உங்கள் இணைப்புகளுக்கான இணையதளம்
ஒரே இணைப்பில் பல்வேறு இணைய முகவரிகளை பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது மெனிலிங் ( https://manylink.co/) இணையதளம். இந்த காரணத்தினால் நீங்களும் கூட இந்த சேவையை விரும்பி பயன்படுத்தலாம்.
டிஜிட்டல் அறிமுக அட்டை போல இந்த தளம், ஒருவரது தனிப்பட்ட இணைய அடையாளங்களை ஒரே இடத்தில் பகிர்ந்து கொள்வதை சாத்தியமாக்குகிறது.
இணையத்தில் உலாவும் போது, பல்வேறு காரணங்களுக்காக தனிநபர்கள் தங்களது இணைய முகவரிகளை பகிர்ந்து கொள்ளும் தேவை ஏற்படுகிறது. அது டிவிட்டர் முகவரியாக இருக்கலாம் அல்லது பேஸ்புக்/லிங்க்டுஇன் முகவரியாக இருக்கலாம். இன்னும் சிலர் தங்கள் வலைப்பதிவு முகவரி அல்லது இன்ஸ்டாகிராம் முகவரியை பகிர்ந்து கொள்ள விரும்பலாம்.
நட்பு கருதி அல்லது அலுவல் நிமித்தமாக இப்படி பல இடங்களில் தங்கள் இணைய முகவரிகளை பகிர்ந்து கொள்ளும் தேவை ஏற்படலாம். இப்படி இணைய முகவரிகளை பகிர்வது எளிதானது என்றாலும், டிவிட்டர், வலைப்பதிவு, இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல்வேறு இணைய பரப்புகளில் செயல்பட்டு வருபவர்கள் இவை அனைத்தையும் தனித்தனியே பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கலாம்.
இது போன்ற தருணங்களில், ஒரே இணைய முகவரியை பகிர்ந்து கொண்டால், அதன் மூலம் மற்ற முகவரிகளையும் அணுக முடிந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றலாம்.
இதை தான் மெனிலிங் சேவை செய்கிறது. எந்த இணைப்பை பகிர்ந்து கொள்வது எனும் குழப்பம் இல்லாமல், ஒரே இணைப்பில் நம் இணைய முகவரிகளை அனைத்தையும் இந்த தளம் அடக்கி விடுகிறது.
இந்த தளத்தில் ஒரு அறிமுக பக்கத்தை உருவாக்கி கொண்டால் போதும், அதில் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக அடையாளங்களை இணைப்பதோடு, நாம் பகிர்ந்து கொள்ள விரும்பும் இணைய முகவரிகளையும் இதிலேயே இணைக்கலாம்.
அதன் பிறகு, இந்த ஒரு இணைய முகவரியை பகிர்ந்து கொண்டால் போதும், அதன் மூலம் நம்முடைய இணைய முகவரிகளை அனைத்தையும் மற்றவர்கள் பார்வைக்கு முன்வைக்கலாம்.
இந்த அறிமுக பக்கத்தில் எப்போது வேண்டுமானாலும் புதிய இணைய முகவரிகளை சேர்த்துக்கொள்ளலாம்.
இது சைபர்சிம்மன் இணைய முகவரி: https://manylink.co/@cybersimman