உங்கள் இமெயில் தேடி வரும் புத்தகம்
தினம் ஒரு அத்தியாயமாக தவணை முறையில் ஒரு புத்தகத்தை படித்து முடிக்க விருப்பமா? எனில், பெட்டர்மார்னிங்ரீடிங் ( https://www.bettermorningreading.com/?) தளம் உங்களுக்கானது. இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்தால், இமெயில் மூலம் உங்களை புத்தகம் படிக்க வைக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகத்தின் பகுதிகளை தினம் ஒரு அத்தியாயமாக உங்கள் இமெயிலுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் அந்த புத்தகத்தை படித்து முடிக்க இந்த தளம் வழி செய்கிறது.
நன்கறியப்பட்ட இமெயில் செய்திமடல் சேவையை போன்றது தான் இந்த தளம். வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் செய்திமடல் வடிவில் இமெயிலில் புத்தக பகுதிகளை அனுப்பி வைக்கிறது.
இணையத்திலேயே புத்தகங்களை மின்னூல் வடிவில் வாசிக்கும் வாய்ப்பிருந்தாலும், வாசிப்புக்கு நேரம் இல்லை என சொல்பவர்கள் அல்லது ஆர்வம் இருந்தாலும் முழு புத்தகத்தையும் படிக்க முடிவதில்லை என்று சொல்பவர்களுக்காக, கொஞ்சம் கொஞ்சமாக இமெயிலில் ஒரு புத்தகத்தை படித்து முடிக்க உதவும் வகையில் இந்த சேவை அமைந்துள்ளது.
சமூக ஊடக சரடுகளை முடிவில்லாமல் பார்த்துக்கொண்டிருப்பதற்கு பதிலாக, புத்தகங்களை படிக்க அந்த நேரத்தை செலவிட முடிந்தால் எப்படி இருக்கும் எனும் கேள்வியின் அடிப்படையில் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இமெயிலில் புத்தகங்கள் தேடி வந்தாலும் காப்புரிமை சிக்கல் இல்லை.ஏனெனில், இதில் பகிரப்படும் புத்தகங்கள் எல்லாமே காப்புரிமை விடுபட்டு பொதுவெளியில் இருப்பவை. இப்போதைக்கு 41 புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே ஆங்கில புத்தகங்கள் என்பதை சொல்லாமலே புரிந்து கொள்ளலாம்.
இதில் உள்ள புத்தகங்களை இணையத்தில் மற்ற இடங்களிலும் வாசிக்கலாம் என்றாலும், அவற்றை இமெயிலில் அனுப்பி வைத்து வாசிக்க த்தூண்டுவது தான் இந்த சேவையின் நோக்கம். மேலும், இமெயிலில் புத்தக வாசிப்பை நிர்வகிக்கப்பதற்கான வசதியையும் அளிப்பதாக கூறுகிறது. அதனால் தான் முதல் புத்தக வாசிப்பு இலவசம். அதன் பிறகு கட்டணம் செலுத்த வேண்டும் என்கிறது.
இணைய யுகத்தில் புத்தக வாசிப்பு குறைந்து வருவதாக சொல்லப்படும் நிலையில், வாசிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள சேவைகளில் ஒன்றாக இது திகழ்கிறது. எளிமையான சேவை தான். இதில் பட்டியலிடப்படும் புத்தகங்களுக்கான அமேசான் இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. ( தளத்தின் விளம்பர வருவாய்க்கான உத்தி).
நீங்களும் முயன்று பார்க்கலாம்.
-
இந்த தளம் புதிதேத்தவிர, இப்படி இமெயிலில் புத்தகம் படிக்க வைக்கும் உத்தி இணையத்தில் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருக்கிறது. டெய்லிலிட் ( https://dailylit.com/) எனும் இணையதளம் இந்த வகையில் முன்னோடி தளமாகும். டெய்லிலிட் பற்றி என்னுடைய இணையதளத்தில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
இது தவிர, புத்தகங்களை படிக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. இவை பற்றிய அறிமுகங்கள்: புத்தகம் படிக்க உதவும் செயலி