உங்களுக்கான மெய்நிகர் அலுவலகம்,
வீட்டில் இருந்து பணியாற்றுவது உங்கள் விருப்பத்தேர்வாக இருந்தாலும் சரி அல்லது கொரொனா கால நிர்பந்தமாக அமைந்தாலும் சரி, அதற்கேற்ப உங்களை தயார் செய்து கொள்வது நல்லது.
ஏனெனில் வீட்டில் இருந்து பணியாற்றுவதில் பலவித அணுகூலங்கள் இருந்தாலும், சில பாதகமான அம்சங்களும் உண்டு. அணுகூலங்களை மட்டும் மனதில் கொண்டு செயல்படுபவர்களுக்கு, வீட்டில் இருந்து பணியாற்றும் வாய்ப்பு விரைவில் கசக்கத்துவங்கலாம். அல்லது குறைந்த பட்சம் அதன் இன்னொரு பக்கத்தை உணர்ந்து தவிக்கலாம்.
அலுவலக சூழலை இழந்து தவிப்பதும், உரையாடி உற்சாகம் கொள்ள சகாக்கள் மற்றும் நண்பர்கள் இல்லாத வெறுமையை உணர்வதும் இந்த இன்னொரு பக்கத்தின் முக்கிய அம்சங்கள். இதனால் சிலருக்கு மனச்சோர்வு கூட உண்டாகலாம். சிலர் எதிர்பார்த்த அளவுக்கு செயல்திறன் பெற முடியவில்லை என உணரலாம்.
நிற்க, வீட்டில் இருந்து பணியாற்றுவதன் பாதகமான அம்சங்களை விவரிப்பதல்ல இந்த பதிவின் நோக்கம். இதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பதை சுட்டிக்காட்டுவதும் அதைவிட முக்கியமாக இதற்கான தீர்வை முன்வைப்பதும் தான் நோக்கம்.
இந்த தீர்வுகளில் ஒன்றாக அமைகிறது, கவுன்சில்.கிளப் (https://www.council.club/ ) இணையதளம்.
பல்வேறு காரணங்களுக்காக வீட்டில் இருந்து பணியாற்றுபவர்கள் மற்றும் ரிமோட் வொர்கிங் எனப்படும் தொலைதூர பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், தங்களுக்கான மெய்நிகர் அலுவலகத்தையும், சகாக்களையும் உருவாக்கி கொள்ள வழி செய்கிறது இந்த தளம்.
அடிப்படையில் இந்த தளத்தை மெய்நிகர் இணை பணியிடம் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் இதை கோ-ஒர்கிங் ஸ்பேஸ் என்கின்றனர். அதாவது தனியே அலுவலகம் அமைத்துக்கொள்வதற்கு பதில், பொதுவாக அலுவலக பரப்பை மற்றவர்களுடன் இணைந்து பகிர்ந்து கொள்வது.
இதே கருத்தாக்கத்தை இணையத்தில் செயல்படுத்திக்கொள்ள வழி செய்கிறது கவுன்சில்.கிளப் இணையதளம்.
தொழில்முனைவோர், பிரிலான்சர் போன்றவர்கள், இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, தனியே பணியாற்றும் சூழலில் இருந்து விடுபடலாம்.
உறுப்பினர்கள் அவ்வப்போது இணையத்தில் சந்தித்து உரையாடுவதை இந்த தளம் சாத்தியமாக்குகிறது. உறுப்பினர்கள் அவர்கள் ஆர்வம், பணிக்கு ஏற்ப சிறு குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். இந்த குழுவில் உள்ளவர்கள் அரை மணி நேரம் பணி செய்து விட்டு அதன் பிறகு, ஒரு பிரேக் எடுத்துக்கொள்ளும் வகையில் சக உறுப்பினர்களுடன் பேசலாம். தாங்களாக பணி செய்துவிட்டு, உரையாடலில் மட்டும் பங்கேற்கவும் செய்யலாம்.
பேசுவதற்கும், கருத்துகளை பரிமாறிக்கொள்வதற்கும் நண்பர்கள் இருப்பது உற்சாகம் அளிக்க தானே செய்யும். அதை தான் இந்த தளம் செய்கிறது. அது மட்டும் அல்ல, தொலைதூர பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான சமூகமாகவும் இந்த தளம் அமைகிறது.
நஜீப் கான் எனும் கனடா இளைஞர் இந்த தளத்தை அமைத்திருக்கிறார். தொலைதூர பணியில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள நஜீப், தான் உணர்ந்த பிரச்சனைக்கு தீர்வாக இந்த தளத்தை உருவாக்கியதாக கூறியுள்ளார்.
தனியே பணியாற்றுவது சோர்வாக இருந்தால், நட்பு சூழலை நாடி வலைப்பின்னல் நிகழ்வுகளில் எல்லாம் பங்கேற்று பின்னர் மெய்நிகர் அலுவலக சூழல் இருந்தால் நல்லது என உணர்ந்து தன்னைப்போன்றவர்களுக்காக இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.
வீட்டில் இருந்து பணியாற்றுவது, அலுவகத்தில் இருந்து பணியாற்றுவதை விட சிறந்ததாக இருக்க வேண்டும் என்று கூறும் நஜீப், இந்த தளம் அதை சாத்தியமாக்கும் என்று நம்புகிறார்.
இந்த தளத்தின் உபசேவையாக, நிறுவனர்கள் மற்றும் பிரிலான்சர்கள், சக உறுப்பினர்களுடன் மெய்நிகராக சேர்ந்து மதிய உணவு சாப்பிடும் வசதியும் இருக்கிறது. இதன் மூலம், நான்கு நண்பர்கள் வரை இணையத்தில் சந்தித்து பேசிக்கொண்டே மதிய உணவு சாப்பிடலாம்.
*
இது நஜீப் கானின் தனி இணையதளம்: https://www.najeebkhan.com/
*
நஜீப் இன்னொரு சுவாரஸ்யமான பணி சார்ந்த சேவையையும் துவக்கியிருக்கிறார். - Patio.to