யூடியூப் டிஸ்லைக் பட்டனை மீட்கும் வழி!
எல்லா இணையதள பெயர்களையும் தமிழில் மொழிபெயர்க்கும் வழக்கப்படி, ’விட்ஐகியூ’ (https://vidiq.com/) இணைய தளத்தை வீடியோ மூளை அல்லது வீடியோ அறிவித்துறன் என மொழிபெயர்க்கலாம். எனினும், நாம் விட்ஐகியூ என்றே பயன்படுத்துவோம்.
பெயர் என்னவாக இருந்தால் என்ன, உண்மையில் இந்த தளம் வீடியோ உருவாக்குனர்களுக்கான வழிகாட்டியாக செயல்படுகிறது என்பதே விஷயம். அதாவது யூடியூப்பில் எந்த வகை வீடியோ அதிக வரவேற்பை பெறுகிறது என்பதை சுட்டிக்காட்டி, அதே போன்ற வீடியோக்களை உருவாக்கி கொள்ள தேவையான புள்ளி விவரங்களை அளிக்கிறது இந்த தளம்.
யூடியூப் சேவையை பொருத்தவரை அதனளவில் முழுமையானது தான். வீடியோ தொடர்பான பார்வையாளர்கள் விவரங்களை எல்லாம் யூடியூபே வழங்குகிறது. யூடியூப் புள்ளிவிவரங்களை எப்படி புரிந்து கொள்வது, அதனடிப்படையில் வீடியோக்களை எப்படி உருவாக்குவது போன்ற தகவல்களை எல்லாம் அளிக்கும் அகாடமியையும் யூடியூப் கொண்டிருக்கிறது.
இருந்தாலும், யூடியூப்பை முழுவதும் நம்புவதற்கில்லை என நினைத்தால், இதே வகையான சேவையை அளிக்கும் மூன்றாம் தரப்பு தளமாக விட்ஐகியூ விளங்குகிறது. இந்த தளம் யூடியூப் பார்வையாளர்கள் தொடர்பான விரிவான புள்ளிவிவரங்களை அளிப்பதோடு, வீடியோக்களை உருவாக்க தேவையான வழிமுறைகளையும் அளிக்கிறது.
சார்புதன்மை இல்லாத புள்ளிவிவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வாயிலாக வீடியோ உருவாக்குனர்கள் தங்களுக்கான ரசிகர் பரப்பை புரிந்து கொண்டு அதற்கேற்ப உள்ளடக்கத்தை உருவாக்கி கொள்ள தேவையான பரிந்துரைகளியும், வழிகாட்டுதல்களையும் இந்த தளம் அளிப்பதாக சொல்கிறது.
அந்த வகையில், யூடியூப்பில் ஆர்வம் கொண்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான இணையதளம் என்பது மட்டும் அல்ல, இதன் பிரவுசர் நீட்டிப்பு சேவை வாயிலாக, வீடியோக்களுக்கான டிஸ்லைக் எண்ணிக்கை விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வீடியோவுக்கான டிஸ்லைக் பட்டனை மறைப்பது என யூடியூப் தீர்மானித்திருக்கும் நிலையில் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.