இப்படி தான் இருக்க வேண்டும் பேராசிரியரின் இணையதளம்
நான் அறிந்திராத ஒரு பேராசிரியர் பற்றி இன்று அறிமுகம் செய்யலாம் என இருக்கிறேன். இதில் முரண் ஏதும் இல்லை: அந்த பேராசிரியரை அவரது இணையதளம் மூலம் கண்டறிந்தேன் என்பதால், அதன் மூலமே அவரை அறிமுகம் செய்ய விருப்பம்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியராக இருந்த ஹென்றி பாட்ரிக் வின்ஸ்டன் தான் அவர்.
பேராசிரியர் வின்ஸ்டனை நான் கண்டறிந்தது தற்செயலானது. பேராசிரியர்களுக்கான இணையதளம் தொடர்பாக எழுதலாம் என்று இணையத்தில் தேடிக்கொண்டிருந்த போது, குவோரா கேள்வி – பதில் தளத்தில், மிகவும் சுவாரஸ்யமான இணைய பக்கம் கொண்ட எம்.ஐ.டி பேராசிரியர் யார் எனும் துணை கேள்விக்கான பதிலில், வின்ஸ்டனின் இணையதளம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. – உண்மையில் எம்.ஐ.டி தளத்தில் அவருக்கான இணைய பக்கம்!.
வின்ஸ்டன் தளத்திற்கு சென்று பார்த்த போது, அசந்து போனேன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், பேராசிரியர் வின்ஸ்டனின் இணையதளம், யார் அவர்? என்பதை முதல் பார்வையிலேயே உணர்த்தும் வகையில் அத்தனை அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
தோற்றம் சார்ந்த அழகு அல்ல, உள்ளடக்கம் முன் வைக்கப்பட்டிருந்த விதத்தால் உண்டான அழகு!
இணைய வடிவமைப்பில் கார்டுகளை அடுக்குவது போன்ற ஒரு உத்தி பின்பற்றப்படுவதுண்டு. அதாவது, அட்டைகள், கட்டமாக கட்டமாக வரிசையாக அடுக்கி வைத்தது போல, இணையதளத்தின் உள்ளடக்கம், தனித்தனி தலைப்புகளின் கீழ் வரிசையாக இடம்பெற்றிருக்கும்.
இதே பாணியில் தான் பேராசிரியர் வின்ஸ்டனின் தளமும் அமைந்திருந்தது.
முதல் கட்டத்தில் பேராசிரியரின் ஆய்வு தொடர்பான அறிமுகம் இடம்பெற்றிருந்தது. அடுத்த கட்டத்தில் அவர் நடத்தும் (த்திய) பாடத்திட்டத்திற்கான அறிமுகம் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது கட்டத்தில் அவரது சிந்தனைகளும், நான்காவது கட்டத்தில் நான் யார்? (Who.i.am) எனும் கேள்விக்கு பதிலாக அவரைப்பற்றி சுருக்கமான சுய சரிதை அறிமுகமும் இடம்பெற்றுள்ளது. அதன் கீழ், அவர் தொடர்பு கொண்டுள்ள நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கும் கீழ், பாடகர் வில்.இ.யம் (Will.i.am) –ன் அவரது சந்திப்பு தொடர்பான விவரம் இடம்பெற்றுள்ளது.
பேராசிரியர் வாங்கிய விருதுகள், அவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவரது வீடியோ பாடம் ஆகிய விவரங்களும் இடம்பெற்றுள்ளன. வழக்கமான கல்வியாளர்கள் தளம் போல, அவரது அருமை பெருமைகள், சாதனைகள் ஆகிய விவரங்கள் அலுப்பூட்டும் வகையில் முன்னிறுத்தப்படாமல், பேராசிரியரின் ஆளுமையை உணர்த்தும் வகையில் இந்த தகவல்கள் அமைந்திருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.
கொஞ்சம் மேலோட்டமாக தகவல்களை படிக்கும் போதே, பேராசிரியர் செயற்கை நுண்ணறிவு ஆய்வில் வல்லுனர் என்பதையும், அது தொடர்பான ஆர்வத்தை மாணவர்கள் மனதில் விதைக்கும் வகையில் தன் வகுப்புகளை கையாண்டவர் என்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது.
