ஹாஷ்டேகுகளை தேட ..
சமூக ஊடக தேடியந்திரம் என்பதே நமக்கு புதிய சங்கதி. அப்படியிருக்க, ’ஹாஷ் அட் இட்’ (https://www.hashatit.com/), இந்த பிரிவில் தன்னை உச்சபட்ச தேடியந்திரம் என்று வர்ணித்துக்கொள்கிறது. அதாவது, கோலிவுட்டில் அஜித்தை அல்டிமேட் ஸ்டார் என்று சொல்வது போல, இது அல்டிமேஷ் சமூக ஊடக தேடியந்திரம்.
சமூக ஊடகங்கள் தெரியும், அதென்ன சமூக ஊடக தேடியந்திரம் என்று கேட்கும் போதே, சமூக ஊடகங்களில் தேடுவதற்கான பிரத்யேக தேடியந்திரம் என்று புரிந்து கொண்டு விடலாம். ஆம், ’ஹாஷ் அட் இட்’ சமூக ஊடகங்களில் தேடி வழி செய்கிறது.
நான்கு விதமாக இதில் தேடலாம். ஒன்று ஹாஷ்டேக் வழியே. மற்றபடி வழக்கமான குறிச்சொல் மற்றும் இணைய முகவரிகள் ( யூ.ஆர்.எல்) வாயிலாக தேடலாம். இவைத்தவிர குறிப்பிட்ட பெயர் சமூக ஊடகங்களில் எங்கெல்லாம் அடிபடிகிறது (@mention ) என்பதை கொண்டும் தேடலாம்.
ஒவ்வொரு வகையான தேடலுக்கும், அது தொடர்பான பதிவுகள், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் பிண்டிரெஸ்ட் உள்ளிட்ட இன்னும் பிற சமூக ஊடகங்களில் எங்கெல்லாம் வெளியாகி இருக்கின்றன என்று பட்டியல் போட்டு காண்பிக்கிறது.
முடிவுகள் பட்டியலிடப்படும் விதமும் காட்சிரீதியாக நேர்த்தியாக இருக்கிறது.
இப்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றெல்லாம் பெரிதாக பேசிக்கொண்டிருக்கின்றனர் அல்லவா? அந்த பிரிவில் இருப்பவர்கள் மற்றும் இணையத்தில் தங்கள் பிராண்ட் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை கவனித்துக்கொண்டே இருக்க விரும்புகிறவர்களுக்கு இந்த தேடியந்திரம் அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.
குறிப்பிட்ட ஹாஷ்டேகின் வீச்சை அறியவும் பயன்படுத்தலாம்.
நீங்களும் கூட தேடிப்பார்க்கலாம்.
-
ஷூக்களை தேட…
இன்னொரு சுவாரஸ்யமான தேடியந்திரம் பற்றியும் தெரிந்து கொள்வோம். ஸ்னீக்கர்ஸ்123 (https://sneakers123.com/en). இந்த தேடியந்திரம் ஸ்னீக்கர் வகை ஷூக்களை தேட உதவுகிறது. தேடியந்திரம் என்பதை விட இ-காமர்ஸ் தளம் போல இருந்தாலும், ஸ்னிக்கர் பிரியர்களுக்கு உற்சாகத்தை அளிக்க கூடிய தளம். நைக், அடிடாஸ் உள்ளிட்ட பிராண்ட்களை மேயந்துவிட்டு விருப்பமானதை வாங்கி கொள்ளும் வசதியும் இருக்கிறது. விலையையும் ஒப்பிட்டு பார்க்கலாம். சர்வதேச தளம் என்பதால், ஷாப்பிங் செய்யும் போது, ஷிப்பிங், பில்லிங் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
ஷூக்களை வாங்க வேண்டும் என்று கூட இல்லை, அண்மை பேஷனை தெரிந்து கொள்ளவும் இந்த தளத்தை நாடலாம்.
-
கோடிங் கலைஞரின் கைவண்ணம்
ஜிப்கள், வெறும் தொழில்நுட்பம் சார்ந்தவை மட்டும் அல்ல, அவை ஒரு கலை வடிவமும் தான். இப்போது, கோடிங் துணையோடு டிஜிட்டல் கலைஞர் ஒருவர் ஜிப்களை முற்றிலும் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
முடிவில்லா அசையும் படங்களான ஜிப் சித்திரங்களில், பொதுவாக ஒரு குறிப்பிட்ட காட்சியின் ஒரு சில செயல்களை (பிரேம்கள்) தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஜிப்களில் எண்ணற்ற வகை உண்டு என்றாலும், பொதுவாக யாரேனும் ஒருவரின் படம் அதில் இடம்பெற்றிருக்கும்.
ஆனால், ஜோ (Jo - @jn3008 ) எனும் பெயரில் அறியப்படும் டிஜிட்டல் கலைஞர் வடிவியல் பாணி உருவங்களை ஜிப்களாக உருவாக்கி வருகிறார். தொடர்ந்து உருமாறிக்கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை தரும் இந்த ஜிப்களை அவர் கோடிங் முறையில் உருவாக்குகிறார்.
இப்படி கோடிங் முறையில் சித்திரங்களை உருவாக்குவதற்கான பிராசஸிங் (“Processing” ) என்ப்படும் திறவுமூல மென்பொருள் கொண்டு இந்த நவீன கலை வண்ண ஜிப்களை அவர் படைத்து வருகிறார்.
ஜிப்கள் தொடர்பான உங்கள் பார்வையை மாற்றி அமைக்க கூடிய இந்த டிஜிட்டல் படைப்புகளை அவரது டிவிட்டர் பக்கம் மற்றும் இணையதளத்தில் பார்க்கலாம்: https://jn3008.tumblr.com/
-