திரை இசையை கேட்க ஒரு இணையதளம்
சினிமிக்ஸ் (https://www.cinemix.us/ ) இணையதளம், இணைய வானொலி வகையைச்சேர்ந்தது என்றாலும், மிகவும் வித்தியாசமானது. எப்படி எனில், திரை இசையை ஒலிபரப்புவதற்கான இணைய வானொலியாக இது விளங்குகிறது.
திரைப்படமும், இசையும் பிரிக்க முடியாது அல்லவா! அந்த வகையில் நம்மூர் திரைப்படங்கள் முதல், அகில உலக திரைப்படங்கள் வரை எல்லாவற்றிலும், இசைக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் உண்டு.
இந்திய திரைப்படங்களில் பாடல்கள் இடம்பெறும் விதம் வேறுபட்டதே தவிர, இசை மற்றும் பாடல்கள் என்பது எல்லா திரைப்படங்களுக்க்கும் பொதுவானது. இவை பொதுவாக சவுண்ட் டிராக் என குறிப்பிடப்படுகின்றன.
திரைப்படங்களின் இசையை சிடி வடிவில் வாங்கி கேட்டு ரசிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இத்தகைய ரசிகர்கள், திரைப்பட இசையை கேட்டு ரசிக்கும் வகையில் சினிமிக்ஸ் இணைய வானொலி அமைந்துள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றின் இசையை இந்த வானொலியில் கேட்டு ரசிக்கலாம். ஹாலிவுட் மட்டும் அல்ல, ஆசிய, ஐரோப்பிய திரை இசையையும் கேட்டு ரசிக்கலாம்.
இந்த தளத்தில் ஏற்கனவே உள்ள இசையை கேட்கலாம் அல்லது இப்போது ஒலிபரப்பாகி கொண்டிருக்கும் பாடல்களையும் கேட்கலாம். இணையதளம் தவிர செயலி வடிவமும் இருக்கிறது.