உணர்வுகளை கொட்டித்தீர்க்க ஒரு இணையதளம்
வெண்ட்ஸ்கேப்.லைப் ( https://www.ventscape.life/ ) இணையதளத்தை முற்றிலும் புதுமையானது என்று சொல்ல முடியாது. ஆனால், இணையத்தில் ஏற்கனவே பழக்கத்தில் இருக்கும் ஒரு கருத்தாக்கத்தை கொஞ்சம் புதுமையான முறையில் அளிக்கிறது இந்த தளம்.- அதன் காரணமாகவே கவனத்தை ஈர்க்கிறது.
வெண்ட்ஸ்கேப் அப்படி என்ன செய்கிறது என்றால், உங்களை புலம்ப அனுமதிக்கிறது. இன்னும் சரியாக சொல்வது என்றால், நீங்கள் இப்போது என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, அதை கொட்டித்தீர்க்க வழி செய்கிறது.
இணையதளத்தின் பெயரில் இருந்தே இதை புரிந்து கொள்ளலாம். வெண்ட் எனும் ஆங்கில வார்த்தைக்கு, வெளிப்படுத்துவது என பொருள் கொள்ளலாம். அந்த வகையில் இந்த தளமும், உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்திக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு விதத்தில் பார்த்தால், இணையமே வெளிப்படுத்திக்கொள்வதற்கான வழி தான்.அதன் பிரதான அங்கமான சமூக ஊடகங்கள் இதை தான் பல விதங்களில் செய்ய வழி செய்கிறது. அப்படியிருக்க, இதற்கென தனி இணையதளம் எதற்கு என கேட்கலாம்?
சமூக ஊடகங்கள் பெரும்பாலும் பகிர்வு வெளியாக இருக்கின்றனவேத்தவிர, வெளிப்படுத்தும் வெளியாக அமைவதில்லை. அப்படியே இருந்தாலும், உள்ளத்தில் இருப்பதை இவற்றில் வெளிப்படுத்திக்கொள்வதில் பலருக்கு தயக்கம் இருக்கிறது.
இப்போது சோர்வாக உணர்கிறேன், அல்லது உலகின் மீதே கோபமாக இருக்கிறது… போன்ற சிந்தனைகள் நம் எல்லோருக்குமே உண்டு. இவற்றை நாம் பெரும்பாலும் வெளியே சொல்லாமல் மென்று விழுங்கி விடுகிறோம். மாறாக, இவற்றை வெளியே சொல்லிவிட்டால்…
அதை தான், வெண்ட்ஸ்கேப் செய்யச்சொல்கிறது. இந்த தளத்தில் நுழைந்து, அதில் உள்ள தேடல் கட்டத்தில், நீங்கள் இப்போது என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை வெளியிடலாம். நீங்கள் யார் எனும் விவரம் இல்லாமல் உங்கள் கருத்து மட்டும் பதிவாகும்.
இப்படி உள்ளத்து உணர்வுகளை இறக்கி வைக்க ஊக்குவிக்கும் இத்தகைய இணையதளங்கள் ஏற்கனவே உள்ளன என்றாலும், வெண்ட்ஸ்கேப்பில் என்ன சிறப்பு என்றால், இவ்வாறு செய்யும் போதே, மற்றவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதையும் தெரிந்து கொள்ள வழி செய்கிறது.
அதாவது, நீங்கள் உணர்வுகளை இந்த தளத்தில் பதிவு செய்யும் அதே நேரத்தில் வேறு இணையவாசிகள் டைப் செய்வதை எல்லாம் திரையில் தோன்றச்செய்கிறது. உள்ளத்து உணர்வுகளின் கலவை சித்திரமாக அமையும் இந்த கருத்துகள் ஆசுவாசத்தையும், ஆறுதலையும் அளிக்கலாம். நீங்களும் முயன்று பாருங்கள்.