நிறுவனர் கதை கேளுங்கள் (சொல்லுங்கள்)
பாலுமகேந்திராவின் கதை நேரம் தொடரை நினைவுபடுத்தும், ’நிறுவனர் நேரம்’ எனும் பெயர் நன்றாக இருக்கிறது அல்லவா? பெயர் மட்டும் அல்ல, இதன் பின்னே உள்ள கருத்தாக்கமும் நன்றாக தான் இருக்கிறது.
நிறுவனர் நேரம் என்றால், நிறுவனர்களுடனான நேர்காணல் நேரம் என புரிந்து கொள்ளலாம்.
திரைப்பட இயக்குனர்கள் போல, நிறுவனர்கள் என கம்பீரமாக குறிப்பிடப்படுபவர்கள் யார் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். வளரிளம் நிறுவனங்கள் என கொள்ளப்படும் ஸ்டார்ட் அப்களை துவக்கி நடத்துபவர்கள் நிறுவனர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களில் பலர் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றனர். இன்னும் பலர் தங்களுக்கான பரப்பில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருகின்றனர்.
வழக்கமான பாதையில் இருந்து விலகி தங்களுக்கான புதிய பாதை கண்டவர்கள் என்பதால் நிறுவனர்களிடம் எப்போதும் அனுபவ கதைகள் ஆயிரம் இருக்கும்.
ஸ்டார்ட் அப் நிறுவனர்களின் வெற்றிக்கததைகளை பதிவு செய்யும் பலவிதமான இணையதளங்கள் எண்ணற்றவை இருக்கின்றன. இவற்றில் விளம்பர நெடி அடிக்கும் மற்றும் வெற்றிக்கதைகளை மட்டும் மேலோட்டமாக பேசும் தளங்களை தவிர்த்துவிட்டு அசலான அனுபவ பகிர்வுகளை அளிக்கும் தளங்களை தேடி கண்டறிய வேண்டும்.
இதே பாணியில் ஸ்டார்ட் அப் நிறுவனர்களுடன் உரையாடி அந்த அனுபவங்களை ஒலி வடிவில் பகிர்ந்து கொள்ளும் பாட்காஸ்டிங் நிகழ்ச்சுகளும் பல இருக்கின்றன. இந்த வரிசையில் தான் மேலே சொன்ன நிறுவனர் நேரம் (https://www.thefounderhour.com/ ) வருகிறது.
நிறுவனர்கள் மட்டும் அல்ல, எதிர்காலத்தை வடிவமைத்துக்கொண்டிருக்கும் உருவாக்குனர்கள், தொழில்முனைவோர்கள் ஆகியோரின் ஊக்கம் அளிக்கும் கதைகளை வழங்கும் பாட்காஸ்ட் என வர்ணித்துக்கொள்ளும் இந்த பாட்காஸ்டிங் நிகழ்ச்சியை பேட்ரிக் டனாஹன், நெர்சஸ் போஷியான் ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான இணையதளத்தின் முகப்பு பக்கம் நேர்த்தியாக இருக்கிறது. இப்போதைய பாட்காஸ்ட்டில் இடம்பெறும் நிறுவனரின் படத்துடன் அவரைப்பற்றிய சுருக்கமான அறிமுகம் இடம்பெறுகிறது. இதே போல முந்தைய நேர்காணல்களில் பங்கேற்றவர்களின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. விரும்பிய நிகழ்ச்சியை கிளிக் செய்து கேட்கலாம். இந்த தளத்தில் கேட்பது தவிர, ஸ்பாட்டிபை மற்றும் ஆப்பிள் பாட்காஸ்ட் வழியேவும் கேட்கலாம்.
இந்நிகழ்ச்சிக்கான இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கமும் இருக்கிறது.
நிறுவனர்களின் கதைகளை கேட்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளத்தை குறித்து வைத்துக்கொள்ளலாம்.
எல்லாம் சரி, இந்த தளம் அமெரிக்க நிறுவனர்களைப்பற்றி அல்லவா பேசுகிறது என அலுத்துக்கொள்பவர்கள், நம்மூர் நிறுவனர்களுக்கான பாட்காஸ்டிங் நிகழ்சியை துவக்குவது பற்றி யோசிக்கலாம். நிறுவனர்கள் என்றில்லை, இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், சாமானியர்கள் என யாருடன் வேண்டுமானாலும் பேசி அனுபவங்களை வெளிக்கொணரலாம். அதற்கு தேவையான ஊக்கத்தை அளிப்பதோடு, பாட்காஸ்டிங் நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஊக்கம் அளிக்கும் அருமையான இடைமுகத்தையும் இந்த தளம் பெற்றுள்ளது.