ஆங்கிலத்தில் எழுத உதவும் தேடியந்திரம்
கூகுள் தேடியந்திரத்தை அளவுக்கு அதிகமாக கொண்டாடுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை: கூகுள் மொழிபெயர்ப்பு சேவையை தேவையில்லாமல் கேலி செய்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. கூகுள் தேடியந்திரம், கூகுள் மொழிபெயர்ப்பு சேவை இரண்டுமே வரம்புகள் கொண்டவை என்பதே விஷயம்.
கூகுளை விட்டால் தேடலுக்கு வேறு வழியில்லை என்று சொல்லும் போது, தேடியந்திரமாக அதன் வரம்புகளை அறிந்திருப்பது நல்லது. அதே போல, கூகுள் மொழிபெயர்ப்பு சேவை கலாய்ப்பதற்கு முன், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இயந்திர மொழிபெயர்ப்பு செயல்படும் விதத்தை புரிந்து கொள்வது நல்லது.
இயந்திரம் மொழிபெயர்ப்பில் உள்ள சவால்களை கருத்தில் கொள்ளும் போது, கூகுள் மொழிபெயர்ப்பு சேவை மிகவும் முன்னேறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். கூகுள் புராணமாக துவங்கினாலும், இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது, கூகுள் பற்றி அல்ல, கூகுள் போன்ற வேறு ஒரு தேடியந்திரமான லுத்விக்.குரு (https://ludwig.guru/ ) பற்றி பார்க்கப்போகிறோம்.
லுத்விக், கூகுளுக்கு போட்டியான தேடியந்திரம் அல்ல. இது முற்றிலும் வேறு விதமானது மட்டும் அல்ல புதுமையானது. இது ஒரு மொழியியல் தேடியந்திரம். அதாவது, ஆங்கிலத்தில் தேடுவதற்கான தேடியந்திரம்.
ஆங்கில மொழி வாசகங்களை தேடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள தேடியந்திரம். ஆங்கிலத்தில் எழுத விரும்புகிறவர்கள், ஆங்கில மொழியில் தாங்கள் எழுதுவதை சரி பார்த்துக்கொள்ள அல்லது திருத்தி செம்மை படுத்திக்கொள்ள இந்த தேடியந்திரத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அந்த வகையில், ஆங்கிலத்தை தாய் மொழியாக அல்லது பேசு மொழியாக கொள்ளாத, வேற்று மொழி பேசுபவர்கள், ஆங்கிலத்தில் ஆக்கங்களை உருவாக்க விரும்பும் போது, இந்த தேடியந்திரத்தை உதவிக்கு அழைக்கலாம்.
ஆங்கிலத்தில் எழுதும் போது, குறிப்பிட்ட வரி சரியா எனும் சந்தேகம் உண்டானால் அல்லது குறிப்பிட்ட வார்த்தையை எப்படி பயன்படுத்துவது எனும் குழப்பம் இருந்தால், அந்த வாசகத்தை லுத்விக் தேடியந்திரத்தில் சமர்பித்து தேட வேண்டும். உடனே லுத்விக், அந்த வாசகம் அல்லது சொற்கள் கொண்ட ஆங்கில வாசகங்களை பட்டியலிடுகிறது.
முன்னணி ஊடகங்கள் மற்றும் மதிப்பு வாய்ந்த சஞ்சிகைகளில் இருந்து அதே போன்ற வாசகங்கள் இவ்வாறு பட்டியலிடப்படுகிறது. இந்த பட்டியலை பார்க்கும் போது, குறிப்பிட்ட அந்த ஆங்கில வாசகத்தை சரியாக அமைத்துக்கொள்வதற்கான புரிதல் ஏற்படும்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் , செய்திகள் உள்ளிட்ட ஆக்கங்களை பெரும் தரவு பட்டியலாக வைத்துக்கொண்டு அதனடிப்படையில், தேடப்படும் வாசகங்களுக்கு பொருத்தமான வாசகங்களை மொழியியல் தன்மையோடு பரிந்துரைக்கிறது.
அலுவல் நோக்கில் தொடர்பு கொள்கிறவர்கள் அல்லது ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவர்கள் இந்த தேடியந்திர உதவியுடன், ஏற்றுக்கொள்ள கூடிய ஆங்கிலத்தில் எழுதலாம். இந்த செயல்முறை மூலம் ஆங்கிலத்தையும் மேம்படுத்திக்கொள்ளலாம்.
எழுத உத்தேசித்துள்ள ஆங்கில வாசகம் தவிர, குறிப்பிட்ட ஆங்கில சொல்லுக்கான பொருள், பயன்பாடு ஆகியவற்றையும் இதில் தேடலாம். ஆங்கில வார்த்தைகளுக்கான ஒப்பீடு, விடுபட்ட வார்த்தைகளை கண்டறிதல் போன்ற வசதிகளும் இருக்கின்றன.
பிற மொழி அறிந்தவர்கள் ஆங்கிலத்தில் எழுத உதவும் தேடியந்திரம் என்றாலும், கூகுள் மொழிபெயர்ப்பு சேவையில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டது. ஆங்கில வாசகங்களை ஒப்பிட்டு மேம்படுத்த வழி செய்வது தான் இதன் பலம் என்றாலும், இப்போது மொழிபெயர்ப்பு வசதியையும் அளிக்கிறது.
அடிப்படை சேவை இலவசமானது. ஆனால் முழுமையான அம்சங்கள் கட்டண சேவையாக அளிக்கப்படுகிறது.
தேடியந்திர முகவரி: https://ludwig.guru/
-
லுத்விக் தேடியந்திரத்தின் தோற்றம் பற்றி அறிய இந்த பதிவு: