கடவுள் இணையதளங்களை காண வேண்டுமா!

இணையதளங்களில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால் கடவுள் போன்ற இணையதளங்கள் அவற்றில் ஒன்றா? எனத்தெரியவில்லை. அப்படி ஒரு ரகம் இருக்கிறது அல்லது இருக்க கூடும் என உணர்த்தும் வகையில் ’காட்லி.வெப்சைட்’ ( https://godly.website/) எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதென்ன கடவுள் இணையதளங்கள் என கேட்கலாம். வடிவமைப்பிலும், பயனர் இடைமுகத்திலும் மேம்பட்டதாக அமைந்திருக்கும் தளங்கள் தான் இவ்வாறு குறிப்பிடப்படுவதாக, இந்த தளத்தின் அறிமுக பக்கத்தின் மூலம் அறிய முடிகிறது.

இணையத்தில் உள்ள கடவுள் போன்ற இணையதளங்களின் படைப்பூக்க தொகுப்பாக இந்த தளம் உருவாக்கப்படுள்ளதாக, ரிஜிகில் தெரிவித்துள்ளார். இந்த தேர்வில் பெருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அடிப்படையில் பார்த்தால், இந்த தளம் சிறந்த தளங்களின் தொகுப்பு. இப்போது வழக்கொழிந்து போய்விட்ட, இணைய கையேடுகளின் நவீன வடிவம் என்று வைத்துக்கொள்ளலாம்.

அதாவது இந்த தளம் தோற்றத்திலும், வடிவமைப்பிலும் சிறந்த இணையதளங்களை கண்டறிந்து தொகுத்து தருகிறது. அந்த வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஊட்டம் (curated feed ) எனலாம்.

ஆக, வடிவமைப்பு நோக்கில் அருமையான தளங்களை இதில் கண்டறியலாம். இதற்கு காட்லைக் இணையதளம் என பெயர் சூட்டியிருப்பது மிகையாக தோன்றலாம். கவனத்தை ஈர்க்கும் படைப்புக்க சிந்தனை என்றும் கொள்ளலாம்.

புதிய இணையதளங்களை கண்டறிவதற்கான சிறந்த வழியாகவும் இந்த தளம் அமைகிறது. ஆனால் உள்ளடக்கம் சார்ந்த வகைப்படுத்தலாக இல்லாமல், வடிவமைப்பு மற்றும் பயனர் அம்சங்கள் சார்ந்திருப்பது கூட சுவாரஸ்யமான அம்சம் என்றே சொல்ல வேண்டும்.

இந்த தளத்தில், பயனர்கள் தங்களுக்கான கணக்கை உருவாக்கி கொண்டு இத்தகைய தொகுப்பை உருவாக்குவதற்கான வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

அருமையான இணையதளங்களை கண்டறியும் வழக்கம் நெடுநாளாக இருப்பதாகவும், அவற்றை பயனாளிகளுடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தை அமைத்திருப்பதாகவும், இதன் உருவாக்குனர் பிராடக்ட் ஹண்ட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தொடர்பான விவாத சரட்டில், இதே போலவே சாத்தான் தளங்களை ( மோசமாக வடிவமைக்கப்பட்ட தளங்கள்) பட்டியலிடலாம் என சிறிஸ் மெஸினா ( http://chrismessina.me/) யோசனை தெரிவித்திருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. மெஸினா ஒன்றும் சாதாரணமான நபர் இல்லை. இணைய உலகமே கொண்டாடும், # ஹாஷ்டேக் கருத்தாக்கத்தை டிவிட்டரில் முன்வைத்து பிரபலமாக்கிய ஆளுமை அவர்.