வீட்டில் இருந்தே பணியாற்ற வழிகாட்டும் தளங்கள்
கொரோனா அச்சத்தால், பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளன. அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே வேலை செய்வதில் பல அணுகூலங்கள் இருந்தாலும், சவால்களும், சங்கடங்களும் இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாக, பல ஆண்டுகளாக அலுவலக சூழலுக்கு பழகியவர்களுக்கு ஒர்க் பிரம் ஹோம் என்பது சிக்கலாக இருக்கலாம். இந்த புதிய சூழலுக்கு மனதளவில் பழகுவதோடு, வீட்டில் இருந்தே பணியாற்ற தேவையான தொழில்நுட்ப நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இதை எல்லாம் நினைத்து கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருந்து பணியாற்றுகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய குறிப்புகளையும், ஆலோசனைகளையும் ஆன்லைனில் அழகாக தொகுத்தளிக்கிறது டபிள்யுஎப்எச்மேனுவல் (https://wfhmanual.com/) இணையதளம்.
வீட்டில் இருந்து பணியாற்றும் போது, உங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்வதற்கான வழிமுறைகளையும், சிறந்த அலுவல் செயல்முறைகளை உருவாக்கி கொள்வதற்கான வழிமுறைகளையும் இந்த தளம் அடையாளம் காட்டுகிறது. அதோடு, ஏற்கனவே இப்படி பணியாற்றிக்கொண்டிருப்பவர்களை அறிமுகம் செய்து கொண்டு, அவர்களின் அனுபவ குறிப்புகளையும் தொகுத்தளிக்கிறது. நீங்களும் கூட இது போன்ற அனுபவ குறிப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.
மேலும், ரிமோட்-டூல்ஸ் (https://www.remote.tools/) இணையதளம், எங்கிருந்தாலும் பணியாற்ற தேவையான குறிப்புகளையும், அதற்கு உதவும் டிஜிட்டல் சேவைகளையும் அறிமுகம் செய்கிறது. ஸ்டேசேன் (https://www.staysane.co/ ) இணையதளம், சமூக தொலைவை பின்பற்ற வீட்டில் தனித்திருக்கும் போது, செய்யக்கூடிய மெய்நிகர் சந்திப்புகள் போன்றவற்றை பரிந்துரைக்கிறது.
-
இது நெட்பிளிக்ஸ் பார்ட்டி
அவரவர் வீட்டில் தனியே இருந்தாலும், இணையம் வழியே சந்தித்துக்கொள்ளும் வசதியை பல இணையதளங்கள் வழங்குகின்றன தெரியுமா? நெட்பிளிக்ஸ் பார்ட்டி (https://www.netflixparty.com/) எனும் குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவை மூலம், வெவ்வேறு இடங்களில் உள்ள நண்பர்களுடன் இணைந்து, நெட்பிளிக்சில் திரைப்படம் அல்லது தொலைக்காட்சி தொடரை பார்க்க முடியும். இந்த பிரவுசர் நீட்டிப்பு மென்பொருளை டவுண்லோடு செய்து நிறுவிய பின், நெட்பிளிக்ஸ் வீடியோவை இயக்கிய பின், படம் பார்க்கும் இணைப்பை உருவாக்கி நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம். ஹவுஸ்பார்ட்டி (https://houseparty.com/) சேவையும் இதே ரகம் தான். இணையம் வழி குழு வீடியோ உரையாடலுக்கு வழி செய்யும் இந்த செயலி மூலம், மெய்நிகர் உலகில் நட்பு கொள்ளலாம்