நிறுவனங்களுக்கான உறுதிமொழி
குறிப்பிட்ட கருத்தாக்கம் அல்லது போக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தி அதற்காக என்றே ஒரு இணையதளத்தை அமைக்கலாம். இதற்கான உதாரணமாக, வொர்க்ரிமோட்லிபாரெவர் (https://www.workremotelyforever.com/ ) தளத்தை குறிப்பிடலாம்.
கோவிட்-19 காலத்தில் பிரபலமான தொலைதூர பணி தொடர வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தி இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
தொலைதூர பணியை வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பாகவும் புரிந்து கொள்ளலாம். கொரோனா பாதிப்பு பொதுமுடக்கத்திற்கு நடுவே பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பை அளித்தன.
பல நிறுவனங்கள் இதை தற்காலிக ஏற்பாடாக கருதினாலும், ஊழியர்களும் அலுவலகத்திற்கு சென்று பணிபுரியும் சூழலுக்கு ஏங்கினாலும், இந்த நிலை தொடர வேண்டும் என எதிர்பார்ப்பவர்களும் இல்லாமல் இல்லை.
இத்தகைய எண்ணம் கொண்டவர்கள் சார்பில் தொலைதூர பணி போக்கு தொடர வேண்டும் என குரல் கொடுப்பதற்காக இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட கால தொலைதூர பணி அனுபவம் செயல்திறனை வெளிப்படுத்த ஊழியர்கள் நிறுவன வளாகத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதை உணர்த்தியுள்ள நிலையில், வர்த்தக நிறுவனங்கள் ஊழியர்கள் பணியிடத்திற்கு திரும்பியாக வேண்டும் என நிர்பந்திப்பதில்லை எனும் உறுதிமொழியை மேற்கொள்வதை இந்த தளம் வலியுறுத்துகிறது.
இத்தகைய உறுதிமொழியை ஏற்றுக்கொண்டுள்ள நிறுவனங்களை பட்டியலிட்டுள்ளதோடு, மற்ற நிறுவனங்களும் இந்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் என ஊக்குவிக்கும் வகையில் இந்த தளம் அமைந்துள்ளது.
*
நிற்க, இந்த தளத்தின் கருத்தாக்கத்தை மனதில் நிறுத்தி யோசித்தால், ’இந்தி தேசிய மொழி இல்லை’ எனும் கருத்தாக்கத்தை வலியுறுத்தியும் நம்மவர்கள் சார்பில் ஒரு தளம் அமைக்கலாம் இல்லையா!