இந்த தளம் பொய் படங்களின் நெட்பிளிக்ஸ் !
நடிகர் திலகம் சிவாஜி கனேசன், சத்ரபதி சிவாஜியாக, ஹேம்லெட்டாக, லியர் மன்னனாக, இன்னும் பல சரித்திர வேடங்களில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சிவாஜி சூப்பர்மேனாக நடித்திருக்கிறாரா? சிவாஜி போலவே எண்ணற்ற கெட்டப்களில் தோன்றக்கூடிய உலக நாயகன் கமல்ஹாசன், கிரிக்கெட் வீரர் கபில் தேவாக அல்லது டென்னிஸ் வீரர் ரபேல் நடாலாக நடித்தால் எப்படி இருக்கும்? ’கட்டப்பா’ வேடத்தில் சிறப்பாக நடித்த நடிகர் சத்யராஜ், மாவீரன் அலெக்சாண்டராக அல்லது நெப்போலியனாக நடித்தால் எப்படி இருக்கும்?
இந்த கேள்விகளும், கற்பனையும், ’நெஸ்ட்பிளிக்ஸ்’ இணையத்தை பார்த்து ரசிக்க நம்மை தயாராக்கி கொள்ள உதவியாக இருக்கும்.
நெஸ்ட்பிளிக்ஸ் (https://nestflix.fun/) என தளத்தின் பெயரை சரியாக தான் வாசித்திருக்கிறீர்கள், இதில் எழுத்து பிழையேதும் இல்லை. பிரபல ஸ்டிரீமிங் சேவையான நெட்பிளிக்ஸ் போலவே அமைக்கப்பட்டிருக்கும் புதுமையான ஸ்ட்ரீமிங் சேவை தான் இந்த நெஸ்ட்பிளிக்ஸ்.
நெட்பிளிக்ஸ் தளத்தை பகடி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், நெஸ்ட்பிளிக்ஸ் தளத்தில் எந்த திரைப்படத்தையும் பார்க்க முடியாது. ஆனால், ஏராளமான திரைப்படங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். எனினும், இந்த படங்கள் எதுவுமே வழக்கமான திரைப்படங்கள் அல்ல, மாறாக எல்லாமே பொய் படங்கள். அதாவது திரைப்படத்திற்குள் வரும் திரைப்படங்கள்.
இந்த இடத்தில் மீண்டும் நடிகர் திலகம் சிவாஜி கனேசனை துணைக்கு அழைக்கலாம். அவர் எந்த படத்திலும் சூப்பர்மேனாக நடித்ததில்லை, ஆனால், அர்னால்டு ஸ்வாஸ்னேகர் ஷேக்ஸ்பியர் நாயகன் ஹேம்லெட்டாக நடித்திருக்கிறார்.
ஹாலிவுட் படங்களை பற்றி நன்கறிந்தவர்களுக்கு, ஆக்ஷன் நாயகன் அர்னால்டு எப்போது ஹெம்லெட்டாக நடித்தார் என்று குழப்பமாக இருக்கலாம். ஆனால், அர்னால்டின் தீவிர ரசிகர்கள் அவர் தி லாஸ்ட் ஆக்ஷன் ஹீரோ எனும் படத்தில், ஒரு காட்சியில் ஹேம்லெட்டாக நடித்திருப்பதை அறிந்து புன்னகைக்கலாம். ஹாலிவுட்டின் அதிரடி ஆக்ஷன் படங்களை பகடி செய்யும் வகையிலான கதைக்களம் கொண்ட இந்த படத்தில், ஹேம்லெட்டாக அர்னால்டு தோன்றுவது போல ஒரு காட்சி வரும். அர்னால்டின் சாகசங்களில் அலுத்துப்போய் அவர் சரித்திர நாயகனாக இருந்தால் எப்படி இருக்கும் என சாகசப்பிரியர் நினைத்துப்பார்ப்பது போல அமைந்திருக்கும் இந்த காட்சி, ஒரு திரைப்படமாக தோன்றும்.
இதை தான் திரைப்படத்திற்குள் தோன்றும் திரைப்படம் என சொல்கின்றனர். இப்படி பல படங்கள் இருக்கின்றன. யு.எச்.எப் (UHF ) எனும் படத்தில் அகிம்சா மூர்த்தி மகாத்மா காந்தி தூப்பாக்கி ஏந்தி வசனம் பேசுவது போல சில காட்சிகள் வரும். இதுவும் ஒரு படத்திற்குள் இடம்பெற்ற ஒரு கற்பனை படம் தான். கையில் கத்தியோடு காந்தி தோன்றும் காட்சிகள் படத்தில் ஒருவித பகடியாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக சொல்கின்றனர்.
