லட்சிய வேலைவாய்ப்பு இணையதளம்
வேலை தேடுபவர்களுக்கு தான் வேலைவாய்ப்பு தளங்கள் ஆர்வம் அளிக்க கூடியதாக இருக்கும் என்றில்லை. வேலைவாய்ப்பு தளத்தின் நோக்கமும், உள்ளடக்கமும் புதுமையாக இருந்தால் மற்றவர்களுக்கும் அதில் ஆர்வம் உண்டாகும். அப்படியொரு புதுமையான வேலைவாய்ப்பு இணையதளம் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
கிளைமேட்பேஸ்.ஆர்க் ( https://climatebase.org/) எனும் அந்த தளத்தை லட்சிய வேலைவாய்ப்பு இணையதளம் என வர்ணிக்கலாம். ஏனெனில் லட்சிய நோக்கிலான வேலைவாய்ப்பை தேடுபவர்களை அத்தகைய வாய்ப்புகளுடன் இணைக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள இணையதளம் இது.
லட்சியம் என்பதற்கு பல விதங்களில் பொருள் கொள்ளலாம் என்றாலும், பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு என்பதை இந்த இடத்தில் லட்சியமாக கொள்ளலாம்.
வளர்ச்சி எனும் பெயரில் மனிதகுலம் மேற்கொள்ளும் கண்டுமூடித்தனமான செயல்பாடுகளால் இப்புவிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளே பருவநிலை மாற்றம் என குறிப்பிடப்படுகிறது. இதன் தாக்கம் குறித்தும், இதை சரி செய்வதற்கான அவசியம் குறித்தும் வல்லுனர்களும், செயல்பாட்டாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் எண்ணற்றவர்கள் களத்தில் இறங்கியும் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டியலில், தொழில்முனைவோரும், சமூக நோக்கிலான நிறுவனங்களும் உண்டு.
இந்த இடத்தில் தான் கிளைமேட்பேஸ் இணையதளம் வருகிறது. பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணரந்த பலர், தாங்கள் பார்க்கும் வேலையும் களப்பணியாக அமைந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கலாம். அதாவது, ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதை விட, பருவநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வழங்குவதை தனது செயல்பாடாக கொண்டுள்ள நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என விரும்பலாம்.
இத்தகைய நிறுவனங்களை பட்டியலிட்டு, அவற்றில் உள்ள வேலைவாய்ப்புகளை அடையாளம் காண உதவுகிறது கிளைமேட்பேஸ் இணையதளம். அதே நேரத்தில், பருவநிலை மாற்றம் சார்ந்த நிறுவனங்கள் தங்களுக்கு பொருத்தமான திறமையாளர்களை கண்டறியவும் உதவும் வகையில் இந்த தளம் அமைந்திருக்கிறது.
வேலை தேடுபவர்களையும், வேலை தரும் நிறுவனங்களையும் இணைப்பது தான் வேலைவாய்ப்பு தளங்களின் அடிப்படை என்றாலும், இந்த தளம், பருவநிலை பாதுகாப்பு எனும் லட்சிய நோக்கில் இந்த இணைப்பை மேற்கொள்கிறது.
ஆக, பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு உள்ளவர்கள், இந்த தளம் மூலம் தாங்கள் எதிர்பார்க்கும் லட்சிய வேலைவாய்ப்புகளை தேடலாம். எந்த எந்த பிரிவுகளில் இத்தகைய வேலைவாய்ப்பு இருக்கிறது என்பதும் இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மட்டும் அல்லாமல், பயிற்சி வேலவாய்ப்புகளையும் தேடலாம். நகரங்கள் அடிப்படையிலும் வேலைவாய்ப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும், பருவநிலை மாற்றம் தொடர்பான நடைபெறும் இணைய நிகழ்வுகளுக்கான இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
உலகில் பருவநிலை மாற்றத்திற்காக செயல்பட்டு வரும் நிறுவனங்களையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஈவான் ஹைன்ஸ் (Evan Hynes ) என்பவர் இந்த தளத்தின் இணை நிறுவனராக இருக்கிறார்.
பிராஜெக்ட் டிராடவுன் (Project Drawdown’ ) வெளியிட்ட பருவநிலை மாற்றத்திற்கான 100 தீர்வுகள் எனும் கருத்தாக்கம் பற்றி அறிந்த போது, இவை தொடர்பான செயல்பட்டு வரும் நிறுவனங்களை அடையாளம் கண்டு பட்டியலிடும் முயற்சியை மேற்கொண்டதாகவும், அந்த பட்டியலே வேலைவாய்ப்பு தளமாக உருவானதாகவும் ஹைன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.