தொழில்நுட்ப ஞானம் தரும் இணையதளம்
குவிக்டாக்ஸ் (https://quicktalks.io/ ) இணையதளத்தை உருவாக்குனர்களின் வீடியோ நேர்காணல் அனுபவ பகிர்வு இணைய சேவை என வர்ணிக்கலாம். அதாவது உருவாக்குனர்களுக்காக உருவாக்குனர்களின் வீடியோ பகிர்வை கொண்ட இணைய சேவை.
யூடியூப், டிக்டாக், இன்ஸ்டா என பல மேடைகளில் வீடியோக்கள் வெள்ளமென வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், வீடியோ உரையாடலுக்கான இணையதளமா என அலட்சியம் செய்யத்தோன்றலாம். ஆனால், வீடியோ பரப்பில் குறிப்பிட்ட ஆர்வமும் தேடலும் கொண்டவர்களுக்கான குறும் பிரிவு சேவையாக குவிக்டாக்ஸ் அறிமுகம் ஆகியிருக்கிறது. எனவே, இதன் இலக்கு பயனாளிகளான உருவாக்குனர்களை இந்த சேவை நிச்சயம் கவரும்.
உருவாக்குனராக இருந்தால் உங்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
எழுத்தாளர்கள், கவிஞர்களை படைப்பாளிகள் என்று சொல்வது போல தொழில்நுட்ப உலகில் புதிய பொருள் அல்லது சேவையை உருவாக்குபவர்களை மேக்கர் என குறிப்பிடுகின்றனர். தமிழில் உருவாக்குனர்கள்.
இந்த பிரிவில் தனித்து விளங்கும் சுயேட்சை உருவாக்குனர்களும் எனும் பிரிவினரும் இருக்கின்றனர். நிறுவனம் சாராமலும், நிறுவனமயமாகாமலும் செயல்படும் விருப்பம் கொண்டவர்கள் என இந்த பிரிவினரை புரிந்து கொள்ளலாம்.
மென்பொருள் சேவை முதல் வன்பொருள் தயாரிப்புகள் வரை பலவிதமான ஆக்கங்களில் இந்த பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
உருவாக்குனர்களில் வெற்றி பெற்றவர்கள் இருக்கின்றனர். வெற்றிக்காக போராடிக் கொண்டிருப்பவர்களும் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஊக்கத்தையும், வழிகாட்டுதலையும் சுயமாகவே தேடிக்கொள்கின்றனர். மாறாக வெற்றி பெற்ற உருவாக்குனர்களிடம் இருந்து இளம் உருவாக்குனர்கள் அனுபவ பாடங்களை பெற வழி செய்யும் வகையில் குவிக்டாக்ஸ் இணைய சேவை அமைந்துள்ளது.
உருவாக்குனர்கள் வீடியோ நேர்காணல் வடிவில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளது. இந்த அனுபவ பகிர்வு மூலம் இளம் உருவாக்குனர்கள், வெற்றிகரமான செயல்பாட்டிற்கான வழிகள் மற்றும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வது போன்ற விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்.
உருவாக்குனர்களை பொருத்தவரை அனுபவ பகிர்வு மூலம், தங்கள் தொழில்நுட்ப ஞானத்தை பகிர்ந்து கொள்ள வழி செய்வதோடு, அவர்கள் ஆக்கங்களுக்கான வாடிக்கையாளர் பரப்பையும் விரிவாக்கி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவெளியில் பேசுவதற்கான பயிற்சியாகவும் இது அமையும். கேள்வி பதில் வாயிலாக உரையாடவும் முன்வரலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இளம் உருவாக்குனர்களை பொருத்தவரை அனுபவசாலிகளின் வெற்றி வழிகளை தெரிந்து கொள்ளலாம். வெற்றிக்கதைகளின் பகிர்வு மூலம் உருவாக்குனர்கள் சமூகத்தில் தொடர்புகளையும் உருவாக்கி கொள்ளலாம்.
இதே பாணியில், இளம் தொழில்முனைவோர் அல்லது இளம் இயக்குனர்களுக்கான சேவையை கூட துவங்கலாம்.
-