கோடிங் மொழியை மாற்றித்தரும் இணையதளம்
ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு என்ன எல்லாம் செய்கிறது என்பதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. ஏ.ஐ நுட்பம் சார்ந்து அறிமுகம் ஆகி கொண்டிருக்கும் தளங்களில் ஒன்றான கோட்லாங்குவேஜ்கன்வர்டர் (https://codelanguageconverter.com/) ஒரு புரோகிராமிங் மொழியில் எழுதப்பட்ட கோடை இன்னொரு புரோகிராமிங் மொழிக்கு மாற்றித்தரும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
சி, சி_, பைத்தான், பிஎச்பி என பல புரோகிராமிங் மொழிகள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் அவற்றின் தன்மைக்கேற்ப பலவிதமாக பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு குறிப்பிட்ட புரோகிராமிங் மொழிகள் தான் ஏற்றது என்று கருதப்படுவதாகவும் அறிய முடிகிறது.
ஒரு சில புரோகிராமர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட புரோகிராமிங் மொழிகளை அறிந்திருக்கலாம். இன்னமும் பலர் தாங்கள் அறிந்த புரோகிராகிங் மொழி தவிர மற்றவற்றில் பரிட்சியம் இல்லாமல் இருக்கலாம்.
இந்த சூழலில், மேலே சொன்ன இணையதளம் ஒரு புரோகிராமிங் மொழியில் எழுதப்பட்ட கோடை இன்னொரு புரோகிராமிங் மொழியில் மாற்றித்தருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இதைச் செய்கிறது. இதில் உள்ள ஒரு கட்டத்தில் ஒரு மொழியில் உள்ள கோடை சமர்பித்தால் அதை விரும்பிய புரோகிராமிங் மொழியில் மாற்றித்தருகிறது. தேர்வு செய்வதற்காக நீளமாக புரோகிராமிங் மொழிகளின் பட்டியல் அளிக்கப்படுகிறது.
புரோகிராமர்கள் முயன்று பார்க்கலாம். முதல் சில மாதிரி முயற்சிகள் இலவசம்.
-
இந்த தளத்தை பார்க்கும் போது இணையத்தில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த தமிழ் எழுத்துரு மாற்றிகள் நினைவுக்கு வருகின்றன. சுரதா தளம் இவற்றில் பிரபலமாக இருந்தது. தமிழில் ஒரு எழுத்துருவில் எழுதிய ஆக்கத்தை இந்த தளத்தில் சமர்பித்தால், நாம் விரும்பும் மற்ற தமிழ் எழுத்துருவுக்கு மாற்றித்தரும். – இந்த தளம் இன்னமும் இருக்கிறது: https://www.suratha.com/reader.htm