இந்திய அரசின் வானிலை செயலி
வானிலை தகவல்களை தெரிந்து கொள்ள வழி செய்ய அநேக இணையதளங்களும், செயலிகளும் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது இந்திய அரசு சார்பிலும் மவுசம் ( MAUSAM ) செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புவி அறிவியலுக்கான மத்திய அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம், உங்கள் வசிப்பிடத்தின் தற்போதையை வெப்ப நிலை, காற்று வீசும் வேகம், ஈரப்பதம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு, ஐபோன் என இரண்டு வகை போன்களிலுமே இந்த செயலியை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு போனில் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும். ஆனால், பிளேஸ்டோரில் தரவிறக்கம் செய்யும் போது, இந்திய அரசின் மவுசம் செயலி தானா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். ஏனெனில், இதே பெயரில் வேறு ஒரு செயலி இருப்பதாக, பீபாம் இணையதள செய்தி எச்சரிக்கிறது.
செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிய பிறகு, இருப்பிடத்தின் அடிப்படையில் வானிலை விவரங்கள் திரையில் தோன்றும்.
திரையின் கீழ் பகுதியில் சூரியோதையம், சூரிய அஸ்தமனம், நிலவு தோற்றம் ஆகிய தகவல்களை காணலாம். அருகிலேயே வானிலை கணிப்பு தகவல்களை பார்க்கலாம். ஒரு வார காலத்திற்கான வானிலை கணிப்பு தகவல்களை அறிந்து கொள்ள முடியும். வேறு நகரங்களுக்கான கணிப்புகளையும் அறியும் வசதி இருக்கிறது.
450 க்கும் மேற்பட்ட நகரங்களின் வானிலை தகவல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் எட்டு முறை அப்டேட் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசமான வானிலை தொடர்பான எச்சரிக்கை தகவல்களையும் இந்த செயலி வழங்குகிறது. பருவமழை காலங்களில் இந்த வசதி மிகவும் தேவைப்படும்.
இந்த செயலியை பயன்படுத்திப்பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம் நண்பர்களே.
பிளேஸ்டோரில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.imd.masuam
மேலும் விவரங்களுக்கு: https://mausam.imd.gov.in/