ஆர்ச்சரிக்காக அருமையான இணையதளம்
அண்மையில் கண்டறிந்த ஆர்ச்சரிலைப்ரரி (https://www.archerylibrary.com/ ) இணையதளத்தை பார்த்ததும், அட, அருமையான இணையதளமாக இருக்கிறதே என அசந்து போனேன். அதிலும் குறிப்பாக இந்த தளம், 1998 ம் ஆண்டு முதல் இணையத்தில் இருப்பதை அறிந்து இன்னும் வியந்தேன்.
இந்த தளம், ஆர்ச்சரி என அழைக்கப்படும் வில்வித்தை விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கானது என்றாலும், இந்த தளத்தின் இருப்பை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில், இணையத்தின் சாத்தியங்களுக்கான எடுத்துக்காட்டாக இந்த தளம் அமைந்திருப்பதோடு, நாம் எத்தகைய இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்பதற்கான அருமையான உதாரணமாகவும் இந்த தளம் விளங்குகிறது.
ஒருவிதத்தில் பார்த்தால், இந்த தளத்தை இணையத்தின் முன்னோடி தளங்களில் ஒன்றான பிராஜெக்ட் குடென்பர்க் தளத்தை போன்றது என கூறலாம். அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், இணைய புத்தகங்களை பட்டியலிடும், ஆன்லைன்புக்ஸ் (https://onlinebooks.library.upenn.edu/archives.html#foreign ) தளத்தில் பட்டியலிடப்பட்டிருப்பதன் மூலம் இந்த தளத்தை கண்டறிந்தது. அநேகமாக வேறு வழிகளில் இந்த தளத்தை கண்டறிவது அரிது. நானறிந்த வரை, கூகுள் தேடலிலும் இந்த தளத்தை கண்டறிவது கடினம் என்றே நினைக்கிறேன்.
ஆர்ச்சரிபுக்லைப்ரரி தளம் அப்படி என்ன செய்கிறது என்றால், பெரிதாக வேறு ஒன்றும் இல்லை- ஆர்ச்சரி விளையாட்டு தொடர்பான புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளின் டிஜிட்டல் வடிவை அணுக வழி செய்கிறது. வில்வித்தை ஆர்வலர்களுக்கு இதன் அருமை தெரியும்.
புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை பட்டியலிட்டாலும், அவை எல்லாமே காப்புரிமை விடுபட்டு பொதுவெளியில் இருப்பவை. மிக எளிமையாக அமைந்திருக்கிறது இந்த தளம். ஆனால் வில்வித்தை ஆர்வலர்கள் இதை பொக்கிஷமாக கருதலாம். ஏனெனில், வில்வித்தை நுட்பங்கள் மற்றும் வரலாறு தொடர்பான புத்தகங்களை எளிதாக அணுக வழி செய்வது தான்.
குறிப்பிட்ட ஒரு துறை சார்ந்த தகவல்களை அணுக வழி செய்வதும், அதைவிட முக்கியமாக அத்துறை சார்ந்த புத்தகங்களையும், கட்டுரைகளையும், டிஜிட்டல்மயமாக்கி ஆவணப்படுத்துவதும், அவற்றை எல்லோரும அணுக வழி செய்வதும் இந்த தளத்தின் சிறப்பு என்பதை உணரலாம்.
இதே போன்ற இணையதளம் நம்முடைய துறைக்கும் இருந்தால் எப்படி இருக்கும் என மற்ற துறையை ச்சேர்ந்தவர்களை நினைக்க வைக்கும் வகையில் இந்த தளம் உள்ளதாக கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?