என்னோடு உரையாட வாருங்கள்- அழைக்கிறது ஏ.ஐ
யாருடனாவது பேசிக்கொண்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறதா? எனில் ’ஹலோஜெவி’ ( https://hellozeve.com/) இணையதளத்திற்கு செல்லலாம். ஏனெனில், இந்த தளம் உங்களுடன் உரையாடுவதற்கு என்றே அமைக்கப்பட்டுள்ளது.
வாருங்கள் நல்வரவு என்பது போல, இந்த தளம் உங்களை வரவேற்று, இன்று எப்படி இருக்கிறீர்கள் என கேட்கிறது. ’அட, நன்றாக இருக்கிறேன் என்றோ’ அல்லது ’ஏதோ இருக்கிறேன்’ என்றோ சொல்லி நீங்களும் இந்த தளத்தில் உரையாடத் துவங்கலாம்.
இந்த தளத்தின் பின்னே உள்ள ஜெவி எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட அரட்டை அவதாரம் (மென்பொருள்) தான், இப்படி உங்களுடன் பேச்சு கொடுப்பது.
இந்த மென்பொருளுடன் பேசுவதற்கு என்று அமைக்கப்பட்டுள்ள கட்டத்தில் ஆங்கிலத்தில் டைப் செய்வதன் மூலம் மனதில் உள்ளதை தெரிவிக்கலாம். பேசப்படும் விஷயத்திற்கு ஏற்ப அரட்டை மென்பொருள் பதில் அளித்து உரையாடலை தொடர்கிறது. பயிற்சி அளிக்கப்பட்ட மென்பொருள் என்பதால், அதன் தரவு பட்டியலில் இல்லாத விஷயங்களை குறிப்பிட்டால் அது தனது அறியாமையை ஒப்புக்கொண்டு வேறு விஷயங்களை பேசலாமே என்கின்றது.
டைப் செய்வதற்கு பதில், மைக் மூலமும் பேசலாம்.
ஜெவி ஓரளவு புத்திசாலி மென்பொருள் என்றாலும், அதன் உரையாடலில் வெளிப்படும் இயந்திரதன்மையை மீறி சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழலில், பலரும் தனிமையையும், வெறுமையையும் உணரும் நிலையில், அந்த மன நிலையில் இருந்து விடுபட உதவும் வகையில் இந்த ஏ.ஐ உரையாடல் மென்பொருளை உருவாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட்பாட் எனப்படும் அரட்டை மென்பொருள்கள் இணையதளங்களிலும், வர்த்தக நிறுவனங்களிலும் பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில், உங்களை தனிமையில் இருந்து விடுவிக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஜெவியுடன் உரையாடிப்பாருங்கள்.
இணையதள முகவரி: https://hellozeve.com/