இது தாண்டா (விளையாட்டு)இணையதளம்!
எந்த ஒரு விளையாட்டுக்கும் இப்படி ஒரு இணையதளம் இதுவரை உருவாக்கப்பட்டதில்லை என்று சொல்லும் வகையில் ஒரு அசத்தலான இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார் பால் மார்டினாஸ். அந்த இணையதளத்தை பார்த்தால் அட, நம்மூரில் கிரிக்கெட்டுக்கும், ஐபிஎல்-க்கும் இப்படி ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும் என்றும் நினைக்கத்தோன்றும்.
இந்த பீடிகையை பார்த்ததும், அந்த தளம் மிக பிரம்மாண்மான அம்சங்களுடன் இருக்கும் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள். பிளைன்டெக்ஸ்ட்ஸ்போர்ட்ஸ் ( https://plaintextsports.com/) எனும் அந்த தளம், கூடுதலான எந்த அம்சங்களும் இல்லாமல் மிக மிக மிக எளிமையாக இருக்கிறது.
உண்மையில் எளிமை தான் இந்த தளத்தின் பலமே. அதுவே இந்த தளத்தின் நோக்கமும் கூட!
கிரிக்கெட்டோ, கால்பந்தோ, கூடைப்பந்தோ எந்த விளையாட்டாக இருந்தாலும் ரசிகர்களின் பொதுவான வேட்கை, ஆட்டத்தின் ஸ்கோர் என்ன என தெரிந்து கொள்வது தானே. கிரிக் இன்போ உள்ளிட்ட தளங்களில் தகவல்கள், வீடியோக்கள் என பார்த்தாலும், அடிப்படையில் ரசிகர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது ஸ்கோரை தானே.
பிளைன் டெக்ஸ்ட் ஸ்போர்ட்ஸ் இணையதளம் இதை தான் செய்கிறது. அதாவது இந்த தளம் விளையாட்டுகளின் ஸ்கோரை மட்டும் அளிக்கிறது. அதுவும் புகைப்படங்கள், தலைப்புகள் இன்னும் பிற சங்கதிகள் எதுவும் இல்லாமல் ஆட்டத்தின் ஸ்கோர் மட்டும் வரி வடிவில் இடம்பெறுகிறது.
ஆக, விளையாட்டு ரசிகர்கள் ஸ்கோரை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம். வரி வடிவில் ஸ்கோர் மட்டும் தோன்றுவதால், இந்த விவரங்கள் திரையில் தோன்ற கொஞ்சம் கூட தாமதம் ஆகவே ஆகாது.
தீவிர விளையாட்டு ரசிகரான மார்டினாஸ் அமெரிக்காவின் என்பிஏ சாம்பியன்ஷிப் தொடர்பான ஸ்கோர் விவரங்களை தெரிந்து கொள்ள விரும்பும் பல நேரங்களில் ஈஎஸ்பிஎன் மற்றும் என்பிஏ தளங்களில் விவரங்கள் தோன்ற தாமதமானதால் வெறுத்துப்போயிருக்கிறார். அப்போது தான் அவருக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் வெறும் ஸ்கோர் மட்டும் தோன்றும் தளத்திற்கான எண்ணம் தோன்றியிருக்கிறது.
இந்த எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுத்து வரி வடிவத்தில் ஸ்கோரை அளிக்கும் இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார். இதன் வடிவமைப்பும் கால்பந்து இணையதளம் போல அமைந்துள்ளது.
நீங்கள் தீவிர விளையாட்டு ரசிகராக இருந்தால் இந்த வரி வடிவ ஸ்கோர் தளத்தை நிச்சயம் விரும்புவீர்கள்.