யூடியூப்பிற்கு சவால் விடும் மாற்று வீடியோ சேவை ’யூட்ரியான்’
இணையத்தில் வீடியோ என்றால் யூடியூப் தான் எனும் எண்ணத்தை மாற்றக்கூடிய வீடியோ சேவைகளின் வரிசையில் புதிதாக வந்திருக்கிறது யூட்ரியான் (https://utreon.com/). யூடியூப் உருவாக்குனர்களும் சரி, யூடியூப் பயனாளிகளும் சரி, இந்த மாற்று வீடியோ சேவையை அறிந்து கொள்வது நல்லது.
யூடியூப்பிற்கு மாற்று எனும் அறிமுகத்தை கேட்டவுடன், அதெல்லாம் யூடூப்பை அசைப்பது சாத்தியமில்லை என எழும் எண்ணத்தை விட்டுவிட்டு, இந்த புதிய சேவையில் அப்படி என்ன தான் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாமே.
புதிய இணைய வீடியோ மேடை என வர்ணித்துக்கொள்ளும் யூட்ரியான் எதிர்பார்க்க கூடியது போலவே வீடியோக்களை பகிர்ந்து கொள்ளவும், பார்த்து ரசிப்பதற்கான தளமாக விளங்குகிறது.
யூடியூப்புடன் ஒப்பிடும் போது இதன் இடைமுகம் சிறப்பாக இருக்கிறது என்பதை சொல்வதைவிட, யூடியூப் இடைமுகத்தை பார்த்து பழகியவர்களுக்கு இதன் இடைமுகம் மாறுபட்டதாக இருப்பதாக சொல்லலாம். யூட்ரியான் முகப்பு பக்கத்தில், வீடியோக்கள், வீடியோக்களை தவிர வேறில்லை என்று சொல்லும் வகையில், வரிசையாக வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.
வீடியோ வரிசையில் இருந்து எளிதாக விரும்பிய வீடியோக்களை கண்டறியும் வகையில், முதல் வரிசையாக வாரத்தின் சிறந்த வீடியோ முன்னிறுத்தப்பட்டு, அடுத்த வரிசைகளில் மற்ற வீடியோக்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வீடியோவுடனும், அதன் தலைப்பு, உருவாக்குனர், பதிவேற்றப்பட்ட காலம் ஆகிய விவரங்கள் இடம்பெறுகின்றன.
வீடியோ வரிசைகளை உலாவியபடி பார்த்தால், இடப்பக்கம், உங்களுக்கான சேனல்கள் பட்டியலிடப்படுகின்றன. அதற்கு மேலே பார்த்தால், வீடியோக்களுக்கான தலைப்புகளை பார்க்கலாம். அதை கிளிக் செய்தால், அனிமி, கலை, ஆட்டோமொபைல், அழகு கலை, வர்த்தகம், காமெடி, பொருளாதாரம் என வீடியோ வகைகள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
வீடியோ வகைகளில் இருந்து விரும்பிய பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும், சேனல்களும், வீடியோக்களும் முன்னிறுத்தப்படுகின்றன. சேனல்களை பின் தொடரும் வசதியும் இருக்கிறது. யூடியூப் போல இன்னும் யாருக்கும் லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் எல்லாம் சேரவில்லை.
இதன் வீடியோ பிளேயரும் அழகாகவே இருக்கிறது. வீடியோ தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வதோடு, யூடியூப் போலவே வலப்பக்கம் தொடர்புடைய வீடியோக்களின் பட்டியல் வருகிறது. வீடியோக்களுடன் பதிவுடன் வசதியும் தனியே இருக்கிறது. வீடியோக்களை லைக் செய்வது, கருத்து தெரிவிப்பது ஆகிய வசதிகளும் இருக்கின்றன. பாலோ செய்யலாம், சந்தாதாராகவும் சேரலாம்.
உருவாக்குனர்களை பொருத்தவரை வீடியோக்களை பதிவேற்றவும், சேனல் துவக்கவும் தனிப்பகுதி இருக்கிறது.
எல்லாம் சரி, யூடியூப்புடன் ஒப்பிடும் போது இந்த தளம் எப்படி இருக்கிறது? எனும் கேள்விக்கான பதிலை உங்கள் வசமே விட்டுவிடுகிறேன். ஆனால், யூடியூப்பிற்கு மாற்று சேவை என்ற முறையில் நிச்சயம் வரவேற்கலாம்.
அதோடு யூடியூப் போன்ற சேவைகளின் ஏகபோக நிலை எப்போதும் பிரச்சனை தான். அதிலும் அண்மைக்காலமாக யூடியூப் தொடர்பாக எண்ணற்ற அதிருப்திகள் இருக்கின்றன. எனவே மாற்று சேவையான யூட்ரியானை முயற்சிக்கலாம்.
யூட்ரியானில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்த தளத்தை பயன்படுத்துவதற்காக யூடியூப்பை விட்டு வெளியேற வேண்டும் என்றில்லை. யூடியூப்பில் பதிவேற்றும் வீடியோக்களை இங்கேயும் பகிரலாம். அதற்கான எளிதான இணைப்பு வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சந்தாதாரர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் வாய்ப்பும் உள்ளது.
பயனாளிகளைப்பொருத்தவரை கொஞ்சம் யூடியூப்பை கடந்து வெளியே வாருங்கள் என்பதே என் கோரிக்கை.
மாற்று யூடியூப் சேவைகளில் விமியோ (https://vimeo.com/log_in) தான் ஆகச்சிறந்தது என்றாலும், யூட்ரியான் புதிய வரவு என்பது மட்டும் அல்லாமல், கட்டணச்சுவர் வரம்புகள் இல்லாமல் வெகுஜனமயமாக இருக்கிறது.