இத்தகைய பொய் அல்லது கற்பனை படங்களை தான் நெஸ்ட்பிளிக்ஸ் தளம் பட்டியலிடுக்கிறது.
ஹாலிவுட்டில் திரைப்படங்களில் இடம்பெறும் திரைப்படங்களை விக்கிபீடியாவிலும் விரிவாக பட்டியலிட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பட்டியலில் உணர முடியாத சுவாரஸ்யத்தோடு, நெஸ்ட்பிளிக்ஸ் தளம் கற்பனை படங்களை முன்வைக்கிறது.
நெட்பிளிக்ஸ் தளத்தின் அதே வடிவமைப்பை கொண்டுள்ள இந்த தளம், ஓடிடியில் நீங்கள் பார்த்து ரசிக்கலாம் எனும் எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலேயே கற்பனை படங்களை பட்டியலிடுகிறது. நெட்பிளிக்சில் இடம்பெறுவது போலவே, கற்பனை படங்களுக்கான தகவல்கள் அமைந்திருப்பதோடு, படத்தின் காட்சி மற்றும் வசனங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த படங்களை ஓடிடியில் எல்லாம் பார்க்க முடியாது. கீழே, அவை இடம்பெற்ற திரைப்பட விவரமும் இடம்பெறுகிறது.
திரைப்படங்கள் மட்டும் அல்ல, தொலைக்காட்சி தொடர்களில் வரும் கற்பனை தொடர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
கற்பனை படங்களை முன்வைக்கும் நேர்த்திக்காகவே இந்த தளத்தை ரசிக்கலாம் என்பது ஒரு பக்கம் இருக்க, ஹாலிவுட்டில், திரைப்படத்திற்குள் திரைப்படத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை பார்க்கும் போது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
நெஸ்ட்பிளிக்ஸ் தளத்தை பார்க்கச்செல்வதற்கு முன் அந்த தளத்தை உருவாக்கிய வடிவமைப்பாளர் லின் பிஷர் (Lynn Fisher) பற்றி சில வார்த்தைகள். தொழில்முறை இணையதள வடிவமைப்பாளரான பிஷர் ஓய்வு நேரத்தில் ரசனையான இணையதளத்தை உருவாக்கிப்பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதே முறையில் தான் நெஸ்ட்பிளிக்ஸ் தளத்தையும் உருவாக்கியிருக்கிறார்.
அவர் எப்போதோ பார்த்து ரசித்திருந்த ஹோன் அலொன் எனும் படத்தில் வரும், ஏஞ்சல்ஸ் வித் ஃபில்தி சோல் எனும் படம் உண்மையான படம் அல்ல, கற்பனை படம் என்பதை தெரிந்து கொண்டவர், கொஞ்சம் மெனக்கெட்டு இதே போன்ற கற்பனை படங்களை கண்டறிந்து அவற்றின் தகவல்களை எல்லாம் தொகுத்திருக்கிறார்.
இதனிடையே பாட்ரிக் வில்லெம்ஸ் (Patrick Willems ) எனும் திரைப்பட யூடியூபர் திரைப்படத்திற்குள் வரும் திரைப்படம் தோன்றும் விதம் தொடர்பான தகவல்கள் மற்றும் இவற்றின் பயன்பாட்டை விவரிக்கும் வீடியோவை பார்த்த போது, இது போன்ற பட்டியல் சுவாரஸ்யமாக தான் இருக்கும் என உற்சாகமாகி, தான் சேகரித்திருந்த தகவல்களை கொண்டு நெஸ்ட்பிளிக்ஸ் தளத்தை அமைத்திருக்கிறார்.
சும்மா பட்டியல் தளமாக உருவாக்கமால், நெட்பிளிக்ஸ் போலவே உருவாக்கினார். ஓடிடி மோகத்தை பகடி செய்யும் விதமாக, நெட்பிளிக்ஸ் பெயரை பகடி செய்யும் வகையில் நெஸ்ட்பிளிக்ஸ் என பெயரை தேர்வு செய்தார். ( படங்களுக்குள் வரும் படங்கள் நெஸ்டட் ஸ்டொரீஸ் என சொல்லப்படுவதையும் குறிப்பிடுகிறார்.).
ஆனால் நெட்பிளிக்ஸ் பெயரை தப்பாக டைப் செய்து வருபவர்களை கவர்வதற்காகவே நெஸ்ட்பிளிக்ஸ் எனும் பெயரையும் நெட்பிளிக்ஸே பதிவு செய்திருப்பதால், தனது தளத்தின் முகவரியை நெஸ்ட்பிளிக்ஸ்.ஃப்ன் என வைத்திருக்கிறார்.