உங்கள் ஜூம் கூட்டத்தில் ஒரு ’மென்’ தாக்குதல்
ஸ்வீட்பார்ம் (https://www.sweetfarm.org/) என்றொரு அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகின் முதல் லாப நோக்கில்லாத சரணாலயம் என வர்ணித்துக்கொள்ளும் இந்த அமைப்பு, பண்ணை விலங்குகளை மீட்பது, நீடித்த வளரர்ச்சி, தாவிர உணவு என்றெல்லாம் பேசுகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு ஈர்ப்புடையது என்று தெரியவில்லை ஆனால், இந்த அமைப்பு அறிமுகம் செய்திருக்கும் இணைய உத்தி ஒன்று மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
ஜூம் வீடியோ சந்திப்புகளுக்கு பண்ணை விலங்குகளை அனுப்பி வைப்பது தான் அந்த உத்தி.
கொரோனா கால முடக்கத்தில் ஜூம் வீடியோ சந்திப்புகள் பிரபலமாக இருக்கின்றன. அதே நேரத்தில், எதற்கெடுத்தாலும் வீடியோ சந்திப்புகள் என்பதால், பலரும் ஒருவித களைப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
ஆனால், அலுவல் சார்ந்த பணிகளுக்கு வீடியோ சந்திப்புகளை தவிர்ப்பதற்கில்லை. அதற்காக வீடியோ சந்திப்புகளை அலுப்பூட்டக்கூடியதாகவே வைத்திருக்க வேண்டுமா என்ன? ஜூம் வழி வீடியோ சந்திப்புகளை இடையிடையே கொஞ்சம் உற்சாகம் உள்ளதாகவும் மாற்றலாம் அல்லவா?
ஸ்வீட்பார்ம், இப்படி உற்சாகம் அளிப்பதற்காக தான் உங்கள் ஜூம் கூட்டங்களுக்கு நடுவே பண்ணை விலங்குகளை அனுப்பி வைப்பதாக கூறுகிறது.
ஜூம் கூட்டங்களுக்கு நடுவே சிறிது உற்சாகம் அல்லது கேளிக்கை தேவைப்படும் போது, இந்த தளத்தில் கோட்-2-மீட்டிங் வசதியை நாடினால், தங்கள் பண்ணை சார்பில் ஒரு மெய்நிகர் விலங்கை அனுப்பி வைக்கிறது. அந்த விலங்கு ஜூம் கூட்டத்தில் பங்கேற்று, பண்ணை பற்றி விளக்கம் அளிப்பதோடு, கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது.
இந்த சேவைக்கு நன்கொடை வடிவில் கட்டணமும் செலுத்த வேண்டும்.
ஜூம் சந்திப்பு பிரபலமாக இருக்கும் சூழலில், ஜூம் சந்திப்பு சார்ந்த களைப்பை குறி வைத்து உருவாக்கப்பட்ட இந்த சேவை ஸ்வீட் பார்ம் பற்றி ஆர்வத்தை ஏற்படுத்துகிறது அல்லவா!
-
இதே போலவே ஜூம் கூட்டத்தில் மென் தாக்குதல் நடத்தும் வகையில் இன்னொரு சுவாரஸ்யமான சேவையும் உருவாக்கப்பட்டுள்ளது. இன்வைட் ரிக் (https://inviterick.com/) எனும் அந்த தளம், ஜூம் கூட்டத்தின் நடுவே ரிக் எனும் ராக் பாடகரை அனுப்பு வைப்பதாக சொல்கிறது.
ஜூம் கூட்டம் அலுத்துப்போகும் நேரத்தில், இப்படி ராக் பாடகரை ஜூம் திரையில் வர வைத்தால், சந்தோஷ ரகளையாக இருக்கும் என்கிறது இந்த தளம்.
ஜூம் சந்திப்பு அறைக்குள் இப்படி அழையா விருந்தாளியாக நுழைவதற்கு ஜூம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், தற்காலிகமாக சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-