ஏ.ஐ செய்திகளுக்கான தேடியந்திரம்
ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான செய்திகள் அல்லது தகவல்கள் தேவை எனில் நீங்கள் என்ன செய்வீர்கள்? கூகுளில் ஏ.ஐ தொடர்பான தகவல்களை தேடிலாம் என்பது தான் இந்த கேள்விக்கான உங்கள் பதிலாக இருக்கும். ஆனால், ஏ.ஐ செய்திகளுக்காக என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஏ.ஐடாபிக்ஸ் (https://aitopics.org/search ) தேடியந்திரம் தான் இதற்கு பொருத்தமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
இந்த தேடியந்திரத்தில் என்ன சிறப்பு என்றால், செயற்கை நுண்ணறிவு ஆய்வுகள், முன்னேற்றங்கள், முன்னோடிகள் தொடர்பான தகவல்களை வலையில் இருந்து திரட்டுத்தருகிறது. கூகுளில் தேடுவது போலவே, இதிலும் குறிச்சொற்கள் கொண்டு இயந்திர கற்றல் (எம்.எல்) என்றோ, ஆழ் கற்றல் ( டீம் லேர்னிங்) என்றோ தேடினால், இந்த தலைப்புகளில் தொடர்புடைய அண்மை ஆய்வு தகவல்கள் மற்றும் முன்னேற்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
கூகுளின் பொதுவான தேடலில் நிச்சயம் இத்தகைய தெளிவான, இலக்கு சார்ந்த முடிவுகளை பார்ப்பது அரிது.
செயற்கை நுண்ணறிவு ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தேடியந்திரம் என்றாலும், இத்துறையில் ஆர்வம் உள்ள எவரும் பயன்படுத்தலாம்.
செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னேற்றம் மற்றும் ஊடகங்களில் கவனம் பெற்ற துறை சார்ந்த செய்திகளை அறிந்து கொள்ள வழி செய்வது மற்றும் பின்னணி விவரங்கள், பாடப்புத்தகங்களை கண்டறிய வழி செய்வதே இந்த தேடியந்திரத்தின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தகவல்களை தேடும் போது, பலவிதமான வடிகட்டல் வசதிகளை பயன்படுத்தலாம் என்பது இன்னும் சிறப்பு. செயற்கை நுண்ணறிவு தகவல்களை, செய்திகள், கருத்தரங்குகள், புத்தகங்கள், ஏ.ஐ சஞ்சிகை, முன்னோடி ஏடுகள் ஆகியவற்றில் இருந்து தேடலாம் என்பதோடு, ஒவ்வொரு தேடலையும் தொழில்நுட்ப பிரிவு, ஆய்வு வகை ஆய்வாளர்கள் உள்ளிட்ட பிரிவுகளிலும் தேடும் வசதி இருக்கிறது. இந்த பிரிவுகள் ஒவ்வொன்றிலும் துணை பிரிவுகளும் பல இருப்பதால் தேடலை ஆழமாகவும்,ல் விரிவாகவும் ஏற்படலாம்.
உதாரணத்திற்கு இயந்திர கற்றல் பற்றி தேடும் போது, தொடர்புடைய புத்தகங்களில் உள்ள தகவல்களை மட்டும் தேடலாம். அதே போல நாடுகளின் அடிப்படையிலும் தேடலை மேற்கொள்ளலாம்.
தேடல் முடிவுகளில் முதலில் வரைபடங்கள் முன்னிறுத்தப்பட்டும் தொடர்ந்து செய்திகள், கட்டுரைகள் பட்டியலிடப்படுகின்றன. ஐ2கனெக்ட் எனும் சொந்த தேடல் தொழில்நுட்பத்தையும் இந்த தளம் பெற்றுள்ளது.
மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கான சங்கம் (The Association for the Advancement of Artificial Intelligence (AAAI).) இந்த தேடியந்திரத்தை நிறுவியுள்ளது. இந்த சங்கம் ஏ.ஐ சஞ்சிகையையும் நடத்தி வருகிறது.
செய்ற்கை நுண்ணறிவு தகவல்களுக்கான தேடியந்திரம் என்பதால், செயற்கை நுண்ணறிவு கொண்டு தகவல்களை தேடித்தரும் நியூஸ்பைண்டர் சேவையையும் கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேடலில் கூகுள் நியூஸ் செய்திகளும் இடம்பெறுகின்றன.
இனி வருங்காலத்தில் ஏ.ஐ நுட்பத்தின் பங்கு நினைத்து பார்க்க முடியாத அளவு அதிகரிக்க இருப்பதால் இந்த தேடியந்திரத்தை புக்மார்க் செய்து கொள்ளவும்.
செயற்கை நுண்ணறிவின் வரலாற்றையும் இந்த தேடியந்திரத்தில் காலவரிசை பாணியில் அறிந்து கொள்ளலாம்.
பி.கு: உங்களுக்கு ஒரு சவால்- செயற்கை நுண்ணறிவு தேடியந்திரம் எனும் குறிச்சொல் தேடல் மூலம் கூகுளில் இந்த தேடியந்திரத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என பாருங்கள்.