இணைய குறும்பட விழா இணையதளம்
இணைய கண்டறிதல் ஆற்றலில் எனக்கு சற்று பெருமிதம் உண்டென்றாலும், இது தொடர்பாக கர்வம் கொள்ளும் அல்லது தற்பெருமை கொள்ளும் எண்ணத்தை தகர்த்தெறியும் வகையில், ’ஷார்ட் ஆப் தி வீக்’ (https://www.shortoftheweek.com/ ) தளம் எனக்கு அறிமுகம் ஆகியிருக்கிறது. இந்த தளம் எனக்கு பலவிதங்களில் ஆச்சர்யம் அளிக்கிறது. நிச்சயம் உங்களுக்கும் அதே ஆச்சர்யத்தை அளிக்கும். அதிலும் நீங்கள் குறும்பட ரசிகர் என்றால் இந்த தளம் உங்களை குதூகலம் கொள்ளச்செய்யும். ( இதுவரை நீங்கள் அறிந்திராத பட்சத்தில்). அதே நேரத்தில், நீங்கள் குறும்பட இயக்குனர் என்றால் இந்த தளம் உங்களை கூடுதலாக உற்சாகம் கொள்ள வைக்கும்.
இந்த தளத்தில் அப்படி என்ன சிறப்பு என்று பார்ப்பதற்கு முன், இந்த தளத்தை நான் கண்டறிந்த விதம் பற்றி சிறு குறிப்பு அவசியம். ஏனெனில் இந்த தளத்தை நான் தேடிச்செல்லவில்லை. குறும்படங்களை ரசித்துப்பார்ப்பவன் தான் என்றாலும், குறும்படங்களுக்கான தளங்களை கண்டறிய வேண்டும் எனும் நோக்கில் தேடலில் ஈடுபடவில்லை.
மாறாக, புதிய, சுவாரஸ்யமான, பயனுள்ள இணையதளங்களை கண்டறிந்து எழுதும் முயற்சியின் ஒரு பகுதியாக, ’வாரத்தின் சிறந்த இணையதளம்’ எனும் பரிந்துரைக்கான தளங்களை தேடிக்கொண்டிருந்தேன். அதாவது, வெப்சைட் ஆப் தி வீக் என ஆங்கிலத்தில் தேடினேன்.
இந்த பதங்களுக்கு கூகுள் முன்வைக்கும் முடிவுகள் தரும் ஏமாற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், பெரும்பாலும் பொருத்தமில்லா முடிவுகளுக்கு நடுவே ’ஷார்ட் ஆப் தி வீக்’ தளத்தை கண்டேன்.
வாரத்தின் சிறந்த இணைதளத்தை தேடும் போது, அதனுடன் நேரடி தொடர்பில்லாத ஷார்ட் ஆப் தி வீக் தளம் கண்ணில் பட்டாலும், ஈர்க்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தால், அந்த தளமே தனியே அறிமுகம் செய்யப்படுவதற்கு உரியதாக இருக்கிறது.
தலைப்பு உணர்த்தக்கூடியது போல, இந்த தளம் வாரம் ஒரு சிறந்த குறும்படத்தை அடையாளம் காட்டுகிறது. ஆக நல்ல குறும்படங்களை காண விரும்புகிறவர்கள் இந்த தளத்தை புக்மார்க் செய்து கொண்டால், வாரம் ஒரு புதிய குறும்படத்தை கண்டு ரசிக்கலாம். அதோடு, இந்த தளத்தில் ஏற்கனவே தொகுக்கப்பட்டுள்ள நல்ல குறும்படங்களையும் பார்த்து ரசிக்கலாம்.
இந்த காரணத்திற்காகவே இந்த தளத்தை குறும்பட ரசிகர்கள் கொண்டாடலாம். ஆனால் இந்த மேலோட்டமான அறிமுகத்தை மீறி இந்த தளம் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.
முதல் விஷயம் இந்த தளம் வெறும் குறும்பட இணையதளம் அல்ல: இந்த தளம் குறும்படங்களுக்கான இணைய விழா!
இதன் பொருள், திரட்டி வகை தளங்களைப்போல இந்த தளம் குறும்படங்களை தொகுத்தளிக்கும் தளம் அல்ல: அருமையான குறும்படங்களையும், அதன் வாயிலாக வளர்ந்து வரும் திறமையான இளம் இயக்குனர்களை கண்டறிவதற்கான இணையதளமும் கூட!
