உங்கள் பிரவுசருக்கு ஒரு கடிவாளம்
பிரவுசரும் நம் மேஜை போல தான். நமக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் மேஜையில் அடுக்கி வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும் போது எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இதில் ஒரு ஒழுங்கு இல்லாவிட்டால் , பொருட்கள் குவிந்து அலங்கோலமாகிவிடும்.
எல்லாம் சரி, இதற்கும் பிரவுசருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கலாம். மேஜையில் பொருட்களை அடுக்கி வைப்பது போலவே, பிரவுசரிலும், நமக்கு தேவையான இணையதளங்களை எல்லாம் அடுத்தடுத்து திறந்து வைக்கலாம். ஒரே பிரவுசர் விண்டோவில் இப்படி பல தளங்களை டேப்களாக திறந்து கொள்ளலாம்.
இந்த வசதி பயனுள்ளது என்றாலும், கணக்கில்லாமல் டேப்களை திறந்து வைத்திருந்தால், மேஜை போலவே, பிரவுசரும் அலங்கோலமாகிவிடும். எந்த தளம் எங்கிருக்கிறது என த்தெரியாததோடு, எந்த டேபை எதற்காக திறந்தோம் என்றும் கூட தெரியாமல் போகலாம். அதோடு, இணைய வேகமும் பாதிப்புக்குள்ளாகலாம்.
இந்த பிரச்சனை எனக்கும் இருக்கிறது என நீங்கள் நினைத்தால், டென் டேப்ஸ் நோமோர் (https://ten-tabs-no-more.web.app/ ) எனும் இணைய சேவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குரோம் உள்ளிட்ட பிரவுசர்களில் நீட்டிப்பாக செயல்படக்கூடிய இந்த சேவை, உங்கள் பிரவுசரில் பத்துக்கு மேல் டேப்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறது.
பிரவுசரில் ஏற்கனவே பத்து டேப்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், பதினொன்னாவதாக நீங்கள் ஒரு டேபை திறந்தால் உடனே இந்த நீட்டிப்பு பழைய டேப்களில் ஒன்றை நீக்கிவிடுகிறது. ஆக, நீங்கள் கணக்கில்லாமல் டேப்களை திறந்து வைத்து திண்டாடும் அவசியம் இருக்காது.
குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களில் இதை பயன்படுத்தலாம். நீக்கப்பட வேண்டிய டேப் அதிகம் பயன்படுத்தாததா அல்லது ஏதாவது ஒன்றா என்பதை நீங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம். டேப்களுக்கான பத்து எனும் கட்டுப்பாடு எண்ணிக்கையையும் மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு: https://ten-tabs-no-more.web.app/