தமிழகம் என்ன டிவீட் செய்கிறது?
டிவிட்டர் வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒன்று டிவிட்டர் சார்ந்து உருவான துணை சேவைகள். சொல்லப்போனால் டிவிட்டருக்கு உருவானது போல வேறு எந்த சமூக வலைப்பின்னல் தளத்திற்கும் துணை சேவைகள் உருவானது இல்லை.
டிவிட்டருக்கான துணை சேவை எனும் போது, டிவிட்டரை இன்னும் சிறப்பாக அல்லது அதன் ஏதேனும் ஒரு அம்சத்தை எளிதாக அல்லது மேம்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்த உதவும் சேவை என புரிந்து கொள்ளலாம்.
இதற்கு எளிதான உதாரணம் தேவை எனில், டிவிட்லாங்கர். -https://www.twitlonger.com/
டிவிட்டர், 140 எழுத்துகளில் பதிவிடும் கட்டுப்பாட்டுடன் துவங்கிய சேவை என்பதால், அதைவிட நீளமான குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்ள விரும்பினால், அதற்கான வசதியை டிவிட்லாங்கர் வழங்கியது.
இதே போல, டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை அவற்றின் நிலப்பரப்பு சார்ந்து, வரைப்படத்தின் மீது அணுக வழி செய்யும் இணையதளங்களும் பல உருவாக்கப்பட்டன. உதாரணத்திற்கு, ’ஏ வேர்ல்டு ஆப் டிவீட்ஸ்’ எனும் இணையதளம், டிவிட்டரில் வெளியாகும் குறும்பதிவுகளை பூகோளரீதியாக காட்சிப்படுத்தியது. ஒவ்வொரு நாட்டில் இருந்து வெளியாகும் குறும்பதிவுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த நாடுகள் வரைபடத்தில் அடர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.
குறும்பதிவு புள்ளிவிவரங்களை காட்சிரீதியாக தெரிந்து கொள்ள உதவிய இந்த தளம் தற்போது பயன்பாட்டில் இல்லை. ஆனால், இதே போன்ற வசதியை ஒன்மில்லியண்டிவீட்மேப் தளம் வழங்குகிறது.: https://onemilliontweetmap.com/
இந்த தளம் உலக வரைபடம் மீது டிவிட்டர் தேசங்களையும், நகரங்களையும், சிற்றூர்களையும், கிராமங்களையும் அடையாளம் காட்டுகிறது. அதாவது, எந்த எந்த பகுதியில் எவ்வளவு குறும்பதிவுகள் வெளியாகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதிக பதிவுகள் என்றால் அந்த இடம், பெரிய வட்டமாக தோன்றுகிறது. குறைந்த பதிவுகள் எனில் சிறிய வட்டமாக காட்சி தருகிறது.
இவற்றில் விரும்பிய பகுதியை கிளிக் செய்து பெரிதாக்கி கொண்டே சென்றால், குறிப்பிட்ட இடத்தில் இருந்து வெளியாகும் குறும்பதிவுகள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளலாம். அந்த இடத்தில் இருந்து வெளியிடப்படும் குறும்பதிவுகளையும், தொடர்புடைய டிவிட்டர் முகவரையையும் காணலாம்.
டிவிட்டர் சார்ந்த ஆய்வுக்கு உதவும் இந்த தளம்.
மேலும் பலவிதமான புள்ளிவிவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பிக்டேட்டா என சொல்லப்படும் பெருந்தரவுகளை வரைபடத்தின் மீது பொருத்திப்பார்க்கும் சேவையை வழங்கும் மேப்டிமைஸ் எனும் நிறுவனம் இதற்கான தனது மென்பொருளை காட்சிப்படுத்துவதற்கான இந்த வரைபட டிவிட்டர் சேவையை உருவாக்கியுள்ளது.
-