ஆம், ஒரு திரைப்பட விழாவுக்கான படங்கள் வரவேற்கப்பட்டு தேர்வு செய்யப்படுவது போல, இந்த தளம் புதிய குறும்படங்களை சமர்பிக்க கோரி அவற்றில் இருந்து சிறந்த குறும்படங்களை தேர்வு செய்து முகப்பு பக்கத்தில் திரையிடுகிறது. ஆக, இதன் முகப்பு பக்கத்தில் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய குறும்படங்களை காணலாம். அதே நேரத்தில், குறும்பட இயக்குனர்களுக்கு இந்த தேர்வு திரையிடல் வாய்ப்பாக அமைந்து ரசிகர்களை தேடித்தருகிறது.
பொதுவாக, குறும்பட படைப்பாளிகளுக்கு பார்வை வெளிச்சம் கிடைப்பது என்பது சிக்கலானது. திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது போன்றவற்றை வென்றால் தான், பார்வையாளர்களை ஓரளவாவது ஈர்க்க முடியும். இந்த குறையை போக்கும் வகையில் திறமையான இளம் படைப்பாளிகள் தங்களது குறும்படங்களை பரந்த பார்வையாளர்களை சென்றடைய வழி செய்யும் வகையில், இந்த தளம் அமைந்துள்ளது.
அதற்கேற்ப இந்த தளம் வாரந்தோறும் தேர்வு செய்யப்படும் படங்களை, அறிமுக வாசகத்துடன் முன்னிறுத்துகிறது. சும்மாயில்லை, அந்த குறும்படம் தொடர்பான விரிவான விமர்சன அறிமுகம் செய்யப்படுகிறது.
இப்படி இடம்பெறும் படங்கள் அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டு தனித்தனி சேனல்களிலும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சேனல்களில் தேடிப்பார்த்தால் முந்தைய படங்களை பார்க்கலாம். இதற்கான தேடல் வசதியும் இருக்கிறது.
இவைத்தவிர, குறும்படங்கள் தொடர்பான செய்திகளும், குறும்பட இயக்குனர்களின் நேர்காணல்களும் இடம்பெறுகின்றன.
ரசிகர்களை பொருத்தவரை இந்த தளத்தை, இணையதள வடிவில் குறும்பட விழாக்களை ரசிப்பதற்கான இலவச வழி. ஆனால், படைப்பாளிகளைப்பொருத்தவரை இந்த தளம் கட்டணச்சேவையாகும். அதாவது இந்த தளத்தில் 29 டாலர் செலுத்தி குறும்படங்களை சமர்பிக்க வேண்டும். தகுதியுடைய படங்கள் தேர்வு செய்யப்பட்டு தளத்தில் திரையிடப்படும். முழு படத்தையும் கவனமாக பார்த்து பரிசீலனை செய்கின்றனர். திரைப்பட விழா குழுவினர் மற்றும் இணைய வல்லுனர்களுடன் இந்த தளத்தின் நிறுவனர்களுக்கு நல்ல தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவது இளம் படைப்பாளிகளுக்கு பயனளிக்கும்.
குறும்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் படங்களையும் இதில் சமர்பிக்கலாம்.
இந்த தளம் தொடர்பான இணைய அறிமுகங்கள் சிலவற்றில், ஆவணப்படங்களை இலவசமாக பார்த்து ரசிப்பதற்கான தளங்களில் ஒன்றாக இந்த தளம் பட்டியலிடப்பட்டுள்ளது. இன்னொரு அறிமுகம் புதிய குறும்படங்களை காண்பதற்கான தளமாக குறிப்பிடுகிறது. ஆனால், இந்த தளம் இவற்றுக்கு எல்லாம் மேல் என்பதை உணரலாம்.
இந்த தளம் 2007 ம் ஆண்டு முதல் இந்த தளம் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆண்ட்ரு ஆலன் மற்றும் ஜேசன் சோந்தி (Andrew Allen and Jason Sondhi ) ஆகியோர் இந்த தளத்தை நடத்தி வருகின்றனர். இதுவரை 30,000 க்கும் மேற்பட்ட திரைப்பட இயக்குனர்களின் வலைப்பின்னலை உருவாக்கி, 2,000 க்கும் மேற்பட்ட குறும்படங்களை இந்த தளம் பட்டியலிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளுக்கும் மேலான படைப்பாளிகள் இதல் தங்கள் ஆக்கங்களை சமர்பித்துள்ளனர்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த அருமையான தளத்தை இப்போது தான் தெரிந்து கொள்ள நேர்ந்தது, இணைய கண்டறிதலில் கர்வம் கொள்ளக்கூடாது என உணர்த்தும் அதே வேளையில், புதிய தளங்களை கண்டறியும் ஆனந்தத்தையும் இது உணர்த்துகிறது. ( புதிய என்பது அறியப்படாத பழைய தளங்களையும் உள்ளடக்கிய நோக்கத்தில் சொல்லப்படுகிறது).