ஒரு வெற்று இணையதளம் பிரபலமான கதை
ஒரு இணையதளம் உருவான கதை, ஒரு வெப் சிரீசுக்கான திரைக்கதை போல சுவாரஸ்யமாக, எதிர்பாராத திருப்பங்களை கொண்டிருக்கும் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? https://xn--mp8hai.fm/ தளம் இப்படி உருவானது தான்.
விநோதமான முகவரி கொண்டுள்ள இந்த இணையதளம்,
விநோதமான முகவரி கொண்டுள்ள இந்த இணையதளம், அறிமுகமாவதற்கு முன்னரே இணைய உலகில் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆனால் அறிமுகமான போது, பலரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது, சிலரை ஆவேசப்பட வைத்தது, இன்னும் பலரை அசடு வழிய பாராட்ட வைத்தது.
ஆனால், மொத்தத்தில் ஒரு சில நாட்களில் இணைய உலகையே தன்னைப்பற்றி பேச வைத்துவிட்டது. இருப்பினும், மெசேஜ் சொல்லும் தமிழ் படம் போல, சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் மீறி, மொச்சத்தக்க காரியத்தையும் செய்திருக்கிறது.
இந்த அறிமுகமே, ஏதோ கதை சொல்வது போல இருக்கிறதா? அறிமுகம் செய்ய இருக்கும் இணையதளம் உருவான விதம் அப்படி!
ஜூன் மாத இறுதியில், டிவிட்டரில் ஒரு சில இமோஜிகளை கொண்ட மீம் வெளியாகத்துவங்கியது. இரண்டு கண்களுக்கு நடுவே ஒரு வாய் இருப்பது போன்ரா அந்த இமோஜி மீமுடன் (👁👄👁" ), நீங்கள் பார்ப்பது தான் இதில் இருப்பது (It Is What It Is) என பொருள் படும் வாசகமும் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து, பலர் தங்கள் டிவிட்டர் முகவரியில் இந்த இமோஜி மீமை சேர்த்துக்கொண்டனர். விளைவு, இந்த மீம் வைரலானது.
உடனே, பலரும் இந்த மீம் மீது கவனம் செலுத்த, அதன் பொருள் தேடும் ஆய்வும் துவங்கியது. இந்த மீம் டிக்டாக் உலகில் பிரபலமாக இருப்பது என்றும், கடந்த ஆண்டு யூடியூப் வீடியோ ஒன்றின் மூலம் உருவானது என்றும் தெரிய வந்தது. அர்த்தம் இல்லாமல் சிரித்து விட்டு, நீங்கள் பார்ப்பது தான் அர்த்தம் என நகைச்சுவையாக கலாய்ப்பது தான் இந்த மீமின் நோக்கம் என்பது தெரிய வந்தது.
எல்லாம் சரி, இந்த மீமை ஏன் பலரும் தங்கள் டிவிட்டர் முகவரியில் இணைத்துக்கொள்ள வேண்டும்? இந்த கேள்வி ஆர்வத்தை தூண்டியது. இதனிடையே தொழிலதிபர் எலன் மஸ்க் உள்ளிட்டோர் இந்த டிவிட்டர் மீம் பற்றி குறும்பதிவிட்டனர்.
இந்த ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் இதே பெயரில் ஒரு டிவிட்டர் பக்கம் அமைக்கப்பட்டது: https://twitter.com/itiseyemoutheye
இந்த விநோத டிவிட்டர் பக்கம் ஆர்வத்தை இன்னும் பல மடங்கு அதிகமாக்கிய நிலையில், இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. மேலே சொன்ன மீம் இம்ஜோகளை சித்திரமாக கொண்டிருந்த அந்த தளம், உங்கள் இமெயில் முகவரிகளை சமர்பிக்கவும் என கோரியது. இந்த இணையதளம், புதிய இணைய சேவைகளை கண்டறிவதற்கான பிராடக்ட் ஹண்ட் தளத்தில் அறிமுகமாக, இந்த தளம் என்னவாக இருக்கும்? எனும் கேள்வி எல்லோருக்கும் உண்டானது.
இது புதிய செயலியாக இருக்குமா? புதிய இணைய சேவையாக இருக்குமா? என்றெல்லாம் குழம்பியபடி ஆயிரக்கணக்கானோர் தங்கள் இமெயில் முகவரிகளை இந்த தளத்தில் சமர்பித்து காத்திருந்தனர்.
