இணைய வீடியோக்களை தேட சிறந்த வழி எது?

இணையத்தில் வீடியோக்களை தேட சிறந்த வழி என்ன? என்பதற்கு பெரும்பாலானோர் கூகுள் என்று சொல்லலாம். இல்லை யூடியூப் என்று சொல்லலாம். இரண்டுமே தவறானது. இப்படி சொல்ல வைக்கும் இணையதளத்தை தான் இன்று பார்க்கப்போகிறோம். பீட்டேவீடியோ எனும் வீடியோ தேடியந்திரம் தான் அந்த இணையதளம்: https://www.peteyvid.com/

பீட்டேவீடியோ, இணையத்தில் மேலும் அதிகமான வீடியோக்களை தேட வழி செய்வதாக கூறுகிறது. இதன் பொருள் யூடியூப் அல்லாத வீடியோக்களையும் தேட வழி செய்வதாக கூறுகிறது. இணையத்தில் உள்ள 70 க்கும் மேற்பட்ட வீடியோ மேடைகளில் இருந்து வீடியோக்களை தேடித்தருவதாகவும் கூறுகிறது.

பீட்டேவீடியோ சேவையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முதலில், இணைய வீடியோ பரப்பு பற்றிய அடிப்படை உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இணைய வீடியோ என்பது பரவலாக கருதப்படுவது போல யூடியூப் மட்டும் அல்ல என்பது தான் அது.

ஆம், யூடியூப் நன்கறியப்பட்ட வீடியோ சேவை தளமாக இருந்தாலும், மெட்டாகேப், விமியோ, டெய்லிமோஷன் உள்ளிட்ட எண்ணற்ற வீடியோ சேவை தளங்கள் இருக்கின்றன. பிரச்சனை என்னெவெனில், தேடலின் மறுபெயராக கருதப்படும் கூகுளில் வீடியோக்களை தேடலாம் என்றாலும், அதன் தேடல் முடிவுகளில் யூடியூப் அல்லாத மாற்று வீடியோக்கள் எந்த அளவு முன்னிறுத்தப்படுகின்றன என்பது தான்.

பீட்டேவீடியோவை அறிமுகம் செய்யும் பீபாம் தொழில்நுட்ப செய்தி தளம், தேடியந்திரத்தில் வீடியோ தொடர்பான தேடலுக்கு யூடியூப் அல்லாத முடிவை நீங்கள் கடைசியாக பெற்றது எப்படி? என கேட்பதன் மூலம், இணைய வீடியோ தேடலின் சார்பு தன்மையை கச்சிதமாக உணர்த்துகிறது.

இதையே தான் பீட்டேவீடியோ தேடியந்திர நிறுவனர் கிரேக் ஸ்டேட்லரும் ( craig-stadler) கேட்கிறார். இணைய வீடியோ தேடல் சரியாக இல்லை என தெரிவிப்பவர் அதை சரி செய்யும் வகையில், சார்பில்லாத, பரவலான வீடியோ முடிவுகளை பீட்டேவீடியோ மூலம் வழங்குவதாக கூறுகிறார்.

மேலும், மற்ற தேடியந்திரங்கள் போல, பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை திரட்டாமல் அவர்கள் பிரைவசியை மதிக்கும் வகையிலும் செயல்படுவதாக கூறுகிறார்.

ஆக, மாறுபட்ட வீடியோ தேடல் முடிவுகள் தேவை எனில் பீட்டேவீடியோவில் தேடிப்பாருங்கள். உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!