செய்திகளை தெரிந்து கொள்ள புதிய வழி காட்டும் இணையதளம்
’ஹெட்லி’ (headlyy) போன்ற இணையதளங்கள் ஏன் தமிழில் முயற்சிக்கப்படுவதில்லை எனத் தெரியவில்லை. அதாவது செய்திகளை புதுமையான முறையில் தெரிந்து கொள்ள வழி செய்யும் இணையதளங்கள். இந்த ஆற்றலையும் இணையவாசிகளிடமே ஒப்படைக்கும் இணையதளங்கள்!.
ஹெட்லி முகப்பு பக்கத்தை பார்த்தாலே இந்த தன்மையை புரிந்து கொள்ளலாம். ஹெட்லியில் வரிசையாக செய்திகளுக்கான தலைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் விரும்பிய செய்தியை கிளிக் செய்து வாசிக்கலாம் என்பது மட்டும் அல்ல, அந்த செய்தி தொடர்பாக விவாதிக்கலாம்.
ஒவ்வொரு செய்தி தொடர்பாகவும், பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். நாமும் நம் பக்கத்திற்கு கருத்து தெரிவித்து விவாதத்தில் பங்கேற்கலாம். இந்த செய்தியை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், இந்த செய்தி முகப்பு பக்கத்தில் இடம் பெறலாமா என்பதற்காக வாக்களிக்கவும் செய்யலாம். செய்தி குறித்து புகாரும் அளிக்கலாம். ஆனால், இவற்றில் பங்கேற்க தளத்தில் உறுப்பினராக வேண்டும்.
இப்படி, செய்திகளை தெரிந்து கொள்வது மட்டும் அல்லாமல், அந்த செய்தி குறித்து சக இணையவாசிகளுடன் பின்னூட்டம் வாயிலாக உரையாட வழி செய்வது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம். உறுப்பினர்கள் தங்களுக்கு ஆர்வம் உள்ள செய்தி தலைப்புகள் சார்ந்த சமூகத்தையும் உருவாக்கி கொள்ளலாம். ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய சமூகங்கள் மூலம் செய்திகளை அணுகலாம்.
செய்திகள் அவற்றின் தன்மைக்கேற்ப தலைப்பிடப்பட்டு வகைப்படுத்தப்படுவது போல, அவை இடம்பெறும் சமூக ஆர்வங்களிடன் அடிப்படையில் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. டிரெண்டிங் பகுதியில் இவை தனியே அடையாளம் காட்டப்படுகின்றன. தொழில்நுட்ப பிரியர்கள், மீப் அபிமானிகள், புரோகிராமர்கள் என பலவித ஆர்வத்தின் அடிப்படையில் இவை அமைந்துள்ளன.
இவைத்தவிர, புதியவை, சூடானவை, சர்ச்சைக்குறியவை, முன்னிலை பெறுபவை எனும் விதமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகளை எல்லாம் உங்களைப்போன்ற உறுப்பினர்கள் பகிர்ந்து கொணவை தான். எனவே, இதில் உள்ள ’உருவாக்கு’ பகுதியை பயன்படுத்தி நீங்கள் விவாதிக்க விரும்பும் செய்தியையும் பகிர்ந்து கொள்ளலாம்.
பயனாளிகள் செய்திகளை பகிர்ந்து கொள்ள வழி செய்வதே இந்த தளத்திற்கு ஒருவித ஜனநாயக தன்மையை அளிக்கிறது. அதுவே இந்த தளத்தின் சிறப்பு. ஆனால், இது இணையத்தில் புதிதல்லவே என கேட்கலாம்.
ஆம், ஏற்கனவே டிக் ( ) போன்ற இத்தகைய சேவைகள் இருக்கன்றன தான். ரெட்டிட் தளமும் இது போன்றது தான். இவற்றுக்கு எல்லாம் முன்னர் ஸ்லேஷ்டாட் உருவாகிவிட்டது தான். ஆக, இந்த தளம் ஒரு நகல் சேவை தான்.
இந்த தளத்தில் கவர்ந்திழுக்கும் விஷயமும் அது தான். செய்திகளை பயனாளிகளே சமர்பித்து, அவர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் முன்னிலை செய்திகளை தீர்மானித்து, செய்திகள் குறித்து விவாதிக்க வழி செய்யும் ஸ்லேஷ்டாட் பாணி செய்தி தளங்கள் ஆங்கிலத்தில் அநேகம் இருக்கின்றன. ஆனாலும், இந்த பாணியில் ஒரு சின்ன புதுமையாக, நீங்கள் விரும்பும் செய்திகளை விவாதிப்பதற்கான இணைய சமூகங்களை உருவாக்கி கொள்ள வழி செய்வதாக கூறிக்கொண்டு இந்த தளம் அறிமுகம் ஆகியுள்ளது.
பயணர்களுக்கு ஆர்வம் இருந்தால் இந்த தளம் வெற்றி பெறும்.
ரெட்டிட் போன்ற செய்தி விவாத தளங்கள் பிரபலமாக இருக்கும் போது, அதே போன்ற புதிய தளம் உருவாவதை பார்க்கும் போது தான், தமிழில் ஏன் இத்தகைய முறையில் செய்திகளை அளிக்க நாம் முன்வருவதில்லை என கேட்கத்தோன்றுகிறது. ஏற்கனவே இருந்த தமிழ் ( இண்ட்லி), தமிழ் மணம் ஆகிய தளங்கள் இந்த வகையைச்சேர்ந்தவை தான். இந்த தளங்களே காணமால போய்விட்ட நிலையில், தமிழ் இணைய முயற்சிகள் எத்தனை வறட்சியாக இருக்கிறது என யோசித்துப்பாருங்கள்.
இணையதள முகவரி: https://headlyy.com/?sort=home
-