மதிய உணவுக்கு அழைக்கும் இணையதளம்
கூகுள் அல்லது பேஸ்புக் அல்லது வாட்ஸ் அப் நிறுவனங்களில் இருந்து மதிய உணவு சாப்பிட அழைப்பு வந்தால் எப்படி இருக்கும்? அதிலும் குறிப்பாக ஊழியர்களுக்கான தனிச்சலுகைகளுக்கும், அருமையான உணவுக்கும் அறியப்படும் கூகுள் நிறுவனத்தில் இருந்து மதிய உணவு அழைப்பை பெறுவது இன்னும் சிறப்பாக இருக்கும்.
ஆனால், இந்த நிறுவனங்களில் இருந்தெல்லாம் மதிய உணவுக்கு வாருங்கள் என அழைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. சரி, எதற்கு இப்படி ஒரு கேள்வி என கேட்டால், மதிய உணவுக்கு வாருங்கள் என அழைக்கும் சுவாரஸ்யமான இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்வதற்காக தான்.
ஏர்பிஎன்பி தளத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை எனில் அறிந்து கொள்ளுங்கள். ஓட்டல்களில் அறையெடுத்து தங்குவதற்கு பதில், உலகின் எந்த நகரில் அங்குள்ள வீடுகளில் அறையெடுத்து தங்குவதற்கான வசதியை ஏற்படுத்தி தருகிறது இந்த தளம். இது எப்படி சாத்தியமாகிறது என்றால், தங்கள் வீட்டில் உள்ள கூடுதல் இடத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தயாராக இருப்பவர்கள் இந்த தளத்தில் தங்கள் அறைகளை வாடகைக்கு பட்டியலிடலாம். அந்த வகையில், இடம் தேடுபவர்களையும், இடம் அளிப்பவர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது இந்த தளம்.
இணையத்தின் வெற்றிக்கதைகளில் ஒன்றான ஏர்பிஎன்பி தளம் பற்றி இன்னும் விவரித்துக்கொண்டே போகலாம் என்றாலும் இப்போதைக்கு இந்த அறிமுகம் போதுமானது. விஷயம் என்னவெனில், இணைய யுகத்தில் தங்குமிட வசதியை மாற்றியமைத்து, இதை சமூகமயமாக்கிய புதுமை நிறுவனம் என ஏர்பிஎன்பியை சொல்லலாம்.
புதுமையான நிறுவனம் என்பதாலேயே என்னவோ, இதில் பணியாற்றும் முகமது எல் மஹால்வே ( Mohamed El Mahallawy) எங்களுடன் மதிய உணவுக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கும் இணையதளம் - https://lunchwithmeat.now.sh/ ஒன்றை அமைத்திருக்கிறார்.
ஏர்பிஎன்பி நிறுவன அலுவலகத்தில் உணவு அருமையாக இருக்கிறது. ஊழியர்களால் விரும்பி, நேசத்துடன் தயாரிக்கப்படுகிறது என்றெல்லாம் வர்ணிக்கும், முகமது அருமையான எங்கள் அலுவலக சூழலில் மதிய உணவு சுவைத்தபடி உரையாடி மகிழ உங்களை அழைக்கிறேன் என்கிறார்.
இப்படி, மதிய உணவு சுவைத்தபடி, பலவித விஷயங்களை பகிர்வது சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும் என்றும் சொல்கிறார். இப்படி மதிய உணவு சுவைக்க விரும்புகிறவர்கள் தங்களைப்பற்றிய சமூக ஊடக தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கேற்ப, சக உணவாளர்களை தேர்வு செய்து விருந்துண்ண அழைக்கிறார்கள்.
இந்த அனுபவம் முகமதுவுக்கும் சரி, சாப்பிட வருபவர்களுக்கும் சரி அருமையானதாக அமைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அருமையான ஐடியா தான் இல்லையா? பயனர்களைப்பொருத்தவரை, ஒரு நிறுவனத்திற்கு சென்று மதிய உணவு சுவைப்பதோடு, அதன் சூழல், பணி கலாச்சாரம் போன்றவற்றை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும். நிறுவனத்திற்கு, பயனர்கள் பற்றி தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். கூடவே விளம்பரமும் கிடைக்கும்.
பயணர்கள் விரும்பினால் கட்டணம் செலுத்தி, இத்தகைய மதிய உணவு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யும் வாய்ப்பையும் உருவாக்கியிருப்பதாக முகமது குறிப்பிட்டுள்ளார்.
மதிய உணவை சமூக நோக்கிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கான அருமையான உதாரணம் இந்த தளம்.
ஆனால், முகமது தளத்தில், மதிய உணவு நிகழ்வு அனுபவங்கள் பற்றிய புதிய பகிர்வுகள் இல்லை என்பது கொஞ்சம் ஏமாற்றமே. இந்த அனுபவங்களை அவர் பதிவுகளாக பகிர்ந்து கொண்டிருந்தாலும் இன்னும் துடிப்பாக இருக்கும்.
தன்னை ஒரு மென்பொருளாலர் என வர்ணித்துக்கொள்ளும் முகமதுவின் தனிப்பட்ட இணையதளமும் எளிமையாக ஆனால் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. https://mmahalwy.com/இது அவரது டிவிட்டர் பக்கம்: https://twitter.com/mmahalwy