நன்றி சொல்ல ஒரு இணையதளம்!
பாஸிட்டிவ்.ஆப் (https://positiive.app/#/) இணையதளத்தை நம்பிக்கை கொள்வதற்கான அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான இணையதளம் என வர்ணிக்கலாம். அதாவது, ’நேர்நிறை’யான எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கான இணையதளமாக இது விளங்குகிறது. வெறும் தளம் அல்ல: ஒரு மாறுபட்ட சமூக வலைப்பின்னல் தளம்- அப்படி தான் இந்த தளத்தின் சுய அறிமுகம் அமைகிறது.
வழக்கமான சமூக வலைப்பின்னல் தளங்கள் போல, புகார்களையும், புலம்பல்களையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்காமல், நல்லெண்ணம் நிறைந்த நிலைத்தகவல்களை பகிர்ந்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.
இன்று நீங்கள் எதற்காக நன்றி சொல்ல நினைக்கிறீர்கள்? எனும் கேள்விக்கு பதிலாக உங்களது நிலைத்தகவல்கள் அமைய வேண்டும் என இந்த தளம் எடுத்துக்கொடுக்கிறது.
உங்களின் இன்றைய தினம் எப்படி இருந்தாலும், அதில் நல்ல விஷயங்கள் ஏதேனும் இருக்கும் அல்லவா? அத்தகைய விஷயங்களை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம். இப்படி மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கை நிலைத்தகவல்களையும் பார்த்து ஊக்கம் கொள்ளலாம். இவற்றுக்கு விருப்பமும் தெரிவிக்கலாம்.
உதாரணத்திற்கு சில நிலைத்தகவல்கள்:
நான் இதைவிட மகிழ்ச்சியாக உணர்ந்ததில்லை. ஏனெனில் கடவுள் என்னை நேசிக்கிறார்.
நான் வாழ்க்கையை அனுபவிக்கிறேன். ஏனெனில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன்.
நான் அமைதியாக உணர்வதால் புன்னகைக்கிறேன்.
நான் உற்சாகமாக இருக்கிறேன். இன்று சம்பள தினம்!
-