புத்தக மேற்கோள்களுக்காக ஒரு இணையதளம்
நல்ல இணையதளம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கி கொண்டிருப்பதை விட, ஒரு தளம் மோசமான தளமாக இல்லாமல் இருந்தாலே நல்ல தளம் என்று சொல்லலாம்.
மோசமான தளம் என்றால், பயனாளிகளை ஏமாற்றாமல் இருக்க வேண்டும். அல்லது அந்த தளத்தின் நோக்கம் பயனாளிகளுக்கு தெளிவாக உணர்த்தப்பட வேண்டும். உதாரணத்திற்கு, முழுக்க முழுக்க விளம்பர நோக்கில் ஒரு தளத்தை உருவாக்கலாம் தவறில்லை. ஆனால் அந்த தளம் ஏதோ பயனுள்ள தளம் போன்ற தோற்றத்தை அளித்து அதன் மூலம் பயனாளிகளை ஈர்த்து அவர்கள் வாயிலாக விளம்பர வருமானம் ஈட்டினால் அதை மென் இணைய மோசடி என்றே கருத வேண்டும்.
இப்படி விளம்பர நோக்கில் அமைக்கப்பட்ட இணையதளங்களை கண்டறிந்து புறந்தள்ளுவது தேடல் அறிவில் முக்கிய அம்சமாகிறது.
மாறாக, ஒரு சில இணையதளங்கள் பயனாளிகளை ஈர்க்க கூடிய ஒரு சுவாரஸ்யமான அம்சத்தை கொண்டு, அதை அடிப்படையாக கொண்டு விளம்பரம் ஈட்டக்கூடியதாகவும் இருக்கும். இவற்றை நல்ல தளங்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் புத்திசாலித்தனமான தளங்கள் என்று சொல்லலாம்.
முக்கியமான விஷயம் என்னவெனில், புத்திசாலித்தனமான தளங்கள், பயனாளிகளுக்கான ஒற்றை அம்சத்தையேனும் கொண்டிருக்கும். அதை விளம்பரத்துடன் தொடர்பு படுத்துவதில் தான் சாமர்த்தியம் இருக்கிறது.
இந்த வகை தளங்களுக்கான அழகான உதாரணமாக, கிளிம்பே (https://www.glimbay.com/ ) தளத்தை சொல்லலாம். புத்தகங்களை மேற்கோள்கள் வாயிலாக அறிந்து கொள்ளும் வமையில் இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, புத்தகங்களின் சாரம்சத்தை உணர்த்தும் மேற்கோள்கள் அதிலிருந்து தேர்வு செய்யப்பட்டு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு புத்தகத்தை கிளிக் செய்தால், அதிலிருந்து தொகுக்கப்பட்ட மேற்கோள்களை வாசிக்கலாம். இவை மேற்கொண்டு புத்தகத்தை படிக்க த்தூண்டலாம், அல்லது அந்த புத்தகம் பற்றிய குறைந்தபட்ச புரிதலை அளிக்கலாம். அல்லது மின்னல்கீற்று போல ஒரு எண்ணத்தை ஏற்படுத்தலாம்.
அநேகமாக பிரபலமான புத்தகங்களே இந்த தொகுப்பில் இடம்பெற்றிருந்தாலும், சில அரிய புத்தகங்களையும் அறிமுகம் செய்து கொள்ள முடிகிறது. புத்தகங்களின் கீழே அமேசானில் புத்தகம் வாங்குவதற்கான இணைப்பு மற்றும் மற்றவர்களுடன் பகிர்வதற்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. இவை விளம்பர வருவாய்க்கான வழி.
ஆக, இந்த தளம் புத்தகங்களை பட்டியலிட்டு அதன் மூலம் அமேசான் தொடர்பில் வருமானம் ஈட்டப்பார்க்கிறது. ஆனால், அதை செய்ய பயனாளிகளுக்கு ஒரு பயனுள்ள அம்சத்தை அளிக்கிறது. புத்தக சுருக்கத்தை அளிப்பது போல, புத்தகங்களில் இருந்து மேற்கோள்களை அளிக்கிறது.
இந்த தளத்தின் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. இந்த தளத்தை அமைத்தவரின் தந்தை, புத்தகம் வாசிக்கும் போது அருகில் ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு அதில் புத்தகத்தில் தன்னை கவர்ந்த அம்சங்களை எழுதி வைப்பது வழக்கமாம். இந்த மேற்கோள்கள் சுவாரஸ்யமாக இருப்பதை உணர்ந்தவர் இதற்காக ஒரு தளம் இருந்தால் நல்லது என நினைத்து இந்த தளத்தை அமைத்ததாக ரெட்டிட் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.