செயற்கை நுண்ணறிவு ஆய்வு பாடத்திற்கான நோக்கத்தை, சுஜாதா சொல்வது போல ஜல்லியடி வார்த்தைகள் எல்லாம் இல்லாமல், எவரையும் ஈர்க்கும் வகையில் கச்சிதமாக விவரித்திருக்கிறார். கோப்பர்னிகஸ் சூரிய மண்டலம் தொடர்பான அறிவை தந்தார், டார்வின் பரிணாம கோட்பாட்டைத்தந்தார், ஜேம்ஸ் வாட்ஸன், டிஎன்.ஏ ரகசியத்தை புரிய வைத்தார் என்று விவரித்தபடி, நானும் எனது மாணவர்களும், மனித அறிவு எப்படி செயல்படுகிறது என்பதை நுனி முதல் அடி வரை கண்டறிய முற்படுகிறோம் என தெரிவிக்கிறார்.
ஆர்வமே இதில் ஈடுபட காரணம் என்பவர், ஒரு உயிரினமாக மனித இனம் மற்ற உயிரினங்களில் இருந்து எப்படி வேறுபட்டது என்பதை கண்டறிய முற்படுவதாகவும் கூறுபவர், ஆயிரம் ஆண்டுகள் கழித்து, நம்முடைய அறிவு தொடர்பாக முதன் முதலில் தெரிந்து கொண்ட உயிரினம் என பேசப்படும் என நம்பிக்கையோடு முடிக்கிறார்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வில் பேராசிரியருக்கு இருந்த ஈடுபாட்டை இதன் மூலம் எளிதாக அறியலாம்.
பேராசிரியர் பேசம் மற்ற விஷயங்கள் தொழில்நுட்பம் சார்ந்தவை என்றாலும், பாப் பாடகர் வில்.இ.யம் எம்.ஐ.டி விஜயம் செய்த போது அவரை சந்தித்த அனுபவம் பற்றி அவர் விவரித்துள்ள விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதோடு அவர் எந்த அளவுக்கு மகுடம் தரிக்காமல் தரையில் நடந்த பேராசிரியராக இருந்திருக்கிறார் என்பதையும், தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட ஒரு பிரபல பாடகரை அவர் எப்படி தன் தோழனாக பாவித்திருக்கிறார் என்பதையும் புரிய வைக்கிறது.
இதே போல, பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரியில் சேர்வதற்காக முதல் முறையாக எம்.ஐ.டி பல்கலைக்கு வந்த அனுபவத்தை அவர் விவரித்துள்ள விதமும் காவிய ரகம்.
இயற்கை எழில் சூழ அமைந்திருந்த அந்த வளாகம் ஆரம்ப் மிரட்சியை அளித்தாலும், நியூட்டன், கோபர்னிக்ஸ் ஆகியோர் பெயர்கள் அடங்கிய கட்டிடங்கள் கொண்ட வளாகத்தில், மின்சார கண்ணை கடந்ததும் தானாக திறந்து கொண்ட ஒரு கட்டிடத்தில் நுழைந்த போது, இந்த இடம் தான் சொர்கம் என தீர்மானித்து , எம்.ஐ.டியே கதி என கிடக்கத்துவங்கியது பற்றியும் அவர் விவரிக்கிறார்.
அந்த மின்சார கண் இப்போது காலாவதியாகிவிட்டாலும் வருங்கால மாணவர் யாரேனும் அதை லேசர் கதிர்களால் இயக்கச்செய்வார் என்றும் நம்பிக்கை கொள்கிறார்.
செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்காகவே வாழ்க்கையை கழித்த பேராசிரியர் வின்ஸ்டன், தன்னை சங்கடப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு பற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றையும் குறிப்பிடுகிறார்.
20 ஆண்டுகளில் எந்திரங்கள் மனிதர்கள் போல சிந்திக்கத்துவங்கும் என்று 50 ஆண்டுகளாக உங்களைப்போன்றவர்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனரே என்பது தான் கேள்வி.
எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் என்றாவது ஒரு நாள் இதை அடைவோம் என்று சுருக்கமாக பதில் அளித்துவிட்டு, இயந்திர கற்றல், ஆழ் கற்றல் பற்றி எல்லாம் விளக்கிவிட்டு, என்றாவது ஒரு நாள் நிச்சயம் இதை அடைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என முடிக்கிறார்.
ஒரு பேராசிரியரின் இணையதளம் இப்படி தான் இருக்க வேண்டும் என உணர வைக்கும் பேராசிரியர் வின்ஸ்டனின் இணையதளம்: http://people.csail.mit.edu/phw/
--