
Discover more from இணைய மலர்
இணையத்தில் இசை கேட்டு ரசிக்க இனிய வழி

எப்.எம் என்பது பண்பலை வானொலியை குறிப்பது மட்டும் அல்ல: இணையத்தைப்பொருத்தவரை, .எப்.எம் என முடியும் இணையதளங்களை இசைமயமான தளங்கள் என கொள்ளலாம். உதாரணம் லாஸ்ட்.எப்.எம் - https://www.last.fm/
இன்னொரு உதாரணம் பிலிப்.எம்.எம் - https://blip.fm/all
இந்த தளத்தை இசைப்பிரியர்களுக்கான டிவிட்டர் என வர்ணிக்கலாம். அதைவிட, உங்கள் ஒவ்வொருவரையும் இசை தொகுப்பாளராக்கும் ( டி.ஜே) தளம் என்றும் குறிப்பிடலாம். எப்படி வர்ணித்தாலும், இசை கேட்டு ரசிக்கவும், புதிய இசையை கண்டறியவும் இந்த தளம் இனிய வழி என்பதை மறுப்பதற்கில்லை.
சொல்லப்போனால், இசை கேட்பதை சமுகமயமாக்கியிருக்கும் தளங்களின் வரிசையில் பிலிப்.எப்.எம் தளமும் வருகிறது.
எல்லாம் சரி, இந்த தளத்தில் என்ன சிறப்பு? இதை பயன்படுத்துவது எப்படி?
டிவிட்டர் சேவையை அறிந்தவர்கள், மிக எளிதாக இந்த சேவையை புரிந்து கொள்ளலாம். ஏனெனில், டிவிட்டர் எப்படி குறும்பதிவுகளை வெளியிட வழி செய்கிறதோ, அதே போல இந்த தளம் பாடல்களை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. ஆம், பிலிப் செய்வது என்றால், இந்த தளத்தின் மூலம் பாடல்களை பகிர்வது என்று பொருள்.
இந்த தளத்தில் உறுப்பினராகி உள் நுழைந்ததும், நீங்கள் பிலிப் செய்ய விரும்பும் பாடல்? எது என கேட்கப்படுகிறது. இந்த கேள்வியின் கீழ் உள்ள தேடல் கட்டத்தில், நீங்கள் விரும்பும் பாடல் அல்லது பாடகரை குறிப்பிட்டு தேடி, அந்த பாடலை பிலிப் செய்யலாம். அதாவது, இந்த தளத்தின் வாயிலாக குறும்பதிவு போல பகிர்ந்து கொள்ளலாம்.
அந்த பாடலை நீங்கள் கேட்டு ரசிப்பதற்கான காரணத்தையும் தெரிவிக்கலாம். இப்போது பார்த்தால், நீங்கள் பிலிப் செய்த பாடல், டைம்லைனில் உங்கள் பகிர்வாக தோன்றும். இந்த பாடலை சக உறுப்பினர்கள் விரும்பினால் கேட்கலாம்.
இதே போலவே, மற்ற பயனாளிகள் பகிரும் பாடல்களையும் நீங்கள் தேர்வு செய்து கேட்கலாம். புதிய இசையை கண்டறிவதற்கான சுவாரஸ்யமான வழியாக இது அமையும்.
இதனிடையே நீங்கள் பிலிப் செய்த பாடலை, அருகே தோன்றும் சின்ன இசை பிளேயரில் கேட்கவும் செய்யலாம். யூடியூப் உள்ளிட்ட இடங்களில் இருந்து பாடல் ஒலிபரப்பாகிறது.
பாடல்களை மற்ற சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். விரும்பினால், மற்றவர்கள் பகிர்ந்த பாடல்களையும், நீங்கள் மறு பிலிப் செய்யலாம். பாடல்களை ஒலிக்கச்செய்வது தொடர்பாக வேறு பல வசதிகளும் இருக்கின்றன.
பிடித்தமான பாடல்களை தொடர்ந்து பிலிப் செய்வதன் மூலம், நீங்கள் ஒரு டிஜேவாக செயல்படலாம். உங்களுக்கான விருப்ப பாடல் பட்டியலை உருவாக்கி கொள்ளலாம். இதே போல, சக டிஜேக்கள் பட்டியலை கேட்டு ரசிக்கலாம். அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். உங்கள் நண்பர்களை இந்த தளத்திற்கு அழைக்கலாம்.
இப்படி, இசை கேட்பதை நட்பு சார்ந்த செயலாக இந்த தளம் மாற்றிக்காட்டுகிறது.
டிவிட்டரும் பிடித்திருந்து, இசையும் பிடித்திருந்தால் இந்த இசை டிவிட்டர் சேவை இன்னமும் பிடித்தமானதாக இருக்கும். பெரும்பாலும் மேற்கத்திய பாடல்களே டைம்லைனில் தென்படுகின்றன என்றாலும், இளையராஜ பாடல்களை கண்டறிய முடிகிறது.
பயன்படுத்திப்பாருங்கள். உங்கள் கருத்தை பகிருங்கள்.
-
பி.கு: டிவிட் தமில்ஸ் வெளியீடான டிவிட்டர் கையேடு புத்தகத்தில் டிவிட்டர் சார்ந்த இசை சேவைகள் தொடர்பான இணையதளங்கள் பட்டியலில் இந்த பிலிப்.எப்.எம் தளம் கண்ணில் பட்டது. நன்றி!
அனுமதி பெற்ற இலவச மின்னூல்களுக்கான அருமையான முயற்சியான பிரிடமில்புக்ஸ் தளத்தில் இந்த நூலை வாசிக்கலாம்: http://FreeTamilEbooks.com
-