இலவச ஒலிகளுக்கான இணையதளம்
ஃப்ரிசவுண்ட் (https://freesound.org/ ) இணையதளத்தை பார்க்கும் போது, ஒலிகளுக்கான யாஹு என்றே வர்ணிக்கத்தோன்றுகிறது. ஆனால், யாஹுவின் அருமையும், பெருமையும் மறக்கப்பட்ட விஷயங்களாக விட்டதால், ஒலிகளுக்கான கூகுள் எனும் வர்ணனையை பயன்படுத்தினாலே, நவீன கால இணையவாசிகளுக்கு ஈர்ப்புடையதாக இருக்கும்.
உண்மையில், இந்த இரண்டு வர்ணனைகளுக்குமே பொருத்தமானது தான் ஃப்ரிசவுண்ட் இணையதளம். முதல் விஷயம், இது ஒலிகளுக்கான தேடியந்திரம் என்பதால், கூகுளுடன் ஒப்பிடலாம். ஆனால், ஒலிகளை தேடித்தருவதுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒலிகள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவும், ஒலி விவாதங்களில் ஈடுபடவும் வழி செய்வதால், ஒலிகளுக்கான வலைவாசல் என குறிப்பிடலாம். அந்த வகையில் ஒலிகளுக்கான யாஹு என்பது பொருத்தமாக இருக்கும்.
அது மட்டும் அல்ல, இந்த தளத்தை, ஒலிகளுக்கான விக்கிபீடியா எனும் வகையில் ’ஒலி பீடியா’ என்றும் கூட வர்ணிக்கலாம். ஏனெனில், இந்த தளம் ஒலி கோப்புகளை சமர்பிக்கவும் வழி செய்கிறது.
ஆக, வலைவாசல் தன்மை, தேடல் வசதி மற்றும் பயனாளிகள் பங்கேற்பு வசதி ஆகிய மூன்று அம்சங்களையும் ஃப்ரிசவுண்ட் கொண்டிருக்கிறது.
ப்ரிசவுண்ட், ஒலி கோப்புகள், ஒலி குறிப்புகள் என அனைத்து வகையான ஒலிகளுக்குமான தரவு பட்டியலாக உருவாக்கப்பட்டுள்ளதால், இதை தேடியந்திரமாக பயன்படுத்தலாம்.
இதன் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில், தேவையான ஒலிகளை எளிதாக தேடலாம். கூகுளில் தேடுவது போலவே, தொடர்புடைய குறிச்சொல் கொண்டு தேடலாம். உதாரணமாக பறவை ஒலி அல்லது டைப்ரைட்டர் ஒலி என தேடலாம்.
தேடப்படும் பதத்திற்கு ஏற்ற ஒலி கோப்புகள் பட்டியலிடப்படுகின்றன. தேடல் முடிவுகளின் செழுமையை பார்க்கும் போது தான், இது வெறும் கூகுள் அல்ல என்பது புரியும். தேடல் பட்டியல் அத்தனை விரிவான தகவல்களை கொண்டதாக இருக்கிறது.
தேடல் பட்டியலில், ஒலி கோப்புகளின் பட்டியல் முதன்மையாக இடம்பெறுகிறது. ஒவ்வொரு முடிவும், பொருத்தமான துணை சொற்களை ( டேக்ஸ்) கொண்டிருப்பதோடு, தொடர்புடைய முடிவுகளையும் கொண்டிருக்கின்றன. ஆக, ஒவ்வொரு ஒலி கோப்பை கிளிக் செய்து கேட்பதோடு, தொடர்புடைய ஒலிகளையும் அணுகலாம்.
பட்டியலில் இடம்பெறும் ஒலிகளே பலவிதமாக அமைந்துள்ள நிலையில், ஒவ்வொரு ஒலிக்கான பயனாளிகள் மதிப்பீடும் இணைக்கப்பட்டுள்ளது. அருகாமையில் பார்த்தால், இந்த ஒலி கோப்பு பதிவேற்றப்பட்ட விவரம், இதுவரை பதிவிறக்கப்பட்ட எண்ணிகை மற்றும் பயனாளிகளின் கருத்துக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
மேலும், தொடர்புடைய ஒலிகள், கோப்பின் தன்மை மற்றும் அதன் வெளியீட்டு உரிமை விவரம் ஆகியவையும் சுட்டுக்காட்டப்பட்டுள்ளன.
பயனாளிகளின் கருத்துக்கள் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை பார்க்கலாம்.
இவைத்தவிர, தொடர்புடைய ஒலி வகைகள், அவற்றுக்கான தொழில்நுட்ப விவரங்கள் , உரிம வகைகள், மற்றும் ஒலித்தொகுப்புகளையும் தனித்தனியே அணுகலாம்.
இத்தகைய பரந்து விரிந்த ஆழமான தேடல் தவிர, முகப்பு பக்கத்தில் வலைவாசல் தன்மையோடு ஒலித்தகவல்கள் முன்வைக்கப்படுவதையும் பார்க்கலாம்.
இன்றைய ஒலி, அண்மை ஒலி ஆகிய பட்டியலோடு, இந்த தளத்தின் வலைப்பதிவுகளும் முகப்பு பக்கத்தில் இடம்பெறுகிறது. மேலும், பயனாளிகள் கருத்து பரிமாற்றத்திற்கான விவாத குழு பக்கங்களும் இருக்கின்றன. பயனர்களை முன்னிறுத்தும் பக்கமும் இருக்கிறது.
இந்த தளத்தை சுவாரஸ்யமான முறையில் தேடலாம் என்பதோடு, பயனர்களுடனும், ஒலிகளை உருவாக்குபவர்களுடனும் உரையாடலை மேற்கொள்ளலாம்.
ஒலி கோப்புகள், உதாரணங்கள், பதிவுகள், அனைத்து விதமான ஒலிகளுக்கான மிகப்பெரிய கூட்டு தரவு பட்டியலை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் அறிமுக பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயனாளிகள் தங்கள் பங்கிற்கும் ஒலி கோப்புகளை சேர்க்கலாம். இந்த கூட்டு முயற்சியே இந்த தளத்தை விக்கிபீடியா தன்மையை பெற வைக்கிறது.
ஒலிகளும், ஒலி விளைவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டவை என்பதால், இதில் உள்ள ஒலிகள் அனுமதி பெற்ற பகிர்வுக்கான கிரியேட்டிவ் காமென்ஸ் உரிமையுடன் அமைந்துள்ளன.
ஸ்பெய்னில் உள்ள Music Technology Group of Universitat Pompeu Fabra , இந்த அருமையான தளத்தின் பின்னே இருக்கிறது. 2005 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த தளம் அண்மையில் ஐந்து லட்சம் ஒலி கோப்புகள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.
ஒலிமயமாக வளரட்டும்!
-