இலவசமாக படம் பார்க்க உதவும் இணையதளம்
ஒன்ஸ்டிரீம்.டிவி (https://onestreamtv.com/ ) இணையதளத்தை பார்க்கும் போது, ஆஹா என்ன அருமையான இணையதளம் என்று தோன்றும். ஆனால், பயன்படுத்திப்பார்க்கும் போது, அடடா நமக்கு பயனில்லாமல் இருக்கிறதே என ஏமாற்றமாக இருக்கும். என்ன காரணம் என்பதை பார்க்கலாம்.
ஸ்டீரிமிங் முறையில் திரைப்படம், திரைத்தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை இணையம் வழியே பார்க்க உதவும் ஓடிடி சேவைகள் எண்ணற்றவை இருப்பதை நீங்கள் அறியலாம். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி, ஹாட்ஸ்டார் என நீளும் இந்த பட்டியலில் வரும் ஸ்டீரிமிங் சேவைகளில் பார்க்க கூடிய படங்கள், நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்தளிக்கும் திரட்டி தளங்களும் பல இருக்கின்றன. ( இந்த பட்டிலைய தனியே பார்க்கலாம்.)
ஒன்ஸ்டிரீம்.டிவி தளமும் இதே போன்ற திரட்டி தளம் தான். ஆனால் இதில் என்ன தனித்தன்மை என்றால், ஓடிடி தளங்களில் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பார்க்க கூடிய படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை இந்த தளம் தொகுத்தளிக்கிறது.
பொதுவாக ஓடிடியில் படம் பார்ப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, எத்தனை சேவைகளுக்கு தான் கட்டணம் செலுத்துவது என்பதாகும். இதற்கு தீர்வாக, ஓடிடி மேடைகளில் இலவசமாக பார்த்து ரசிக்க கூடிய படங்களை எல்லாம் இந்த தளம் திரட்டித்தருகிறது.
இலவசமாக பார்க்கலாம் என்பதற்காக சட்ட விரோதமாக இருக்குமோ என்று சந்தேகிக்க வேண்டாம். இவை எல்லாமே சட்டப்பூர்வமானவை தான். எப்படி என்கிறீர்களா? பெரும்பாலான ஓடிடி சேவைகள் விளம்பர நோக்கில் மற்றும் புதிய உறுப்பினர்களை ஈர்க்க என அவப்போது இலவசமாக படம் பார்க்க வழி செய்கின்றன அல்லவா? இப்படி இலவசமாக பார்க்க கூடிய படங்களை எல்லாம் இந்த தளம் ஒரே இடத்தில் அளிக்கிறது.
மிகவும் பிரபலமானவை, அண்மை படங்கள், காமெடி படங்கள், குடும்ப படங்கள், அனிமேஷன் படங்கள் என தனித்தனி தலைப்புகளில் படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. விரும்பிய படத்தை கிளிக் செய்தால், அதை இலவசமாக வழங்கும் சேவைகளை பார்க்கலாம். அதில் கிளிக் செய்தால் படம் பார்க்கலாம். படம் தொடர்பான சுருக்கமான அறிமுகம் மற்றும் கருத்துகளை தெரிவிக்கும் வசதியும் இருக்கிறது.
தேடல் வசதி மற்றும் படங்களுக்கான விருப்ப பட்டியலை உருவாக்கி கொள்ளும் வசதியும் இருக்கிறது.
ஆனால், இந்த தளத்தில் என்ன பிரச்சனை என்றால், டியூபி, பீகாக் போன்ற சேவைகள், இன்னமும் உங்கள் பகுதியில் எங்கள் சேவை துவங்கப்படவில்லை எனும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சில சேவைகள் உங்கள் பகுதியில் துவங்க காத்திருக்கவும் என தெரிவிக்கின்றன. ஐஎம்டிபி போன்ற சில தளங்களில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த காரணங்களினால் கிளிக் செய்தவுடன் படங்களை பார்க்க முடியாதது ஏமாற்றம் அளிக்கலாம்.