கோட்பாடுகளுக்கான விக்கிபீடியா
இப்போது நாம் பார்க்க போகும் இணையதளம் எல்லோருக்கும் ஆர்வம் அளிக்க கூடியது அல்ல. பிளிக்ஸாபட் ( http://flixabout.com/) எனும் இந்த தளம் பட்டதாரி மாணவர்களுக்கானது. அதிலும், குறிப்பாக நிர்வாகவியல், வணிகவியல், தகவல் தொடர்பு போன்ற துறைகள் சார்ந்த பட்டதாரி மாணவர்களுக்கானது.
ஆனால், மாணவர்களுக்கான இணையதளம் தானே என்று அலட்சியம் செய்யாமல், மற்றவர்களும் கவனத்தில் கொள்ளக்கூடிய சில விஷயங்கள் இந்த தளத்தில் இல்லாமல் இல்லை.
முதல் விஷயம் இந்த தளத்தின் நோக்கம். முக்கியமான கோட்பாடுகளை எல்லாம் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அறிமுகம் செய்வது தான் அது.
கோட்பாடுகள் எனும் போது, நிர்வாகவியல், தகவல் தொடர்பு, விற்பனை உள்ளிட்ட துறைகளில் பிரதானமாக கருதப்படும் கோட்பாடுகளே இங்கே பொருள் கொள்ளப்படுகிறது.
உதாரணமாக, மாஸ்லோ கோட்பாட்டை எடுத்துக்கொள்வோம். மனித தேவைகளின் முக்கியத்துவத்தை படிநிலையாக முன்வைக்கும் இந்த கோட்பாடு உளவியல் சார்ந்ததாக இருந்தாலும், நிர்வாகவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இதே போல, ஜோஹாரி ஜன்னல் ( Johari Window ) எனும் கோட்பாடு, தகவல் தொடர்பில், மற்றவர்கள் மற்றும் நம்முடைய நிலையை புரிந்து கொள்ள உதவுகிறது. பரஸ்பரம் தெரிந்த மற்றும் தெரியாத தகவல்கள் அடிப்படையில், தகவல் தொடர்பை நான்கு கட்டங்களாக பிரித்து புரிந்து கொள்ள இந்த கோபாடு வழி செய்கிறது.
இது போன்ற முக்கிய கோட்பாடுகளை எல்லாம், இந்த தளம் மிக சுருக்கமாக விளக்குகிறது. இந்த சுருக்கமான விளக்கத்துடன். கோட்பாடு தொடர்பான வீடியோ விளக்கமும் இடம்பெற்றுள்ளது.
கோட்பாடுகள் தொடர்பாக பக்கம் பக்கமாக படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், அவற்றின் சாரம்சத்தை சட்டென்று புரிந்து கொள்ள உதவும் வகையில் இந்த விளக்கம் அமைந்துள்ளன.
இந்த தளம் கவனம் செலுத்துவதாக சொல்லும் நான்கு துறைகள் சார்ந்த எல்லா கோட்பாடுகளுமே இடம்பெற்றுள்ளன என்று சொல்ல முடியாவிட்டாலும், முக்கிய கோட்பாடுகளை எளிதாக தெரிந்து கொள்ள வழி செய்யும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த தளத்தின் நோக்கத்தையும், அமைப்பையும் பாராட்டலாம்.
இந்த தளத்தின் செயலி வடிவமும் இருக்கிறது.
இந்த தளமே இன்னமும் முழுமை பெற வேண்டும். ஆனால், இதே பாணியில், உலகில் உள்ள முக்கிய கோட்பாடுகளை எல்லாம் எளிதாக விளக்க கூடிய ஒரு இணையதளம் அமைக்கப்பட்டால் எப்படி இருக்கும் எனும் எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது இந்த தளம்.
இது தொடர்பாக நீங்கள் நினப்பது என்ன என்பதை தளத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள்!.
-
பி.கு: விக்கிபீடியாவை நினைவுபடுத்தும் தளம் என்பதால், விக்கிபீடியாவுக்கு முன்னோடியாக விளங்கும் சேவை பற்றிய இந்த பதிவையும் படித்துப்பாருங்கள்!