கதம்ப தேடியந்திரம்
இணையத்தில் ஒரு காலத்தில் மெட்டா சர்ச் இஞ்சின் எனப்படும் அடுக்கு தேடியந்திரங்கள் பிரபலமாக இருந்தன. ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேடும் வசதியை அளித்த தேடியந்திரங்களே இவ்வாறு குறிப்பிடப்பட்டன.
ஒரு தேடியந்திரத்தில் தேடினால் போதாது, பல தேடியந்திரங்களில் தேடிப்பார்க்க வேண்டும் என கருதும் போது, அடுக்கு தேடியந்திரங்களை நாடலாம். இவை மூல தேடியந்திரம் கிடையாது. அதாவது இவை, சொந்தமாக தேடல் முடிவுகளை வழங்குவது கிடையாது. மாறாக, பல்வேறு தேடியந்திரங்களில் தேட வழி செய்கின்றன.
அல்டாவிஸ்டா, ஆஸ்க்ஜீவ்ஸ், லைகோஸ் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், இந்த வகை அடுக்கு தேடியந்திரங்களுக்கான தேவையும் அதிகம் இருந்தது. எந்த தேடியந்திரத்தில் தேடினால் சிறந்த முடிவு கிடைக்கும் என்ற குழம்ப வேண்டிய தேவையில்லாமல், அடுக்கு தேடியந்திரம் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடி விடலாம்.
அதன் பிறகு கூகுள் அறிமுகமாகி, பிரபலமாகி, ஏகபோகமாகிய பின் அடுக்கு தேடியந்திரங்களுக்கான ஈர்ப்பு குறைந்து போய்விட்டது. ஆனால் இல்லாமல் போய்விடவில்லை. இன்னமும் பல அடுக்கு தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றில் ஒன்று தான் தி-லுக்அப்.காம் (https://the-lookup.com/ ).
அடுக்கு தேடியந்திர இலக்கணப்படி, தி-லுக்அப் தேடியந்திரமும், பல தேடியந்திரங்களில் தேட வழி செய்கிறது.
இதன் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் தேடலுக்கான குறிச்சொல்லை டைப் செய்த பிறகு, தேடு என கட்டளை கொடுப்பதற்கு முன், தேடலுக்கான தேடியந்திரத்தை தேர்வு செய்ய வேண்டும். தேடல் கட்டத்தின் வலது கோடியில் கிளிக் செய்தால், வரிசையாக தேடியந்திரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும்.
டக்டக்கோவில் துவங்கும் இந்த பட்டியலில் உள்ள தேடியந்திரங்களில் இருந்து தேர்வு செய்தால், அந்த குறிப்பிட்ட தேடியந்திரத்தின் தேடல் முடிவுகளை திரையில் பார்க்கலாம்.
இப்படி, பீக்கியர் (https://peekier.com/), குவாண்ட் (https://www.qwant.com/?l=en) , சர்ச் என்கிரிப்ட் (https://www.searchencrypt.com/home), ’சுவிஸ்கவ்ஸ்’ (https://swisscows.ch/) , ஆஸ்க், பிங், ஸ்டார்ட்பேஜ் (https://www.startpage.com/), கிகாபிலாஸ்ட் (https://www.gigablast.com/ ) உள்ளிட்ட தேடியந்திரங்களில் தேடலாம். கூகுளும் இந்த பட்டியலில் உள்ளது.
செய்திகள், இசை, வீடியோ போன்ற பிரிவுகளிலும் தேடலாம். நிச்சயம் தேடலில் புதிய அனுபவமாக இருக்கும். தேடிப்பார்த்து சொல்லுங்கள்!
-