இணைய கிளர்ச்சியாளர்களுக்கான தேடியந்திரம்!
கட்சி அபிமானம் இல்லாத வாக்காளர்களைப்போன்றவர்கள் விண்டோஸ் பயனாளிகள். தாங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் மீது அவர்களுக்கு பெரிய அளவில் பற்று இருக்க வாய்ப்பில்லை. ஆனால், மேக் பிரியர்கள் அப்படி இல்லை. ( லினக்சாளர்களும் தான்). மேக் பயனாளிகள், தீவிர கட்சி அபிமானம் மிக்க வாக்களர்களைப்போன்றவர்கள்.
என் கட்சி, அதன் கொள்கை என கட்சி வாக்காளர்கள் தனிப்பட்ட பினைப்பும், பற்றுதலும் கொண்டிருப்பது போல, மேக் பயனாளிகள் தங்கள் கம்ப்யூட்டர் மீது தனி அபிமானம் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் ஒரு சிலர் பழைய மேக் கம்ப்யூட்டர்களை தூக்கியெறிய மனசில்லாமல், அவற்றை தொடர்ந்து பயன்படுத்த முற்படலாம்.
இன்னும் சிலர், பழைய மேக் கம்ப்யூட்ட்ர்களை தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் மீட்டெடுப்பதிலும் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இந்த வகை கம்ப்யூட்டர்களை விண்டேஜ் கம்ப்யூட்டர்கள் என்று கொண்டாடுகின்றனர்.
இத்தகைய பாரம்பரிய கம்ப்யூட்டர்களை மீட்டெடுப்பதில் உள்ள சிக்கல்களை விட, அவற்றுக்கான மென்பொருள்களை கண்டறிவது தான் இன்னும் சவாலானது. ஏனெனில், மென்பொருள்களின் சமீபத்திய வடிவம், இப்போதைய கம்ப்யூட்டர்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவை என்பதால், பழைய கம்ப்யூட்டர்களில் செயல்படக்கூடிய மென்பொருள்களையும், சேவைகளையும் கண்டறிவது கடினமானது.
அதற்காக புலம்பிக்கொண்டிருக்க முடியுமா என்ன? பழைய கம்ப்யூட்டர்களுக்கு ஏற்ற மென்பொருள் வடிவங்களை நாமே உருவாக்கி கொள்ள வேண்டியது தான். இத்தகைய மென்பொருளாலர்களை இணைய கிளர்ச்சியாளர்கள் என வர்ணிக்கலாம்.
இந்த இணைய கிளர்ச்சியாளர்களுக்கு என்றே பிரத்யேகமாக ஒரு தேடியந்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா?
பிராக்பைண்ட் (http://frogfind.com/) என்பது அந்த தேடியந்திரத்தின் பெயர்.
பழைய கம்ப்யூட்டர்களுக்கான தேடியந்திரம் என இது வர்ணிக்கப்படுகிறது. அதாவது பழைய மேக் வகை கம்ப்யூட்டர்களில் இருந்து இணைய தேடலை மேற்கொள்ள வழி செய்கிறது.
பெரும்பாலான சமகால இணையதளங்கள் ஜாவா ஸ்கிரிப்ட், சிஎஸ்.எஸ் , என்கிரிப்ஷன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருக்கின்றன. தேடியந்திரங்களும் இந்த வகை தளங்களை பட்டியலிடும் அளவுக்கு மேம்பட்டிருக்கின்றன.
ஆனால் இந்த தளங்கள் பழைய கம்ப்யூட்டர்களில் தோன்றுவதில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. அதனால், தான் இணையதளங்களை எல்லாம் பழைய எச்.டி.எம்.எல் வடிவில் அணுக கூடியதாக, அவற்றின் நவீன தொழில்நுட்ப அம்சங்களை எல்லாம் உருவி அடிப்படையான வடிவில் இந்த தேடியந்திரம் அணுக வழி செய்கிறது.
ஆக, பழைய மேக் வகை கம்ப்யூட்டர்களில் இருந்து இந்த தேடியந்திரம் மூலம் நவீன இணையத்தை அதன் பழைய வடிவில் அணுகலாம்.
இணையம் வளர்ந்து கொண்டே இருக்கலாம். தொழில்நுட்ப மாற்றங்களும் முன்னேற்றங்களும் தவிர்க்க இயலாதது தான். அதற்காக பழைய கம்ப்யூட்டர்களை தூக்கி வீச மட்டும் தான் செய்ய வேண்டும்,. அவற்றை பயன்படுத்த நினைத்தால், இணையத்தை அதற்கேற்ப வளைய வைக்க முடியாதா என்ன? இப்படி கேட்க வைத்து பழைமை பிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது பிராக்பைண்ட் தேடியந்திரம்.
தேடல் முடிவுகளில் இடம்பெறும் புதிய இணையதளங்களை உருவி, அவற்றின் அடிப்படையான வடிவை தருகிறதே த்தவிர, இந்த தேடியந்திரம் மூல தேடலை வழங்கவில்லை. கூகுளுக்கு மாற்றாக கருதப்படும் டக்டக்கோ தேடியந்திரத்தை கொண்டே இது தேடல் முடிவுகளை வழங்குகிறது.
டக்டக்கோவை பயன்படுத்துவதாலேயே இந்த தேடியந்திரம் எனக்கு இன்னும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடித்திருந்தால் சீன்.ஏகேஏ என அறியப்படும் யூடியூபாளருக்கு வாழ்த்து சொல்லுங்கள், அவர் தான் இந்த தேடியந்திரத்தை உருவாக்கியுள்ளார்.
-