கொரோனா தடுப்பூசி தகவல்களை அளிக்கும் இணையதளம்.
2020 ம் ஆண்டு முடிந்து 2021 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். கடந்த ஆண்டின் சோதனையான போக்குகள் முடிவுக்கு வந்து, ஊக்கம் அளிக்கும் நம்பிக்கையான போக்குகளை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம் என்பதற்கான அடையாளமாக அமைகிறது கோவிட் தடுப்பூசி டிராக்கர் இணையதளம். - https://covid-19-vaccine.live/
நிச்சயம் இந்த தளம், நம்பிக்கையான போக்கின் அடையாளம் தான். கொரோனாவுக்கான தடுப்பூசி போடுவது துவங்கியிருக்கும் நிலையில், உலக நாடுகளில் தடுப்பூசி திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பான தகவல்களை அளிக்கிறது இந்த தளம்.
ஒவ்வொரு நாட்டிலும், எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது எனும் விவரத்தை மக்கள் தொகைக்கு நிகரான விகிதத்தில் இந்த தளம் அளிக்கிறது. மிக எளிதாக தெரிந்து கொள்ள வழி செய்யும் வகையில், பட்டியலாக இந்த தகவல்கள் அளிக்கப்படுகின்றன.
இதன் முகப்பு பக்கத்தில் உள்ள நாடுகள் பட்டியலை பார்த்து அந்த நாடுகளில் தடுப்பூசி நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். இது தவிர தனியே உலக வரைபடம் மீதும், தடுப்பூசி தகவல்கள் சுட்டிக்காட்டப்படுகிறது.
கடந்த ஆண்டு முழுவதும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் அளிக்கும் கொரோனா வைரஸ் டிராக்கர் தளங்கள் தான் அதிகம் உருவாக்கப்பட்டன.
இதற்கு மாறாக, இந்த ஆண்டு, கொரோனா தடுப்பூசி டிராக்கர் தளம் அமைக்கப்பட்டுள்ளதே நல்ல விஷயம் தான் அல்லவா!
ஜோனாதன் பிஷர் (@jonathanfishner ) என்பவர் தனது சகாவுடன் இணைந்து இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.