டிரோன்களை இயக்குவதற்கான இணையதளம்
இங்கே டிரோன்களை பறக்க விடலாமா? எனும் கேள்வியை எதிர்காலத்தில் பலரும் கேட்க நேரலாம். நீங்கள், டிரோன்களை பறக்கவிடும் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர் என்றால், இந்த கேள்வியின் முக்கியத்துவமும் எளிதாக புரிந்திருக்கும்.
டிரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய பறக்கும் வாகனங்கள் இப்போது மெல்ல பிரபலமாகி வருகின்றன. கல்யாண வீடுகளில், புகைப்பட கலைஞர் வழிகாட்டுதலோடு தலைக்கு மேல் இந்த சின்னஞ்சிறிய இயந்திர பறவைகள் பறப்பதை பார்த்திருக்கலாம். திரைப்பட படப்பிடிப்புகளிலும் டீரோன்களை பயன்படுத்த துவங்கியிருக்கின்றனர்.
மீட்பு பணி உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களுக்காக டிரோன்களை பறக்க விடலாம். அதோடு, டிரோன் ஆர்வலர்கள் விளையாட்டு நோக்கிலும் டிரோன்களை பறக்க விடலாம்.
நோக்கம் என்னவாக இருந்தாலும் டிரோன்கள் இயக்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், நீங்கள் இருக்கும் இடத்தில் டிரோன்களை பறக்க விடுவதற்கு அனுமதி இருக்கிறதா ? என்பது தான்.
பல இடங்களில் டிரோன்களை இயக்க கட்டுப்பாடு இருக்கிறது. இந்தியாவில், எங்கெல்லாம் டிரோன்களை இயக்கலாம் என்பதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கின்றனர்.
டிரோன்களை இயக்க அனுமதி உள்ள பகுதிகளை, டிரோன் இடங்கள் என புரிந்து கொள்ளலாம். இத்தகைய டிரோன் இடங்கள் உலகில் எங்கெல்லாம் இருக்கிறது என்பதை அடையாளம் காட்டுகிறது ஸ்பாட்பைண்டர்.ஆப் (https://www.spotfindr.app/ ) செயலி.
புதிய இடங்களுக்கு செல்லும் போது, அங்கு டிரோன்களை இயக்க அனுமதி இருக்கிறதா என்பதை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். அதே போல, டிரோன் ஆர்வலர்கள் ஒரே இடத்தில் டிரோன் இயக்கி அலுத்துப்போன நிலையில் புதிய டிரோன் பறக்கும் இடத்தை நாடுவதாக இருந்தாலும், இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட இடத்திற்கான டிரோன் அனுமதி விதிகளை தெரிவிப்பதோடு, அந்த இடம் தொடர்பான வானிலை தகவல்களையும் இந்த செயலி அளிக்கிறது.
டிரோன் ஆர்வலர்கள், இந்த செயலியில் தாங்கள் அறிந்த டிரோன் இடங்களையும் சமர்பிக்கலாம்.