உங்களுக்கான ஒரு பக்க இணைய அகராதி!
இன்று மிக மிக எளிமையான இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்து கொள்ளலாம். அக்ரான்ஸ் என்பது அந்த தளத்தின் பெயர் சுருக்கம். இந்த தளத்திற்கு தனி முகவரி இல்லாமல், மொகித்காரே என்பவரின் இணையதளத்தின் ஒரு பகுதியாக இது அமைந்திருப்பதால், சுருக்கம் என்கிறேன்.
இந்த தளத்தின் நோக்கமும் சுருக்கமானது’ தான். அதாவது இணைய சுருக்கங்களுக்கு விளக்கம் அளிப்பது.
அக்ரானிம்ஸ் ( acronyms ) எனஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் கருத்தாக்கத்தை நீங்கள் அறிந்திருக்கலாம். குறிப்பிட்ட சொல் அல்லது சொற்றொடரின் சுருக்கங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. தமிழில் இவற்றை சுருக்க எழுத்துகள் அல்லது முதலெழுத்துகள் என பொருள் கொள்ளலாம்.
பல வகையான சுருக்க எழுத்துகள் பயன்பாட்டில் உள்ளன. தொழில்நுட்ப உலகிலும், பல சுருக்க எழுத்துகள் பயன்பாட்டில் உள்ளன. இணைய பயன்பாட்டில் இவற்றை நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளலாம். பல நேரங்களில், இவற்றின் பொருள் புரியாமலும் விழிக்கலாம்.
இப்படி இணையத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சுருக்க எழுத்துக்களுக்கான விளக்கத்தை அளிக்கிறது அக்ரான்ஸ். இதை இணையதளம் என்று சொல்வதைவிட, இணைய பக்கம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
மிக எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணைய பக்கத்தில், இணையத்தில் தவறாமல் பயன்படுத்தப்படும் அக்ரானிம்களின் விளக்கத்தை வரிசையாக பட்டியலிட்டுள்ளது. அகர வரிசையில் இந்த பட்டியலை பார்க்கலாம் அல்லது, உங்களுக்கு தேவையான விளக்கத்தை தனியே தேடலாம். பிரபலமான அக்ரானிம்களையும் பார்க்கலாம். நீங்கள் விரும்பினால் இந்த பட்டியலில் இடம்பெற வேண்டிய சுருக்க எழுத்தையும் சமர்பிக்கலாம்,
அக்ரானிம்களுக்கான முழுமையான தளம் இல்லை என்றாலும், ஒரே பக்கத்தில் முக்கியமான அக்ரானிம்களை அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புத்திசாலித்தனத்திற்காக பாராட்டலாம்.
-
பி.கு: இந்த வகையில் காவிய இணையதளம் ஒன்று இருக்கிறது. வரும் நாட்களில் அதை அறிமுகம் செய்து கொள்ளலாம்.