கும் வழக்கம் கொண்ட நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள். உலகை காக்க நம்மால் இயன்ற முயற்சியாக இருக்கட்டும்!
-
இணைய மலரை ஆர்வம் உள்ள நண்பர்களுடன் பகிருங்கள்…
-