ஸ்டீவ் ஜாப்ஸ் தோன்றும் புதிய திரைப்படம் !?
மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புதிய திரைப்படம் வெளியாகி இருப்பது உங்களுக்குத்தெரியுமா? ஏற்கனவே வெளியான திரைப்படம், ஜாப்சின் தொழில்நுட்ப வாழ்க்கையை விவரித்த நிலையில், டைனி டைரண்ட் எனும் புதிய திரைப்படம், ஜாப்சின் பிள்ளைப் பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு அமைந்துள்ளது.
பிரட்டன் எழுத்தாளர் ரீஜன் ஆல்ட்ஷில்லர் எழுதிய பாய் கிங்- தி மேக்கிங் ஆப் ஸ்டீவ் ஜாப்ஸ் எனும் புத்தகத்தை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படம், ஜாப்சின் ஆரம்ப காலத்தை, உலகை மாற்றக்கூடிய அவரது அடிப்படையான அம்சங்கள் உண்டான காலத்தை அழகாக சித்திரித்திருப்பதாக பாராட்டப்படுகிறது.
ஜாப்ஸ் தவழும் குழந்தையாக இருந்த போதே தலைமை பண்பை உணர்த்தும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த திரைப்படம் ஜாப்ஸ் அபிமானிகளை நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்று நம்பலாம்.
இது வரை அறிந்திராத ஸ்டீவ் ஜாப்சை அறிமுகம் செய்யும் டைனி டைரண்ட் திரைப்படம் பற்றி இன்னும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஏனென்று பார்ப்பதற்கு முன், ’ஜாப்ஸ் பற்றி இப்படி ஒரு திரைப்படம் வந்ததா, எனக்குத்தெரியாதே’ என்று சந்தேகம் கொள்பவர்கள் தங்களை தாங்களே பாராட்டிக்கொள்ளலாம். ஏனெனில், டைனி டைரன் என்ற பெயரில் ஜாப்ஸ் வாழ்க்கை வரலாறு படம் எதுவும் வெளியாகவில்லை. அது மட்டும் அல்ல, தி பாய் கிங் என்றெல்லாம் ஜாப்ஸ் பற்றி எந்த புத்தகமும் எழுதப்படவில்லை.
அப்படி என்றால், எதற்கு இந்த செய்தி என கேட்பவர்கள், சற்று பொறுமையாக ஸ்கூபர்டினோ ( https://scoopertino.com/) இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம்.
ஆப்பிளும், ஆப்பிள் சார்ந்த செய்திகளுக்கும் என்றே உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதளம் ஸ்கூபர்டினோ. எனவே ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் தொடர்பான செய்திகளையும் இந்த தளத்தில் காணலாம். இணையத்தில் ஆப்பிள் நிறுவனம் சார்ந்த இணையதளங்கள் பல இருக்கின்றன என்றாலும், ஸ்கூபர்டினோ கொஞ்சம் வித்தியாசமானது.
இது ஆப்பிள் செய்திகளுக்கான தளம் அல்ல, மாறாக ஆப்பிள் தொடர்பான கற்பனை செய்திகளுக்கான இணையதளம். இட்டுக்கட்டுவதற்கு உரித்தான எல்லாவற்றுக்குமான இணையதளம் எனும் அறிமுக வாசகத்தை கொண்டுள்ள இந்த தளம், ஆப்பிள் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் தொடர்பான கற்பனையான ஆனால் படிக்கும் போதே நியமானது என தோன்றக்கூடிய செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இதை ஒரு பகடி இணையதளம் என்று சொல்லலாம். தொழில்நுட்ப உலகில் ஆப்பிள் மற்றும் அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சிற்கும் தனி மதிப்பு இருக்கத்தானே செய்கிறது. புதிய ஐபோன் அறிமுகமாகிறது என்றால், அதன் குதிரை கொம்பு விலையையும் பொருட்படுத்தாமல், நள்ளிரவு முதல் ஐபோன் கடைகளில் வரிசையில் காத்திருப்பது ஆப்பிள் மீதான அபிமானம் காரணமாகத்தானே.
