நினைத்தை முடிக்க ஒரு செயலி
உண்மையில், இந்த பதிவுக்கான தலைப்பு, நினைத்ததை முடிக்க உதவும் இன்னும் ஒரு செயலி என இருக்க வேண்டும். ஏனெனில் நாம் இன்று பார்க்க இருப்பது, நாம் நினைப்பதை செய்து முடிக்க உதவும் செயலி.
இந்த வகை செயலிகள் அநேகம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அதாவது, பயனாளிகள் செய்ய விரும்பும் அல்லது திட்டமிடும் செயல்களை அவ்வண்ணமே செய்து முடிக்க உதவும் செயலிகள்.
இத்தகைய செயல்கள் ஆங்கிலத்தில் டு டூ லிஸ்ட் எனப்படுகின்றன. ( ) அதாவது ’செய்’ பட்டியல்கள். மனதில் உள்ள இலக்குகளை அடைய வேண்டும் என்றாலும் சரி, தினசரி செய்ய வேண்டியவற்றை மறக்காமல் செய்து முடிக்க வேண்டும் என்றாலும் சரி, அவற்றுக்கான பட்டியலை உருவாக்கி கொள்ளவும், பின்னர் பட்டியலில் உள்ளவற்றை செய்து முடிக்க நினைவூட்டவும் உதவும் இணைய சேவைகள் பல இருக்கின்றன. இவை செய் பட்டியல் சேவைகள் என குறிப்பிடப்படுகின்றன.
திடுடே.ஆப் (https://thetoday.app/ ) செயலியும் இந்த வரிசையில் தான அறிமுகம் ஆகியிருக்கிறது. ஆனால், இந்த செயலியை உருவாக்கியவர் இதை வழக்கமான செய் பட்டியல் செயலியாக முன்னிறுத்தாமல், துணை திட்ட செயலியாக அறிமுகம் செய்திருக்கிறார்.
நம்மில் பலருக்கும் துணை திட்டங்கள் (side-project ) இருக்கலாம். அது புதிய இணைய சேவையை உருவாக்கும் விருப்பமாக இருக்கலாம். அல்லது ஒரு நாவல் எழுதும் திட்டமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அவற்றை நினைத்தால் மட்டும் போதாது, செய்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், துணை திட்டத்தை மனதில் நினைத்து மட்டுமே கொண்டிருந்தால் என்ன பயன்? இந்த இடத்தில் தான், மேலே சொன்ன திடுடே ஆப் வருகிறது. இந்த செயலியில், இணைந்து துணை திட்டங்களை குறிப்பிட்டு அவற்றுக்கான செயல்களை குறித்து வைத்துக்கொள்ளலாம். தொடர்ந்து அந்த செயல்களை நினைவில் கொண்டு, செய்து முடிக்க இந்த செயலி உதவியாக இருக்கும்.
செய் பட்டியல்களை மட்டும் முன்னிறுத்தாமல், செய்ய வேண்டிய செயல்களை செய்து முடிக்க ஊக்குவித்து, அவற்றை ஒரு பழக்கமாக இந்த செயலி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் செயல்படுகிறது. உங்கள் மனதிலும் ஒரு துணை திட்டம் இருந்தால் பயன்படுத்திப்பாருங்கள், ஆல் தி பெஸ்ட்!