வாக்களித்தால் உணவு அளிக்கும் இணையதளம்
தேர்தல் இணையதளங்கள் என்றாலே, செய்திகளையும், தகவல்களையும் அளிப்பவையாக தான் இருக்க வேண்டுமா என்ன? இதர நடைமுறை உதவிகளை அளிக்கும் இணையதளங்களும் தேவை தான் அல்லவா! இந்த வரிசையில் வரும் அருமையான இணையதளம் தான் போல்ஸ்.பிட்சா ( https://polls.pizza/).
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட இந்த தளம், வாக்குப்பதிவு மையங்களில் கால்கடுக்க நிற்பவர்களுக்கு உணவு அளிப்பதற்காக என்று உருவாக்கப்பட்டது. (டிரம்ப் வெற்றி பெற்ற) 2016 அமெரிக்க தேர்தலில் உருவான இந்த தளம், (டிரம்ப் தோல்வியை தழுவியுள்ள ) 2020 தேர்தலின் போது, ஜனநாயக கடமை நிறைவேற்ற வரிசை காத்திருந்தவர்களில் பலருக்கு பசியாற்ற பிட்சா வழங்கி மகிழ்ந்திருக்கிறது.
அமெரிக்காவை பொருத்தவரை பிட்சாவை தேசிய உணவு என்று வர்ணிக்கலாம். பசி நேரத்தில் ஆர்டர் செய்து சாப்பிட வசதியான உணவாக பிட்சா அமைகிறது. ஆர்டர் செய்ய மட்டும் அல்ல, பசியில் இருப்பவர்களுக்கு அனுப்பி வைக்கவும் பிட்சா ஏற்ற உணவு தான்.
அதை தான் போல்ஸ்.பிட்சா தளம் செய்து கொண்டிருக்கிறது. தேர்தல் தினத்தில் வாக்குப்பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு உணவளிக்கும் வகையில் இந்த தளம் செயல்படுகிறது.
வாக்களிக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முற்படும் போது, வாக்குப்பதிவு மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருப்பது சோதனையாக அமையலாம். காத்திருப்போடு பசியும் சேர்ந்து கொண்டால் பெருஞ்சோதனையாக மாறிவிடலாம். இதனால் ஒரு சிலர் வாக்களிக்காமல் கூட சென்றுவிடலாம். அல்லது அத்தகைய தவிப்புக்கு உள்ளாகலாம்.
இதற்கு தீர்வு காணும் வகையில் தான், போல்ஸ்.பிட்சா இணையதளம் துவங்கப்பட்டிருக்கிறது. 2016 ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், பல வாக்குப்பதிவு மையங்களில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதை பார்த்த போது, அதற்கு உடனடித்தீர்வாக இந்த தளம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிசையில் காத்திருப்பவர்கள் பசியால் வாக்காளிக்காமல் செல்வதை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு பிட்சா வழங்கும் நோக்கத்துடன் உடனடியாக இந்த தளம் அமைக்கப்பட்டது. இதற்கென தனி டிவிட்டர் முகவரியும் உண்டாக்கப்பட்டது. நீண்ட வரிசைகளை கொண்ட வாக்குப்பதிவு மையங்கள் தொடர்பான தகவல் தெரிவித்தால், அவர்களுக்கு பிட்சா வழங்கப்பட ஏற்பாடு செய்தது. வீட்டில் இருந்து வாக்குப்பதிவு காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் விரும்பினால், இந்த செயலுக்கு உதவி செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவசர தேவையில் துவங்கப்பட்டாலும், 2016 வாக்குப்பதிவின் போது , இந்த தளம் ஆயிரக்கணக்கான வாக்காளர்களுக்கு பிட்சா உணவு வழங்கி கவனத்தை ஈர்த்தது.
இதன் தொடர்ச்சியாக, நடந்து முடிந்த 2020 தேர்தலிலும், வாக்காளர்களுக்கு பிட்சா வழங்கியிருக்கிறது. இந்த முறை கொஞ்சம் விரிவாக செயல்பட்டு, 25 அமெரிக்க நகரங்களில் உணவு வாகனங்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதற்காக உபெர் ஈட்ஸ் போன்ற நிற் நிறுவனங்களின் ஆதரவை பெற்றிருக்கிறது. தனிப்பட்ட நபர்களும் நன்கொடை அளிக்க வழி செய்திருக்கிறது.
தேர்தல் செயல்பாடு தொடர்பான மனிதநேய முயற்சிகளில் ஒன்றாக இந்த தளத்தை கருதலாம். வாழ்க ஜனநாயகம்!