இதே காரணத்திற்காக தான், ஜாப்சின் தொழில்நுட்பம் தீர்கதரிசனத்தையும், அவரது ஆளுமையையும் சுட்டிக்காட்டும் எந்த கட்டுரையும் ஆர்வத்துடன் படிக்கப்படுகிறது. இணையத்தைப்பொருத்தவரை ஜாப்ஸ் இன்னமும் பேசுபொருளாகவே இருக்கிறார்.
இந்த தன்மையை பகடி செய்யும் வகையில் ஸ்கூபர்டினோ இணையதளம், ஆப்பிள் தொடர்பான கற்பனை செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. வம்போ, வில்லங்கமோ இல்லாமல் எல்லாமே படித்து ரசிக்கும் ரகம் என்பது இந்த தளத்தின் தரத்திற்கு சான்று.
இப்படி தான், இந்த தளத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி இதுவரை எடுக்கப்படாத புதிய திரைப்படம் தொடர்பான விமர்சனம் வெளியாகி இருக்கிறது. இந்த விமர்சனம் வெளியாகி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டாலும் இப்போது படித்தாலும் இன்னும் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.
ஆனால் ஒன்று, ஸ்கூபர்டினோ தளத்தை பற்றி விஷயம் தெரியாதவர்கள் இந்த விமர்சனத்தை படித்தால் அப்படியே நம்பி விடுவார்கள் என்பதோடு, நெட்பிளிக்சில் ஜாப்ஸ் புதிய திரைப்படம் கிடைக்குமா என்றும் கேட்கலாம். அதிலும் குறிப்பாக, இந்த தளத்தில் இருந்து எடுத்தாளப்படும் செய்தியை சமூக ஊடகங்களில் படிக்க நேர்ந்தால் நிச்சயம் நம்பி விடுவார்கள்.
இப்படி தான், அண்மையில் ஜேம்ப்ஸ் பாண்டு நடிகர் சீன் கானரி மறைந்த போது, அவர் ஜாப்சிற்கு எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரலானது. ஜாப்ஸை அவர் கடுமையாக விமர்சித்தததாக சொல்லப்படும் அந்த கடிதம் உண்மையானது அல்ல; அந்த கடிதம் ஸ்கூபர்டினோ தளத்தின் கைவண்ணம் தான்.
2011 ல் வெளியான கற்பனை கடிதம் என்பதை மீறி அந்த கடிதம் இணையத்தில் அவப்போது வெளியாகி வைரலாகிறது என்றால் அதன் சிறப்பை பார்த்துக்கொள்ளுங்கள். சீன் கானரி மறைந்த போதும் இப்படி தான் வைரலானது.
ஆக, இணையத்தில் உலாவுகிறவர்கள் ஸ்கூபர்டினோ தளத்தை அறிந்திருப்பது நல்லது. ஏனெனில், ஸ்கூபர்டினோ தளத்தின் ஆக்கங்களை படிக்கும் போது அதை ரசிக்க வேண்டுமேத்தவிர நம்பி விடக்கூடாது. முக்கியமாக அதன் தன்மை தெரியாமல் சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது.
உண்மையில்லான ஆப்பிள் செய்திகள் ( unreal apple news) எனும் டேக் லைனுடன் செயல்படும் இந்த தளத்தின் நோக்கத்தை அறிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும் அவசியம். இதே போலவே, பகடி நோக்கில் செய்திகளை வெளியிடும் தளங்கள் இருக்கின்றன என்பதையும் இணையவாசிகள் அறிய வேண்டும்.
பொய்ச்செய்திகளை பரப்பும் போலி இணையதளங்களை அறிந்திருப்பது போலவே, கேலி, கிண்டல், பகடிக்கான தளங்களையும் அறிந்திருக்க வேண்டும். அதற்காக தான் இந்த பதிவு. ஆர்வம் உள்ளவர்கள் உடனடியான ஆனியன் (http://www.onion.com/ ) போன்ற தளங்களுக்கு சென்று பார்க்கலாம்.