பின் தொடரும் விளம்பரங்களை அறிய ஒரு தளம்!
தகவல்களையே தேடியே நாம் இணையத்தை அணுகினாலும், இணைய நிறுவனங்களோ நம்மை விளம்பர வலையுடன் தான் வரவேற்கின்றன. இணையவாசிகளை குறி வைக்க விதவிதமான விளம்பர உத்திகளையும் அவை கையாள்கின்றன.
பெரும்பாலான இணைய விளம்பரங்கள் இணையவாசிகளை விடாமல் பின் தொடரும் ரகத்தைச்சேர்ந்தவை தான். இதை நீங்களே பல முறை உணர்ந்திருக்கலாம்.
எந்த விளம்பரங்கள் எல்லாம் இப்படி உங்களை பின் தொடர்கின்றன என்பதை அடையாளம் காட்டுவதற்காக என்றே, ’ஹூஈஸ் ரீடார்கெட்டிங்.மீ’ (https://whoisretargeting.me/) எனும் இணையதளத்தை உருவாக்கியிருக்கின்றனர்.
இந்த தளத்தில் நுழைந்தால், கட்டம் கட்டமாக இணைய விளம்பரங்களை பார்க்கலாம். எல்லாமே, உங்களை மீண்டும் குறி வைக்கும் விளம்பரங்கள். இந்த வகை விளம்பரங்கள் இணைய மொழியில் ரீடார்கெட்டிங் ஆட்ஸ் எனப்படுகின்றன. அதாவது மறு இலக்கு விளம்பரங்கள் என வைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் ஒரு இணையதளத்திற்கு விஜயம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த தளத்தில் இருந்து வெளியேறிய பிறகு, நீங்கள் வேறு ஏதேனும் ஒரு இணையதளத்தில் நுழையும் போது, முன்பு பார்த்த இணையதளத்தின் விளம்பரம் இந்த தளத்தில் தோன்றும். இணையவாசி வருகை தந்த இணையதளத்தின் விளம்பரம் இணையத்தில் வேறு ஒரு தளத்தில் அவருக்காக முன்வைக்கப்படுவதை தான், மறு இலக்க விளம்பரங்கள் என்கின்றனர்.
குறிப்பிட்ட இணையதளத்திற்கு இணையவாசிகள் விஜயம் செய்யும் போது, அவர்களுக்காக என்று ஒரு உளவு மென்பொருள் உருவாக்கப்படுகிறது. இதை பிக்சல் என்கின்றனர். இந்த பிக்சலை அடிப்படையாக கொண்டு, அந்த இணையவாசி செல்லும் இணையதளங்களில் எல்லாம் விளம்பர நினைவுட்டல் செய்யப்படுகிறது.
ஏற்கனவே, குறிப்பிட்ட இணையதளத்தை அவர் பார்வையிட்டுள்ளதால், அதில் அவருக்கு ஆர்வம் இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அந்த ஆர்வத்தை வர்த்தகமாக மாற்ற மறு விளம்பரம் செய்யப்படுகிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் இது முக்கிய உத்தியாக கருதப்படுகிறது. இதை சிறப்பாக செய்வது எப்படி என்றெல்லாம் பாடம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
இப்படி, உங்களை குறி வைக்கும் விளம்பரங்களை அறிந்து கொள்ள தான் மேலே சொன்ன இணையதளம் வழி செய்கிறது. ஆக, இந்த தளத்தில் நுழையும் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான விளம்பரங்கள் தோன்றும்.
உங்களை சுற்றி பின்னப்படும் விளம்பர வலையை புரிந்து கொள்ள இந்த தளத்தை நாடலாம். அதோடு, இந்த வகை விளம்பரங்களில் இருந்து விலகவும் வழி செய்வதாக இந்த தளம் சொல்கிறது. இந்த வகை விளம்பரங்கள் செயல்படும் விதம் பற்றியும் இந்த தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
ஆனால், இந்த தளமே ஏதேனும் விளம்பர வலை விரிக்கிறதா என்பது தெரியவில்லை.
ரீடார்கெட்டிங் விளம்பரங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினால் இந்த தளத்தை நாடலாம்: https://retargeter.com/