வாழ்க்கை வரலாறுகளுக்கான இணைய அகராதி
இணையத்தில், வாழ்க்கை வரலாறு தொடர்பான தகவல்களை தேடிப்பார்த்தால் பயோகிராபி.காம் தளத்தை அறிமுகம் செய்து கொள்ளாமல் இருக்க முடியாது. ஆனால், கூகுள் முன்னிறுத்தும் பயோகிராபி.காம் தளத்தை கடந்தும் குறிப்பிடத்தக்க வாழ்க்கை வரலாறு இணையதளங்கள் இருப்பதை பலரும் அறிவதில்லை. இவற்றில் ஒன்றான எஸ்9.காம் ( https://www.s9.com/) இணையதளம் பற்றி பார்க்கலாம்.
வாழ்க்கை வரலாறுகளுக்கான அகராதி என வர்ணித்துக்கொள்ளும் இந்த தளம், விக்கிபீடியா பாணியில் செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இதில் உள்ள வாழ்க்கை வரலாறு கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் திருத்தலாம், விரும்பினால் புதிய வாழ்க்கை வரலாறு கட்டுரையை உருவாக்கலாம்.
மற்றபடி ஆர்வம் உள்ளவர்கள் இதில் உள்ள வாழ்க்கை வரலாற்று கட்டுரைகளை படித்துப்பார்க்கலாம். வாசகர்களுக்கு உதவும் வகையில் முகப்பு பக்கத்திலேயே அண்மை வாழ்க்கை வரலாறுகள் மற்றும் இன்று பிறந்த நாள் காண்பவர்களின் வாழ்க்கை வரலாறுகள் என தனித்தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.
இதற்கு கீழே, செய்திகளில் அடிபடுபவர்களின் வாழ்க்கை வரலாறு பட்டியலிடப்படுவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாறுகளும் முன்னிறுத்தப்படுகின்றன.
இவைத்தவிர, தனியே வாழ்க்கை வரலாறுகளை தேடிப்பார்க்கலாம். மிக நீளமான பட்டியலில் ஒவ்வொரு துறையாக தேடிப்பார்க்கலாம். வாழ்க்கை வரலாறு தொடர்பான வாசகர்களுக்கான வினாடி வினா பகுதியும் இருக்கிறது.
இந்த வாழ்க்கை வரலாறு அகராதி முழுமையான தன்மையை கொண்டிருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும், இதன் பரந்து விரிந்த தன்மை சுவாரஸ்யமானது. அதே போல, இதில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்தும் யோசிக்க வேண்டும்.