சேர்ந்துலா இணையதளம்
’என்னோடு பாட்டு பாடுங்கள்’ என்பது போல, என்னோடு உலா வாருங்கள் என அழைப்பு விடுத்து நண்பர்களுடம் இணைந்து இணையதளத்தை பார்வையிடுவதற்கான வசதியை கம்பிரவுஸ்வித்மீ (https://comebrowsewithme.com/ ) இணையதளம் சாத்தியமாக்குகிறது.
இணையத்தில் நண்பர்களுடன் இணைந்து பாட்டு கேட்கலாம், நெட்பிளிக்சில் படம் பார்க்கலாம். இதற்கெல்லாம் வழி செய்யும் சேவைகள் இருக்கின்றன.
அதே போல, நண்பர்களுடன் இணைந்து இணையத்தில் உலாவுவதை, அதாவது குறிப்பிட்ட இணைய பக்கத்தை பார்வையிட மேலே குறிப்பிட்ட இணையதளம் வழி செய்கிறது.
இதற்காக இந்த தளத்தில், சந்திப்பு அறையை உருவாக்கி கொண்டு அதற்கான இணைப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்கள் அந்த இணைப்பை கிளிக் செய்து உள்ளே வந்தால் இருவருமாக சேர்ந்து ஒரே இணைய பக்கத்தை பார்வையிடலாம்.
சேர்ந்திசை போல , இதை சேர்ந்துலா என வைத்துக்கொள்ளலாம். ஆங்கிலத்தில் கோ பிரவுசிங் என்கின்றனர். இணை உலா என்றும் குறிப்பிடலாம்.
இந்த சேர்ந்துலாவில் அதிக பட்சம் ஐந்து நண்பர்கள் வரை அழைக்கலாம். அதிகபட்சம் 15 நிமிடங்கள் பயன்படுத்தலாம். இடைப்பட்ட நேரத்தில் பங்கேற்கும் நபர்கள் இணையதளத்தை கட்டுப்படுத்த முடியும்.
இணைய பக்கம் தொடர்பாக விவாதிப்பதில் துவங்கி மென்பொருள் ஓட்டைகளை விவாதிப்பது வரை பல விதங்களில் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
இணை உலாவின் தகவல்கள் எதுவும் சேமிக்கப்படுவதில்லை என இந்த தளம் உறுதி அளிக்கிறது.