இதனிடையே, ஒரு வெற்று இணையதளம் இத்தகைய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதை கவனித்த தொழில்நுட்ப செய்தி தளங்கள், இந்த விநோத நிகழ்வை செய்தியாக்கினர். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்தது.
இந்த நிலையில் தான், திடிரென காற்று போன பலூன் போல, இந்த இணையதளமே ஒரு ஏமாற்று விளையாட்டு என அதன் பின்னே இருந்தவர்கள் அறிவித்தனர். இது இன்னும் சுவாரஸ்யமான திருப்பமாக அமைந்தது.
தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட பலரும் தற்செயலாக, டிக்டாக் இமோஜி மீமை எந்தவித திட்டமும் இல்லாமல் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களுக்குள் ஒருவித இணைய நட்பு உண்டான நிலையில், இந்த மீம் இணைய உலகில் பரபரப்பாக பேசப்படுவதை பார்த்து, கொஞ்சம் விளையாடும் நோக்கத்துடன், ஒரு விசித்திர இணையதளத்தை அமைத்து, அதில் இமெயில் முகவரியை சமர்பிக்க கேட்டுள்ளனர்.
உண்மையில் அவர்களிடம் எந்தவிதமான புதிய இணைய சேவையும் இல்லாத நிலையில், இந்த இணையதளத்தை அமைத்தனர். ஏமாற்றுவது அவர்கள் நோக்கம் அல்ல: மாறாக, அழைப்பின் பேரில் மட்டுமே என்று அறிமுகமாகும் பிரத்யேக செயலிகளையும், இத்தகைய பிரத்யேக செயலிகளை கட்டணம் செலுத்தி உறுப்பினராகும் பயனர்களையும், கிண்டல் செய்வதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
ஒரு புதுமையான சமூக செயலி அறிமுகமாகலாம் எனும் எதிர்பார்ப்பையும், அடுத்த பெரிய செயலியை தவற விட்டுவிடக்கூடாது எனும் தொழில்நுட்ப உலகின் மனநிலையையும் இதன் மூலம் விமர்சிக்க விரும்பியிருக்கின்றனர்.
ஆனால், தங்கள் விளையாட்டு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு தளத்தின் முகப்பு பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டனர். ஏற்கனவே, இமெயில் அழைப்பில் முன்னிலை பெற, சேவை அமைப்பிற்கு நன்கொடை அளிக்க கோரியிருந்தவர்கள், தங்கள் தளம் உண்டாக்கிய எதிர்பார்ப்பை நல்லவிதமாக பயன்படுத்திக்கொள்ளும் எண்ணத்துடன், அமெரிக்காவில் நடைபெற்று வரும் கருப்பர் உயிர்கள் முக்கியம் போராட்டத்துடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு நிதி அளிக்க வழி செய்திருந்தனர்.
தொழில்நுட்ப உலகில் இருப்பவர்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்களை எல்லாம் பற்றி கவலைப்படாமல், எப்போதும் பிரத்யேக செயலிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் போக்கை விமர்சிக்கவே இந்த விளையாட்டு முயற்சியை மேற்கொண்டோம், ஆனால் இதன் எதிர்பாராத வெற்றியால் திக்குமுக்காடி போய், கருப்பர் போராட்டத்திற்கு ஆதரவாக நிதி திரட்டி அளிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கிறோம் என தங்கள் விளக்கத்தில் தெரிவித்திருந்தனர்.
இதில் பலருக்கு லேசான வருத்தம். அதோடு, இந்த புதிய முயற்சிக்கு நிதி அளிக்க தயாராக இருந்த முதலீட்டாளர்களில் பலருக்கு கடுப்பும் ஏற்பட்டுள்ளது.
இத்தனைக்கு பிறகும், தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் சிலர், எல்லாம் சரி, நிதியை வாங்கி கொண்டு ஏதேனும் நிறுவனத்தை துவக்குங்கள் என்கின்றனராம். அப்படி செய்தால், எங்கள் முயற்சியின் நோக்கமே பாழாகி போகுமே என்று இந்த திட்டத்தின் உறுப்பினர் ஒருவர் நச் என பதில் அளித்திருக்கிறார்.
எப்படி இருக்கிறது இந்த இணைய நிய வெப் சீரிஸ்.
-
தொடர்புடைய இணைப்புகள்: https://www.theverge.com/2020/6/27/21305646/it-is-what-it-is-fake-app-twitter-tiktok-meme